Thursday, October 13, 2011

அணு உலை ஆபத்தானது


ஒரு தாய் கர்ப்பமாக இருக்கிறாள். நோய்வாய்ப்பட்டுள்ள இந்தத் தாய் கர்ப்பமாக இருப்பது பன்னிரெண்டாவது முறை.  இதற்கு முன் பிறந்த 11 குழந்தைகளும் ஏதாவது ஒரு குறையோடே பிறந்திருக்கின்றன... இருந்திருக்கின்றன.... இறந்திருக்கின்றன.  இருந்தும் பன்னிரெண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறாள்.  வாசிப்போரே... இந்தத் தாயின் கருவை அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றிவிடுவோமா? இல்லை... இன்னும் ஒரு மாதம் கழித்து பிரசவிக்க விட்டு விடுவோமா?

கருவை அழிக்க வேண்டாம்.  ஆண்டவன் கொடுத்தது, அப்படியே விட்டுவிடுவோம், குழந்தை குறையாக பிறந்தாளும் பராவயில்லை என்று சொல்வோர் தான் பலர்.   குறையாக பிறந்த குழந்தை மாற்றுத் திறனாளியாகிவிடலாம்.  இசை மேதையாகிவிடலாம்.  ஆனால், அணு உலை... சுற்றியுள்ள மனித இனத்தையே குறைவாக்கிவிடுமே! கூடங்குளம் அணு உலை ஒன்பதாவது மாதத்தில் உள்ளது.  இப்போது போய் இதை தடுப்பது என்ன நியாயம் எனச் சிலர் வாதிடுகின்றனர்.  பி(தி)றப்பது குழந்தையல்ல! ஆபத்து. செலவு செய்துவிட்டோம் என்பதற்காக சுமையை சுமக்கலாம், கொடிய விஷத்தை குடிக்கவா முடியும்.

கூடங்குளம் அணு உலை திறப்பதை எதிர்த்து சுற்றியுள்ள சுற்றுச் சூழல் ஆர்வம் மிகுந்த கிராம மக்கள் உண்ணா விரதத்தில் இருந்தனர்.  பதினொரு நாள் நீடித்த உண்ணாவிரதம் பன்னிரெண்டாவது நாள் முதலமைச்சரின் உறுதியளிப்பை ஏற்று நிறைவு பெற்றது. வடக்கே ஒரு மனிதன் ஊழலுக்கு எதிராக இருந்த உண்ணா விரதத்திற்கு இருந்த ஆதரவு, தெற்கே கடல்கோடி கிராமத்தில் நடைபெற்ற சுற்றுச் சூழலுக்கான உண்ணா விரதத்திற்கு (அதுவும் 100க்கும் மேற்பட்டோர்) பெரிய ஆதரவு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.  அன்னாவின் மேடைக்கு படையெடுத்த அமைச்சர்களும், மெழுகாய் உருகிய நடுத்தர வர்க்கமும் இப்பிரச்னையை கவனிக்காமை வருத்தத்திற்குரியதே.

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் உள்ள அணுமின் நிலையம் ராஜிவ்காந்தி பிரதமராக இருந்த காலத்தில் ரஷ்யாவோடு இணைந்து திட்டமிடப்பட்ட திட்டம்.  சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் அனுப்பப்பட்ட யானை வந்து சேர்ந்து வாலை துாக்கி ஆட்ட தயாராகிவிட்டது. யானைக்கு மதம் பிடித்தால் பேராபத்து என மதம்பிடித்ததை பார்த்தவர்கள் பதைக்கிறார்கள்.  இல்லை, இல்லை யானையை அடக்குவதற்கான அங்குசம் எங்களிடம் இருக்கிறது, நீங்கள் பயப்பட வேண்டாம். அய்யா மதம்பிடித்த யானை ஏன்?  வள்ளுவன் சொன்னது போல கனியிருக்க காய் எதற்கு? மின்சாரம் அனல், புனல், காற்றாலை, சூரிய ஒளி, அணு ஆகிய வழிகளில் தயாரிக்கப்படுகிறது.
இயற்கையோடு இயைந்து இருக்கிறவை காற்றாலை, சூரிய ஒளி, நீர் மின்சாரம். அனலும் அணுவும் ஆபத்தானவை தான்.  அணு உலை மூலம் மின்சார உற்பத்தி செய்வதில் நடைமுறைச் செலவு குறைவாம்.  எனவே, இந்தவகையான மின் உற்பத்தி செய்ய ஆளும் அமைப்பு இசைவு தெரிவிக்கிறது.  ஈட்டல் மட்டுமல்ல காத்தலும் அரசின் கடமைதான்.   அணு உலை உயிருக்கு உலை வைக்கின்ற ஒன்று என்பது நாடறிந்தது. 

அணு உலையிலிருந்து வெளியேற்றப்படும் கனநீல் கடலில் தான் விடப்படும்.  அதனால் அப்பகுதியில் உள்ள மீன் வளம் பாதிக்கப்படும்.  இந்த பாதிப்பு அந்தப் பகுதியில் உள்ள மீனவர்களை மட்டும் பாதிக்காது, அவர்களோடு சேர்ந்து மீனை ருசிசத்து உண்ணக்கூடிய நம்மைப் போன்றவர்களும் பாதிக்கப்படுவர்.  இது தொழில் சார்ந்த பாதிப்பு என்று மட்டும் சொல்லி ஒதுங்கிவிட முடியாது.  கடல் வளம் பாதிக்கப்படும்போது சூழலும் கெடும் என்பதை நாம் அறிந்திட வேண்டும்.

அணு உலை அமைந்துள்ள பகுதியிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவில் நுண்ம பாதுகாப்பு பகுதி என்பதால் அங்கு தொழிற்சாலைகளுக்கு அனுமதி இல்லை.  அதிலும்  அணு உலை அமைந்திருக்கும் பாறைகளுக்குப் பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில் கல் குவாரிகளுக்கு முற்றிலும் அனுமதி இல்லை.  இந்நிலையில் தற்போது அணு உலையிலிருந்து முன்றரை கிலோமிட்டர் துாரத்தில் கருங்கல் குவாரி செயல்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  இதன் காரணமாக அணு உலையின் அடித்தளத்தில் விரிசல்கள் ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.  ஆபத்து தலைக்கு மேலேயே தொங்கிக் கொண்டிருக்கிறது.

அணு உலை ஆபத்தானது என்று பஞ்சாங்கம் பார்த்துச் சொல்லவில்லை.  ஆண்டு வாரியாக ஆபத்து நடந்துள்ளதை ஒப்பிவித்துதான் சொல்லப்படுகிறது.  1986ல் சோவியத்தில் தொடங்கி சமீபத்தில் ஜப்பான் வரை நிகழ்ந்த கோர நிலைகளிலிருந்து எதிர்க்கப்படுகிறது.  உலகில் 450க்கும் மேற்பட்ட அணு மின் நிலையங்கள் செயல்படுகின்றன.  ஜப்பானில் சுனாமியயால் நேர்ந்த சோகத்திற்கு பிறகு அணு உலைகள் குறித்த அச்சம் உலகளவில் அதிகரித்துள்ளது.  வளர்ந்த வல்லரசுகளும் தம் மக்களைக் காக்க 2020ஆம் ஆண்டுக்குள் அணுமின் நிலையங்களின் உலையை மூடுவதற்கு முடிவு செய்துவிட்டன. 

அணு உலை உள்ள இடத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவுக்கு அதன் கதிர்வீச்சு இருக்கும்.  அணுமின் நிலையத்திற்கு அருகில் உள்ள மக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகும் அபாயம் உள்ளது.  ஜப்பான் கடற்பகுதியில் ஏற்பட்டது போல், நமது நாட்டில் அந்த அளவுக்கு கடுமையான நிலநடுக்கம் ஏற்படாது, எனவே நாம் அச்சப்பட வேண்டாம் என்று அரசும் அறிஞர்களும் கூறுகின்றனர்.  நமது ஊரில் நடந்த ஆழிப்பேரலையையும் ஆயிரக்கணக்கனோர் மாண்டதையும் அவ்வளவு சுலபத்தில் நாம் மறந்து விட்டு பேசக் கூடாது.  கூடங்குளம் அணு மின் நிலையம் பாதிப்பிக்குள்ளாகும் போது அது ஏற்படுத்தும் பாதிப்பு நாகர்கோவில் நகரம் வரை எட்டும்.  இப்பகுதியில் வாழும் சுமார் மூன்று இலட்சம் மக்களும் பாதிப்படைவார்கள் என்பதை நாம் உணர்வோடு கருத்தில் கொள்ள வேண்டும்.

கூடங்குளம் அணு மின்நிலையம் உயரம் மற்ற (ஜப்பான்) அணுமின் நிலையங்களைவிட அதிகம்.  இது இத்தணை உயரம், அது அத்தனை உயரம் என அரசாங்கம் அளப்பதை விடுத்து, மக்களின் வாழ்நாளை அளக்க வேண்டும்.  ஆரம்ப நிலையிலேயே மேற்கு வங்க மாநில முதல்வர் இது போன்ற திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்க மறுத்துள்ளார்.  நமது மாநில அரசும் சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.  இத்திட்டத்தை நிறைவேற்ற மாநில அரசுதான் நிலம் சாலை போன்ற வசதிகளையெல்லாம் செய்து கொடுத்தது.  பராவாயில்லை.  ஆனால், வரலாறையும் ஜப்பானையும் மனதில் கொண்டு, நிலைமையை உணர்ந்து எல்லோரும் ஒரு அணியில் இருந்து நல்வழி தேட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

நாம் நினைப்பதெல்லாம் பல ஆயிரம் கோடி செலவு செய்தாகிவிட்டதே! ஒரு தேர்தல் நடத்துவதற்கும் பல ஆயிரம் கோடி ரூபாயை செலவு செய்கிறோம்.  அய்ந்து ஆண்டுகள் முடிவதற்குள் இடையிலேயே ஆட்சியை களைத்து திரும்பவும் தேர்தல் நடத்துகிறோம்.  கேட்டால் ஜனநாயம் என்கிறோம்.  இதற்காக ஒரு போதும் ஆள்பவர்களும் வருந்தியதில்லை.  நாங்களும் வீதிக்கு வந்து அழுததில்லை.  ஆனால்...

தெரிந்து கொண்டே தீமையில் தள்ளுவதை ஒரு போதும் பொறுத்துக்கொள்ள முடியாது.  மின்சாரத்தின் உற்பத்திக் கேற்ற பயன்பாட்டை முறைப்படுத்துவதில் அரசு கவனம் செலுத்தலாம்.  மக்கள் முதலில் வாழ்வது முக்கியம்.  பின்புதான் குளிர்சாதன அறைகளில் வாழ்வது அவசியம்.  அணு உலைகளைத் தவிர்த்து மின்சாரம் தயாரிக்க நீர் மின் நிலையம், காற்றாலைகள், என்றென்றும் கிடைக்கும் சூரிய சக்தி கொண்டு பெருமளவு மின்சாரம் தயாரிக்க அரச அதிக அக்கறை செலுத்தலாம்.  மக்களின் மீது அக்கறை கொண்ட அரசு அணு உலைகளைத் தவிர்த்து அச்சுறுத்தலைப் போக்கும்... காத்திருப்போம்....


Wednesday, September 21, 2011

நம்பிக்கைகளை பரிசீலிப்போம்



னித வாழ்க்கை நம்பிக்கையின்  அடிப்படையில் தான் இயங்குகிறது.  இன்று உறங்கி நாளை எழுவோம் என்ற நம்பிக்கைதான் நாளை குறித்தும் அடுத்தடுத்த நாட்கள், சந்ததி குறித்தும் நமது எதிர்பார்ப்பை வலுவாக்குகிறது.  நம்பிக்கையினால் இயங்கும் வாழ்வில் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நிறைய நம்பிக்கைகள் உள்ளமெங்கம் விரவிக்கிடக்கின்றன.  இந்த நம்பிக்கைகளை நாம் நமக்கு தகுந்தாற்போல் பலவாறு கூறுகிறோம். அவை நம்பிக்கை, அதீத நம்பிக்கை, அவநம்பிக்கை, குருட்டு நம்பிக்கை, மூட நம்பிக்கை இப்படி...  இது அவருடைய அதீத நம்பிக்கை என்று நாம் சொல்வோம்.  ஆனால், அவருக்கு அது சரியான நம்பிக்கையாக இருக்கும்.  ஒருவர் நம்பிக்கை என்று கருதிச் செய்யும் செயல் பிறருக்கு மூட நம்பிக்கையாகத் தெரியும்.  இந்த நம்பிக்கைகள் தனிநபரைப் பொறுத்தும், சார்ந்த சமூக சூழலைப் பொறுத்தும் அங்கங்கே வேறுபடுகிறது. 

தொன்று தொட்டு சில நம்பிக்கைகளை கடைப்பிடித்து வருகிறோம்.  அவற்றின் ஆழம் தெரிந்து பரிசீலிப்பது சரியாக இருக்கும். உதாரணத்திற்கு சங்கிலி, வீட்டுக் கதவினை குழந்தைகள் வீணாக ஆட்டிக் கொண்டிருந்தால், பெரியவர்கள் வீட்டுக்கு ஆகாது என்பார்கள்.  இதனை ஆராய்ந்து பார்க்கும் போது கதவு எழுப்புகின்ற ஒலி, சங்கிலி எழுப்புகின்ற ஒலி நமது காதை பதம் பார்க்கும். இது போன்ற ஒலி மாசுபாட்டினை தடுப்பதற்காக முன்னோர்கள் சொன்னதாக இருக்கலாம்.  சாப்பிடும் போது இழையின் நுனிப்பகுதி இடது கைப் பக்கம் இருக்குமாறு பார்த்துக்கொள்வார்கள்.  இடது பக்கமாக இழை இருக்கும் போது இழையின் நடு நரம்புப் பகுதியின் கீழ் பகுதி சற்று கடினமாகவும், மேல் பகுதி சற்றே மெல்லியதாகவும் இருக்கும். மேல்பகுதியில் காய், கூட்டு போன்றவை வைத்துக்கொள்ளவும், கீழ் பகுதியில் உணவு வைத்துக்கொள்ளவும் வசதியாக இருக்கவே இதனைச் செய்கின்றனர்.  அவ்வாறு செய்கிற போது சற்றே கடினமான கீழ்பகுதி கிழிந்து விடாமல் இருக்கும். அவ்வளவு தான் இதன் சூட்சமம்.

நமது நம்பிக்கைகளில் சில இப்படி இருக்க, சில சூழலைப் பாதிப்பவையாகவும் இருக்கின்றன. பொதுவாக பூசனிக்காயை சாம்பருக்கு பயன்படுத்துவார்கள். இந்த சாம்பார் பூசனிக்காய் சாம்பாரில் இருக்கும் போது நாம் உண்டு உயிர் காக்கிறது.  இதே பூசனிக்காய் திருஷ்டி பூசனிக்காயக மாறும் போது விளைவு உயிரைக் கூட பறிக்கிறது.  திருஷ்டி பூசனிக்காயை முச்சந்தியில் உடைக்க வேண்டும் என்று நம்மவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.  பலர் பயன்படுத்துகிற பாதையில் இது போன்று உடைப்பதால் விபத்து ஏற்படுகிறது.  இந்த பூசனிக்காய் மேல் ஏறுகிற இரண்டு சக்கர வாகனங்கள் பரிதாபத்திற்கும் விபத்திற்கும் உள்ளாகின்றன.  உங்களது திருஷடியை கழிக்க மற்றவரை நோக வைக்கின்ற செயல் எந்தவிதத்தில் நல்ல நம்பிக்கையாக அமையும். 

காலம் காலமாக கோழி குஞ்சுபொறிப்பதற்கு ஒரு தட்டில் மணல் வைத்து அதன் முட்டைகளை வைத்து அடைகாக்க வைக்கின்றனர். குஞ்சு பொறிக்கின்ற போது முட்டையின் ஓடுகள் உடைந்து மணல் மீது கிடக்கும். கோழி அடையிலிருந்து வெளிவந்தபின் அந்த மணலையும் உடைந்து கிடந்த முட்டை ஓடுகளையும் பலர் நடந்து செல்கிற பாதையில்தான் போடுகின்றனர்.  இதில் நம்மவர்களின் நம்பிக்கை மணலும் உடைந்த ஓடும் எந்தளவிற்கு மிதிபடுகிறதோ அந்த அளவிற்கு கோழிக் குஞ்சுகள் பல்கிப் பெருகும் என நம்புகின்றனர். குஞ்சுகள் பல்கிப் பெருகுவதற்கு கோழியும், அதன் உரிமையாளரும் அக்கறையோடு கவனித்தால் தான் பல்கிப் பெருகும். அதை விடுத்து மக்கள் நடக்கின்ற பாதையில் போடுகின்ற செயல் பயனைத்தராது.  அது பண்பான செயலும் அல்ல. இதில் இன்னொன்றும் கோழி அடைகாத்து குஞ்சாக்காதா முட்டைகளை கூமுட்டைகள் என்பர். இந்த கூமுட்டைகளை உண்ணுகிற பழக்கம் சில இடங்களில் இருக்கிறது.  ஆனால், இதனை பெண் குழந்தைகளுக்கு மட்டுமே தருவர். ஏன் என்றால், ஆண்கள் சபை ஏறி பேசுபவர்களாம், அவர்கள் இந்த முட்டைய தின்றால் சபையில் நின்று பேசக்கூடிய அறிவு வளராது என்ற நம்பிக்கையை விதைத்துள்ளனர். (பெண்ணடிமைக்கு இந்த நம்பிக்கைகள் தண்ணீர் ஊற்றுகின்றன)  நாள்பட்ட முட்டையை யார் தின்றாலும் நல்லதல்ல என்பதை உணர்த்தித்தானே ஆகவேண்டும்.

நகரங்களில் கடைவைத்து வியாபாரம் செய்பவர்கள் இரவு கடையை அடைத்த பின் கடைக்கு வெளியே சூடம் ஏற்றுகின்றேன் என்ற பெயரில் ஒரு ஒலைப்பெட்டியில் எதையெதையோ போட்டு தீ வைக்கின்றனர்.  அட எந்த நம்பிக்கையோ இது பூமிப்பந்துக்கு நல்லதல்ல.  நகரங்கள் பல்வேறு வகையில் மாசுபட்டு வருகிற சூழலில் இப்படி வேறு செய்வது வியாபாரிகளுக்கு அழகல்ல.  சில கடைகள் இன்னும் ஒரு படி மேலே போய் எண்ணெய் சார்ந்த டப்பாக்களில் தீ வைப்பதும், டயரில் தீ வைப்பதும் மன்னிக்க முடியாதவை. இன்று திருஷ்டி போக சூடம் கொளுத்துவது என்பது தவிர்க்க முடியாது ஒன்றாகிவிட்டது.  பூமிக்கு காய்ச்சல் வந்து, பாடாய்ப் படுகிற சூழலில்.... பூமியின் காய்ச்சலை தணிக்க நாம் முற்படுவதை விடுத்து மீண்டும் மீண்டும் பாழ்படுத்துவது வாழுகின்ற நமக்கு சரியாகது. 

கோவில்களில் தேங்காய் உடைப்பதற்கு தனியாக இடம் கொடுத்திருந்தாலும் கோவில் வீதிகளிலும், படிகளிலும் தேங்காய் உடைக்கவே விரும்புகிறோம். தேங்காயின் சிரட்டை யார் காலிலாவது குத்தினால்... நாம் யோசிப்பதே இல்லை.  கோவில் வீதிகளிலும் படிகளிலும் காலணி அணிந்து செல்வதில்லை.  இன்று பாதிக்கு மேல் இனிப்பு மனிதர்களாகத்தான் இருக்கிறார்கள். தேங்காய் சிரட்டைகளை கவனிக்காமல் அவர்கள் மிதித்துவிட்டால், அதைவிட பெரிய தண்டனை அவர்களுக்கு வேறு எதுவும் இருக்க முடியாது. 

நகத்தை கடித்தால் தரித்திரம் வரும் என்ற ஒரு நம்பிக்கை உண்டு.  இது நாம் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்று.  நக இடுக்களில் உள்ள அசுத்தம் உடலுக்குச் சென்றால் நோய் வரும்.  நோய் வந்தால் தரித்திரம் தானே... இதே போல் இரவு வேளைகளில் நகத்தை வெட்டக் கூடாது என்பார்கள்.  வெட்டிய நகம் ஆங்காங்கே விழுந்துவிடும் என்பதற்காக....

சூழலுக்கு பாதிப்பை விளைவிக்கின்ற நம்பிக்கைகளை சட்டம் போட்டு மட்டும் தடுத்துவிட முடியாது.  நாம் ஆழமாக சிந்தித்து, நமது மனங்களில் ஏற்படும் மாற்றமே நல்ல விளைவைத் தரும்.  யோசிப்போம்...
பசுமைத்தாயகம் சுற்றுச் சூழல் செப்டம்பர் 2011 இதழில் வெளிவந்த கட்டுரை

Wednesday, June 15, 2011

அணை பலமாகத்தான் இருக்கும்...


பிறந்த நாள் கொண்டாட்டம் என்றால் இன்றைக்கு சினிமாவை சார்ந்தவர்களுக்கு என்றாகிவிட்ட நிலையில்... சனவரி 15ம் தேதி மதுரையிலிருந்து குமுளி வரைக்கும் வண்ணச் சுவரொட்டியில் ஒருவருக்கு 170வது பிறந்த நாள் வாழ்த்து செய்தி. அத்தோடு அவரது பிறந்த நாள் விழாவில் பொங்கல் வைத்தல், பிள்ளைகளுக்கு பெயர் சூட்டுதல், விளையாட்டுப் போட்டிகள் நடத்துதல் என விமர்சையாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
170வது பிறந்தநாள் என்பதால் சினிமாவை சார்ந்தவர்களாக இருப்பதற்கு சாத்தியமில்லை.... விடுதலைப் போராட்ட வீரர்... இல்லைவாழ்த்துச் சொன்னவர்கள் உழவர்கள்.  அப்ப யாருக்கு... ஆம்... உங்கள் யூகம் சரியாக இருந்தால் அந்த அயல்நாட்டு மாமனிதர் பொறிஞர் கர்னல் ஜெ. பென்னிகுக்குத்தான்.  இந்தப் பெயர் மதுரை மண்வாசத்துடன் இணைந்து விட்ட பெயராகிவிட்டது. திருமண அழைப்பிதழ்களில் கூட மாயன், விருமாண்டி, கருப்பணணனோடு பென்னிகுக் ம் லோகன்துரையும் இடம் பெற்றிருக்கும். ஆங்கிலேயர்கள் விட்டுச் சென்ற குழாய் டவுசர் இல்லை இந்தப் பெயர்கள். எடுத்த பணியை தொடுத்து முடித்தவரின் பெயர் கர்னல். பென்னிகுக்.  அவருக்கு துணையாக இருந்தவர் லோகன் துரை.

கேரள மாநிலம்பண்டைய வேந்தன் சேரனின் பகுதி என்று சொன்னால் தப்பேதும் இல்லை. இன்று நமது பக்கத்து மாநிலம். நீண்ட மேற்கு தொடர்ச்சி மலையைக் கிழக்கு எல்லையாகவும், அரபிக் கடலை மேற்கு எல்லையாகவும் கொண்டு, நீண்ட வால் போன்ற சமவெளிபரப்பையும், மலைச்சரிவையும் கொண்ட பகுதி. தென்மேற்கு பருவமழை அதிகம் பெறும் பகுதி. மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகிற 44 நதிகள் குறுகிய பகுதிகளிலே பாசனம் செய்யப்பட்டு மிகுதியான தண்ணீர் அரபிக்கடலில் கலந்து வீணாகிறது.

மேற்குதொடர்சி மலையின் கீழ்புறம் அமைந்துள்ள தமிழ்நாட்டின் பழைய மதுரை மாவட்டம் இராமநாதபுர மாவட்டங்களில் போதிய மழையில்லை. பஞ்சம் பட்டினி. ஊர்களை விட்டு இடம் பெயர்தல்.  இத்தோடு குற்றச் செயல்களில் ஈடுபடுவது வேறு.  பஞ்சம் பட்டினியையும் குற்றச் செயல்களையும் குறைக்க அன்றைய ஆங்கிலேய அரசு மேற்கு நோக்கிப் பாய்கின்ற நதியில் அணை அமைத்து மலையைக் குடைந்து தண்ணீர் தந்தது. இந்த மாபெரும் பணியில் தன்னை அர்ப்பனித்தவரில் ஒருவர்தான் கர்னல் பென்னிகுக்.

பொறியியல் அற்புதம் என்று வர்ணிக்கப்படுகிற பெரியாறு அணை 2200 அடி உயரத்தில் பெரியாறு எனும் காட்டாறை தடுத்து கட்டப்பட்ட தடுப்பணை எட்டு (1887-1895) ஆண்டுகளில் முடிக்கப்பட்ட வரலாற்று சாதனை.  அணைக்கான இடத்தைப் பகிர்வு செய்ததிலும், தொழில்நுட்ப வடிவமைப்பை உருவாக்கியதிலும் மேஜர் வைரஸ எனும் பொறியாளரின் பங்கு முக்கியமானது. இந்த திட்டத்தை செயல்படுத்தியவர் கர்னல் பென்னிகுக்.

லட்சியம் புனிதமானது. பணி அதைவிடக் கடுமையானது.  அடந்த காடு. சாலை வசதி இல்லை. வாகன வசதி இல்லை. கொடிய வன விலங்குகள், விசப்பூச்சிகள், கொசுக்கள்... இப்படி எண்ணில் அடங்கா தடைகள்... போதக்குறைக்கு பெரும் மழை வேறு.  பணியில் ஈடுபட்டவர்கள் ஆயிரக்கணக்கில் இறந்தனர். அணைகட்டும் புனிதப் பணியில் ஈடுபட்டு மாண்டு போன பலரின் பெயர் வரலாற்றுத் தடங்களில் இல்லை.  ஆனைவிரட்டி ஆங்கத்தேவன், காடுவெட்டி கருப்பத்தேவன் போன்ற பெயர்கள் மட்டுமே நினைவில்...

ஆங்கிலேயப் பொறியாளர்களும் தங்களது உயிரைத் தந்துள்ளனர்.  ஆண், பெண், குழந்தை, அயல்நாட்டுக்காரர் என பலரின் ரத்தம் வாங்கப்பட்ட பெரியாறு அணை அவ்வளவு சுலபமாக சாய்ந்துவிடாது.  ஆறு குறுகலாகச் செல்லும் மலை இடுக்குப் பகுதியில், பெரும் நிலப்பாறையை அடித்தளமாகக் கொண்டு, இயற்கையான இரண்டு பாறைக் குன்றுகளை இணைத்து, தெற்கு, வடக்காக 1200 அடி நீளத்தில் கட்டப்பட்டுள்ளது அணை.  இதற்கு முன் 240 அடி நீளத்தில் பேபி டேம் எனும் குட்டி அணையும் கட்டப்பட்டுள்ளது.  அணையின் தரைமட்டத்திலிருந்து அணையின் மேல்மட்ட உயரம் 162 அடியாகும்.  அணையின் அடிப்பாக அகலம் சுமார் 200 அடியாகும்.  152 அடிவரை நீரைத் தேக்குவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.  அணையின் இருபுற கட்டுமானச் சுவர்கள் சோதனை செய்து தேர்வு செய்யப்பட்ட கடினக் கற்களால், அரைத்த சுண்ணாம்புக் காரைக் கொண்டு கட்டப்பட்டது.  கட்டுமானத்தின் உட்பகுதி கருங்கல் மற்றும் சுட்ட செங்கல், ஜல்லி கலந்த சுண்ணாம்புக் காரையால் நிரப்பப்பட்டுள்ளது.  இயற்கை பாறைக் குன்றுகளுடன் இணைத்து கட்டப்பட்டுள்ளதால் அணையின் பலம் அதிகம் என்றே வல்லுநர்கள் கருதுகின்றனர்.

வல்லுநர்களும் உழவர்களும் வரிந்துகட்டி கட்டிய அணை ஒரு “தடுப்பணை“.  மற்ற அணைகளைப் போல் நீரை விநியோகிக்கும் மதகு அமைப்பு கிடையாது.  அணையின் நீர்த்தேக்கம் 104 அடி உயரத்திற்கு வந்த பின்பு, நீர் தமிழ்நாடு நோக்கிப் பாயும் வகையில் தேக்கத்தின் வடபகுதியிலிருந்து வெட்டப்பட்ட வெட்டுக்கால்வாய் மற்றும் அதன் தொடர்ச்சியாக மலையைக் குடைந்து அமைக்கப்பட்ட சுரங்கக் கால்வாய் வழியாக கீழிறங்கி மலை அடிவாரத்தில்  தமிழ்நாட்டில் உள்ள வைரவனாற்றில் சேர்ந்து, அதன் பின் வைகை ஆற்றில் கலந்து பாசனத்திற்கு பயன்படுகிறது.  தமிழ்நாட்டில் சுமார் 1,32,000 ஏக்கர் பாசன வசதி பெறும் அளவிற்கு அரிய பணிகளை செய்திட்ட பொறியாளர்களை வணங்குதல் தான் சனவரி 15ம் தேதி பல்வேறு கிராமங்களில் நடைபெற்றது.

பொறியாளர் பென்னிகுக் அவ்வளவு எளிதாக இந்தப் பணியினை செய்திடவில்லை. முதலில் அணை கட்டி முடிக்கப்பட்டது.  ஆனால்  எதிர்பா£ராத வெள்ளப் பெருக்கால், சில நாட்களிலேயே அணை உடைந்து போனது. குற்றவாளி என அரசாங்கத்தால் தீர்மானிக்கப்பட்டு கடும் விசாரணைக்கு ஆளானார்.  தேர்ந்த ஆய்வுக்குப் பின் தடுப்பணைகள் கட்டப்படாததால்தான் உடைப்பு ஏற்பட்டது என நிருபித்து அதற்கான நிதியை அரசாங்கத்திடம் கோரினால்.  அரசாங்கம் எள்ளி நகையாடியது. வீண் முயற்சி என கண்டிக்கவும் செய்தது. இந்த அணை உருவாக வேண்டி தங்கள் உடல் பொருள் ஆவி என அத்தனையையும் இழந்த சாமானியர்களை பார்த்து மனம் கசிந்தார். இங்கிலாந்தில் தனக்கிருந்த சொத்துகளையெல்லாம் (கட்டிலைக் கூட) விற்று பணம் திரட்டிக் கொண்டு வந்து அணையை மீண்டும் உருவாக்கினார்.  பழைய மதுரை மாவட்டமே பாசன வசதி பெற்றது. இன்று குடிநீர்(உயிர் நீர்) இந்த அணையாலேயே பூர்த்தி செய்யப்படுகிறது. 

பலதரப்பட்டடோரை ஒருங்கிணைத்து இப்பாருக்கு முன்னுதாரணமாக அணையைக் கட்டி முடித்த பென்னிக்குக்கையும் லோகன் துரையும் உழவர்கள் யாரும் மறக்க மாட்டார்கள்.  சினிமா நடிக நடிகைகளின் பெயர், ராசிப்படி பெயர் வைக்கின்ற இந்த காலத்தில் மேற்கண்டவர்களின் பெயர்கள் தைத் திருநாளில்சூட்டி மகிழ்ந்ததை காணமுடிந்தது. குல தெய்வங்களுக்கு இணையாக பல்வேறு கிராமங்களில் பொங்கல் வைத்து வழிபடுகின்றனர்.  கல்லையும் மண்ணையும் காட்டையும் மாட்டையும் சாணியையும் இன்னும் கண்ணில் தட்டுப்பட்டதெல்லாம் வணங்கும் சமூகத்தில் இவர்களை வணங்குவது வாழ்த்த வேண்டிய ஒன்றுதான். 

இந்த பூமிப்பந்தில் எங்கோ பிறந்து கல்வி கற்றது வளர்ந்து, தான் வந்த இடத்தில் தேசம் மொழி இனம் பண்பாடு கடந்து அர்ப்பணித்து அவர் செய்த செயலுக்கு சனவரி 15ல் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் செய்த மரியாதைக்கு முதல் மரியாதை.

பொறியாளர் பென்னிகுக் அவர்களுக்கு பல இடங்களில் சிலை வைக்கப்பட்டுள்ளது.  அதில் அவர் அணை திறப்பின் போது உதிர்த் வார்த்தைகள்.. இடம்பெற்றுள்ளன.. அவை

நான் இப்புவிக்கு வந்து செல்வது ஒரு முறைதான்
ஆகையால்,
நான் ஒரு நற்செயல் புரிந்திட வேண்டும்
அதை தள்ளி வைப்பதற்கோ தவிர்ப்பதற்கோ
வாய்ப்பில்லை...
ஏனென்றால்
நான் மீண்டும் இப்புவிக்கு
வரப்போவதில்லை..

மறுபிறப்பின் மீது நம்பிக்கையில்லா நாத்திகன் இன்னும் ஏழு பிறப்பிலும் நினைக்கும் வண்ணம் தனது செயலால் நிற்கிறார்.  எங்கோ பிறந்தவர் நம் பஞ்சம் தீர்க்க பாடுபட்டார்.  ஆனால், கேரளத்துக்காரர்கள் புதிய அணை கட்ட வேண்டும் என்று ஆய்வு செய்கின்றனர். காரணம்... அணை 100 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது.  நில நடுக்கம் வந்தால் ஆபத்துக்குள்ளாகும்.  நில நடுக்கம் வந்தால் புதிதாக அணை கட்டினால் தாங்குமோ?

அகலமான அடிப்பாகத்தைக் கொண்ட இந்த தடுப்பணை சின்னச் சின்ன நிலநடுக்கத்தையும் கால வெள்ளத்தில் சந்தித்து சாதனையாக நின்றுள்ளது. மொகலாயர் காலத்தில் சுண்ணாம்புக்காரையால்  கட்டப்பட்ட  கட்டிடங்கள் கம்பீரமாக நிற்கின்றன. இன்றும் சுண்ணாம்புக்காரையால் கட்டப்பட்ட பாலங்கள் பயன்பாட்டில் உள்ளது.  அதற்குப் பின்பு சிமெண்டால் கட்டப்பட்ட பாலங்கள் பலவீணமடைந்துள்ளன. என்னை விட என் தந்தை வலுவான பணிகளை செய்கிறார்.

என் கேரளச் சகோதரனே என்ன வேண்டும்
அசலூர்க்காரன் காட்டிய பாசம் அண்டை வீட்டுக்காரன் உன்னிடம் இல்லையே!
நான் பகிரங்கமாகவே கேட்கிறேன்? 999 ஆண்டு ஒப்பந்தம் மாற்றியமைக்கப்பட வேண்டும் அது தானே உன் எண்ணம்

பங்காளிகளுக்குள் பகிர்ந்து கொள்ள வேண்டியதை பகிர்ந்து கொள்வோம்.   அதற்காக எதைஎதையோ சொல்ல வேண்டாம்.  எங்கள் முன்னோர்களின் உழைப்பும் உறுதியும் இந்த அணையில் இருக்கிறது. வேதனை வேலைப் பாய்ச்ச வேண்டாம்.

அணைக்கு ஆயுட்காலம் முடிந்துவிட்டது என்று மற்றவர்களின் ஆயுட்காலத்தை முடக்கின்ற செயல் எப்போதும் கண்டிக்கத்தக்கது.  அணை பலமாக உள்ளது. வந்தவர்கள் வல்லுநர்கள் பார்த்தவர்கள் பதிந்துள்ளனர். அணை பலமகாத்தான் இருக்கும்.  அணையை உருவாக்கியவர்கள் பணியாகச் செய்யவில்லை.  உள்ளார்த்தமாக உருவாக்கியிருக்கிறார்கள்.  காலம் கடந்து கட்டமைப்பில் ஈடுபட்டவர்களின் பெயரைச் சொல்லும்.  பிறருக்காக வாழ்ந்தவர்கள் எல்லோர் மனதிலும் இருப்பார்கள்.  பெரியாறு அணையின் பிதாமகன்கள் யாவரும் நெஞ்சங்களில் நிலைத்து நிற்பார்கள்.


பிப்ரவரி 2011 பசுமைத்தாயகம் சுற்றுச் சூழல் இதழில் வெளிவந்துள்ளது.

அரிசி அரசியல்



"மீனை தானமாக தருவதைவிட, மீன் பிடிக்க கற்றுத் தருவதே மேல்" என்று ஒரு முதுமொழி உண்டு. இதே போல் இன்னொன்றும் சொல்வதுண்டு "தண்ணிக்குள் தத்தளித்துக் கொண்டிருப்பவனுக்கு உணவுப் பொட்டலங்களை தருவதை விட அவனை கரையேற்றுவதுதான் சிறந்தது" என்று. ஆனால் கடந்த கால தமிழக அரசாங்கம் மீனை தானமாக தருவதிலேயே குறியாக இருந்தது.  காரணம்... "வாக்குகள்". வாக்குகளை மனதில் வைத்து மட்டுமே இலவச திட்டங்கள் தீட்டப்பட்டு மக்களின் மனநிலையில் எதிர்மறையான மாற்றத்தை கொண்டுவந்து விட்டது. பல இலவசங்கள் பிச்சை மனோபவத்தை, சோப்பேறித்தனத்தை வளர்க்க கூடியவை என்பதில் உள்ளபடி சந்தேகமில்லை.

"நெல்லா படியளந்தா நெடுநேரமாகுமின்னு
அரிசியா படியளந்தா ஆக்க நேரமாகுமின்று
சோறா படியளந்த சோழ நாடு". சோழ நாட்டின் பெருமை சொல்லும் ஒரு கிராமிய பாடலின் சிலவரிகள். இங்கு படியளத்தல் என்பது செய்யும் வேலைக்கு கொடுக்கும் ஊதியம். சோறா யாருக்கு படியளப்பார்கள்? வீட்டில் இருக்கும் பண்ணையாள்களுக்கு, பரதேசிகளுக்கு, இப்படி... வீடு குடும்பம் உள்ளவர்களுக்கு சோறாக படியளக்க வேண்டிய அவசியமில்லை. பணமாகவோ அல்லது பொருளாகவோ தான் படியளக்க வேண்டும்.  ஆனால் சோறாக படியளந்த என்று கொஞ்சம் மிகைப்படுத்தி சொன்ன சோழ நாட்டில் பிறந்தவர் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்ற திட்டத்தை தனது ஆட்சியில் நடைமுறைப்படுத்தினார்.  மேலோட்டமாக பார்க்கும் போது இது நல்ல திட்டம் என்றுதான் தோன்றும். ஏழை எளியவர்களுக்கு இது ஏற்ற திட்டம் என்று பரப்புரையாற்ற தோன்றும். இது குறித்து தேர்தலுக்கு முன்பாவது கொஞ்சம் ஆழமாக யோசித்தாகவேண்டும்.

ஐந்து நபர்கள் உள்ள ஒரு ஏழைக்குடும்பத்திற்கு நாற்பதிலிருந்து நாற்பத்தைந்து கிலோ அரிசி வேண்டும். தற்போது நியாய விலைக் கடையில் எடையில் நியாயம் குறைந்து இருபது கிலோ கிடைக்கிறது. இருபது கிலோ இருபது ரூபாய்க்கு. நல்லது. மீதமுள்ள இருபது முதல் இருபத்தைந்து கிலோ அரிசிக்கு எங்கே போய் நிற்பது? பலசரக்கு கடைகளில் (வெளிச்சந்தையில்)  தான்.  இங்கு அரிசிக்கு தகுந்தாற்போல் இருபத்தைந்திலிருந்து முப்பதைந்து வரை. சுமார் ஐநூறு ரூபாய் அரிசிக்கு செலவு செய்ய வேண்டியுள்ளது. ஒரு ரூபாய்க்கு அரிசி தந்தும் பெரிய பலன் ஏதுமில்லை.  அதில் அரிசியின் தரம் நேரம் இடம் நாளுக்குத் தகுந்தாற் போல்மாறுபடும்.

எடை குறைவைப் பற்றி பேசினால் ரேசன் கடைகளில் உள்ள ஊழியர்கள் "ஒத்த ரூபாய்க்கு அரிசி வாங்கிட்டு அதுல சட்டம் வேற பேசுவீங்களாக்கும்" என எகத்தாளம் பேசுகின்றனர்.  ஒத்த ரூபாய் அரிசிக்கு மத்திய அரசு பத்துபன்னிரெண்டு ரூபாய் மானியம் தருகிறது. மாநில அரசும் பங்கெடுக்கிறது. யாரும் அவங்க 'அப்பன் வீட்டுல இருந்து கொடுக்கலை' என திருப்பி பேசி மூவாயிரம் ரூபாய்க்கு சம்பள்த்தில் இருப்போரிடம் சண்டை போடுகின்றனர். ஒத்த ரூபாய் அரிசியால் ஏளனப் பேச்சுக்கும் ஆளாக வேண்டிய நிலையில் உழைக்கும் வர்க்கம்.

அட பெரியவூட்டு ஐயா நிக்காரே!
என்னைய்யா ரேஷன்கடையில...

"வீட்டுல புதுசா ரெண்டு நாய்ங்க
வாங்கி இருக்கேன்ல"

வரிசையில் அரிசி வாங்க
நின்றவர்களுடன் சேர்ந்து
ரேஷன் தின்னும்
நானும் ஒரு நாயாகிப் போனேன்...
என்ற வினோத்தின் கவிதையின் உண்மை தன்மையினை உற்றுப்பார்க்கும் போது ஒரு வர்க்கம் ரேசன் அரிசியை வாங்கி நாய்க்குப் போடுவதும், கோழிக்குப் போடுவதும் பசு மாட்டிற்குப் போடுவதும்.... தொடர்ந்து மனிதனையே கேவலப்படுத்தும் நிலைக்கு தள்ளிவிட்டது. எதிர்த்த வீட்டுக்காரன் பொண்டாட்டி அரிசியை வாங்கி கோழிக்குப் போட ஏ வீட்டுக்காரி இராத்திரிக்கு சமைக்க முரத்தில் போட்டு கருப்பார்த்துக்கொண்டிருந்தால்... என்கின்ற நிலையை உருவாக்கித் தந்தது இந்த ஒத்த ரூபாய் அரிசி.  நல்ல திட்டங்களை தள்ளி வைத்துவிட்டு ஒத்த ரூபாய்க்கு தந்த மானியங்கள் மண்ணில் சிதறிக் கிடக்கின்றன.

அண்டை மாநிலங்கள் தண்ணீருக்கு சண்டை போட்டுக்கொட்டிருந்தாலும் இங்குள்ள ஒரு கூட்டம் அரிசியை கடத்துகிறது.  மக்களுக்கு சென்றடையவேண்டிய மானியம் கொள்ளைபோகிறது. அரசும் ஒன்றும் பெரிதாக செய்ததாக தெரியவில்லை.  ஒரு வேளை அரசுக்கு தெரிந்தே கூட நடக்கிறதோ!  ரேசன் கடைகளிலிருந்து மூடை மூடையாக லோடு லோடாக போவதைப் பார்க்கும்போது இது கடத்தலாக தெரியவில்லை.  இப்படி ஒரு நிலைமையை உருவாக்கியது ஒத்த ரூபாய் அரிசி.... விநியோக முறையில் உள்ள பிரச்சனை குறித்து சிந்திதால் சில நாட்டகள் அரிசியின் தரம் வெண்மையாக இருக்கும். அப்புறம் கொஞ்ச நாள் புழுத்துப் போன அரிசி நான் வந்துட்டேன் என்பதை நாலு தெரு தாண்டி வரும்போது சொல்லும்.  இதற்கு காரணம் அறுவடை காலத்தில் கொள்முதல் நெல்லை அப்படியே அரிசியாக்கி தருவது. தரம் கொஞ்சம் சரியாக இருக்கும்.  நாள்பட்ட இருப்பு வாடையடிக்கும்.  பாவம் அது என்ன செய்யும் மழையும் வெயிலும் வந்து போக வசதியுள்ள குடோன்களும், வளைந்து கொடுக்காத நிர்வாகமும் வண்டு உருவாக வைத்து விடுகிறது.  நல்ல அரிசி கள்ளச் சந்தைக்கு சீக்கிரமும், புழுத்த அரிசி இன்னொரு அரவையில் மெதுவாகவும் போய்க்கொண்டுதான் இருக்கிறது.

அரிசி அரசியல் செய்திட்ட மிகப்பெரிய சாபம் சிறு தானியங்களை மறக்கடிக்கச் செய்தது.  ஆரோக்கியம் நிறைந்த சிறு தானியங்கள் மருத்துவர் தரும் மருந்துச் சீட்டுக்கு வந்துவிட்டது. வரகு, கேழ்வரகு, திணை, குதிரைவாலி, இருங்குச்சோளம் என பல சிறு தானியங்களை பயிரட மறக்க வைத்ததும், உணவில் வெறுக்க வைத்ததும் அரிசி.

சில தமிழர்களிடம் நான் ஏன் உழைக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி விட விவசாய வேலைக்கு ஆள் கிடைக்காமல் அவதிப்படுகின்ற நிலையையும் அரிசி அரசியல் ஏற்படுத்திவிட்டது.

ரோட்டோர கடையில டீ அஞ்சு ரூபாய்க்கு மேல
பஸ்ஏறி போகனுன்னாலும் டிக்கெட் அஞ்சு ரூபாய்க்கு மேல
கோழிக்கறி நூத்தியம்மதுக்கு மேல
ஆட்டுக்கறி முன்னுத்தியம்பதுக்கு மேல
உப்பு பத்து ரூபாய்க்கு மேல
பருப்பு நூறு ரூபாய்க்கு மேல
வெங்காயம் நாலஞ்சுமாசாம அய்ம்பது ரூபாய்க்கு மேல
இவ்வளவு ஏன்?
அய்யா
நகரம் மாநகரங்களில் கட்டணக் கழிப்பறைக்கு போகக்கூட ஐந்து ரூபாய்... வேணும். அப்புறம் எதுக்கு இந்த ஒத்த ரூபாய் அரிசி.

மலிவு விலை அரிசித் திட்டம் மக்களுக்கு உதவும் என்று ஆட்சியாளர்கள் நினைத்தாலும் ஒரு மட்டத்திற்கு மேல் அதன் விலையைக் குறைப்பதில் எந்தவிதத்திலும் அர்த்தமில்லை.  அப்போது ஒரு ரூபாய்க்கு அரிசி, இப்போது இலவசமாக அரிசி. இலவசத்தை பொருளாகத் தருவதும், பெறுவதும் அரசுக்கும் மக்களுக்கும் நல்லதல்ல.

தமிழகத்தில் ரேசன் கடைகளின் எண்ணிக்கையை விட கூடுதலான எண்ணிக்கையில் உள்ள மதுபானக் கடைகளில் ஒரு மாதத்திற்கு வாங்குகின்ற அரிசி விலையை விட ஒரே நாளில் கூடுதலான தொகைக்கு மது அருந்தும் தமிழனால் அரிசி வாங்க முடியாதா? மது வருமானத்தில் அவனுக்கே இலவசங்கள் தருவதும், அதிலும் கொள்ளை போவதும் தகுமோ!

அரசின் திட்டங்கள் உழைக்கும் இனத்தினை உயர்த்துவதாக இருக்க வேண்டும். உழைப்பே உயர்வு என்ற தாரக மந்திரத்தை உச்சரித்த தமிழனை இலவச மாயை பிடித்திடலாகது.  கை கால்களில் எல்லாம் விலங்கு போட்டு ஒரு ரூபாய்க்கு அரிசு கொடுத்து உட்கார வைக்க ஆட்சியாளர்கள் நினைக்கின்றனர். நமது எதிர்பார்ப்பு எங்களது விலங்குகளை அவிழ்த்துவிட உதவுங்கள். நாங்கள் ஓடி உழைக்கிறோம் என்பதே.
.
ஜீன் 2011 பயணம் இதழில் வெளிவந்துள்ளது.


Sunday, June 12, 2011

சகாயம் காட்டாத சகாயம்




மதுரை மாவட்டத்தின் ஆட்சித் தலைவராக இருக்கும் மக்கள் நேசிக்கும் மனிதர் யார்... சகாயம்... புதுக்கோட்டை மாவட்டம் பெருஞ்சுனை கிராமத்தில் பிறந்த நெஞ்சுரம் மிக்க தமிழர். வறுமையில் பிறந்து, வள்ளுவனை படித்து, பெற்றோர்களின் வார்த்தைகளை கடைப்பிடிக்கும் சகாயம் தேர்தல் ஆணையத்தால் மதுரைக்கு மாறுதல் ஆனவர்.  மதுரையில் தேர்தலை சிறப்பாக நடத்த தகுதியானவர் என்பதை தேர்தல் ஆணையம் சரியாக தேர்வு செய்துள்ளது.  ஒவ்வொரு அரசுப் பணியாளரும் தனது சொத்துக் கணக்கை அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்று சொல்லும் சகாயம்... தனது வங்கி இருப்பை வெளிப்படையாக தெரிவிப்பவர்.

லஞ்சம் வாங்கி அனைத்தையும் வாங்கும் பல அரசு அதிகாரிகளுக்கு மத்தியில் தனது குழந்தையின் மருத்துவ செலவிற்கு கூட பணம் தேடும் நிலையில் இருந்தவர் தான் இந்த ஆட்சியர்.  ஆம் கோயம்புத்தூரில் வருவாய்த்துறை அதிகாரியாக மாற்றலாகியிருந்த நேரம் தனது மூன்று வயதுப் பெண் குழந்தைக்கு தீடிரென ஒரு நாள் மூச்சு விடுவதில் சிக்கல்.  மருத்துவமனைக்கு எடுத்து ஓடினார்.  ஊசி போட்டு மாத்திரை கொடுத்துவிடுவார்கள் என்று நினைத்தவருக்கு... குழந்தையைப் பரிசோதித்த டாக்டர் உடனே குழந்தையை அட்மிட் செய்ய வேண்டும் என்றார்.  மாதக் கடைசி, பாக்கெட்டில் ஆயிரத்திற்கும் குறைவு. புதிய இடம், அறிமுகம் என்று சொல்லிக்கொள்ள ஆள் இல்லை.  தனக்கு கீழ் பணிபுரிவோரிடம் கடன் கேட்க தயக்கம்.  வானத்தைப் பார்த்து யோசிக்கையில் தனக்கு காஞ்சிபுரத்தில் நண்பராக இருந்த பள்ளி ஆசிரியர் கோவைக்கு மாற்றலாகி வந்திருந்தது ஞாபம் வர அவரை தொடர்பு கொண்டு நாலாயிரம் கொண்டுவரச் சொன்னார்.  அவர் கொண்டுவந்ததும் சிகிச்சை செய்யப்பட்டது.  அடுத்த மாதம் சம்பளம் வாங்கியதும் அந்தக் கடனை அடைத்துவிட்டுத்தான் அடுத்த வேலை பார்தார்.  இவர் நினைத்திருந்தால், ஒரே மணி நேரத்தில் பல இலட்சங்களை வாங்கியிருக்க முடியும். ஆனால் அதைச் செய்ய வில்லை.  லஞ்சம் கொடுக்க மதுபானக் கடை உரிமையாளர்கள் தயாராக இருந்தனர். நாட்டின் வளர்ச்சிக்கு லஞ்சம் தான் மிகப் பெரிய தடை. நான் எந்த வொரு சூழலிலும் லஞ்சம் வாங்க மாட்டேன் என்று உறுதியோடு இருக்கிறார். இந்த கிராமத்தானுக்கு வைராக்கியம் அதிகம் தான்.

காஞ்சிபுரத்தில் கோட்டாட்சியாராகப் பணியாற்றிய காலத்தில் ஒரு பெரியவர் தான் வாங்கிய பெப்சியில் அழுக்குப்படலம் இருந்ததை புகார் கொடுத்தார். புகாரைப் பெற்றுக்கொண்டு, மாதிரியை ஆய்வுக் கூடத்திற்கு அனுப்பி சோதனை செய்து, சோதனை முடிவு குடிக்க தகுதியற்றது என்று வரவே, அறிக்கை தயாரித்து அந்த உலகாளவிய நிறுவனத்திற்கு சீல் வைத்தவர்.  அறிக்கையின் நகலை கம்பெனி மேலாளரிடம் கொடுத்து பூட்டி சீல் வைக்கப் போகிறோம் என்று சொன்ன போது உடனிருந்த அரசு அதிகாரிகள் கூட ஆடிப்போனார்களாம். பல்வேறு இடங்களிலிருந்து வந்த பிரசர்களை சுலபாக எதிர் கொண்டிருக்கிறார்.  உண்மை வெல்லும் என்பது உண்மையே.

எனக்கு கிடைத்த வாய்ப்பை ஏழை எளிய மக்களின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்துவேன் எனக் கூறும் சகாயம் நேரிடையாக கிராமங்களுக்கே செல்கிறார்.  விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டங்களையெல்லாம் கிராமங்களிலே நடத்துகிறார். எங்க ஊருக்கு நேத்து கலெக்டர் வந்து போனார் என மக்கள் சொல்வது எவ்வளவு பெரிய மாற்றம். மதுரை மாவட்ட ஆட்சித் தலைவராக வருவதற்கு முன் நாமக்கல் மாவட்டத்தின் ஆட்சித் தலைவராக இருந்தார். 

நாமக்கல் மாவட்டத்தை பசுமையான மாவட்டமாக்க ஒரு கோடி மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தீட்டி இதுவரை ஏழு லட்சம் மரக்கன்றுகள் மக்களின் ஒத்துழைப்போடு நடவு செய்துள்ளார். இதனைப் பராமரிப்பதற்கு திட்டமிட்டுள்ளார். மரத்த வச்சவன் மரமாக்கி பார்ப்பான். நாமக்கல் மாவட்டத்தின் பள்ளிகள், பஞ்சாயத்து அலுவலகங்கள் என எல்லா இடங்களுக்கும் திடிர் விசிட்.  சிறப்பாக இருக்கும் இடங்களில் எல்லாம் பாராட்டு. மேம்படுத்த வேண்டிய இடங்களில் குட்டு வைக்கவும் தவறுவதில்லை. 

இந்தியாவிலேயே தன் சொத்து மதிப்பை பகிரங்கமாக வெளியிட்ட முதல் ஆட்சிப் பணி அதிகாரியான இவருக்கு மதுரையில் ஒன்பது இலட்ச ரூபாய் மதிப்பிலான ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் லோன் போட்டு கட்டப்பட்ட வீடு ஒன்றுதான் சொந்தமானது. 15 இடங்களுக்கு பணிமாற்றல் செய்தாலும் செய்யப் போகிற பணி ஒன்றுதான்.  அது நேர்மை வழியில் நெஞ்சை நிமிர்த்து மக்களுக்காக பணியாற்றுவதுதான்.

நம்ம சம்பாத்தியத்துலதான் நமக்காகச் செலவு செய்யணும் நீர நேர்மையான அதிகாரியா செயல்பாடனும் போன்ற அம்மா அப்பாவின் வார்த்தைகளை வாழ்க்கையில் கடைப்பிடித்து வரும் இவரை வாய்க்கு வந்தபடி வசைபாடுதல் தகுமோ. நல்ல நோக்கத்தோடு (உலகின் பெரிய ஜனநாயக நாட்டில் வாழ்கிறோம், என்ற பெருமை நமக்கு உள்ளது. ஜனநாயகத்தின் அடித்தளமே தேர்தல் தான். சுதந்திரமாக தேர்தலை நடத்த, எங்களைப் போன்ற அலுவலர்களை தேர்தல் கமிஷன் பணித்துள்ளது. சுதந்திரமான, நேர்மையான, நியாயமான தேர்தலை சிலர் மட்டுமே சேர்ந்து நடத்த முடியாது. அமெரிக்கா, ரஷியா, சீனா போன்ற ஒவ்வொரு நாடுகளுக்கும் ஒவ்வொரு அடையாளம் உண்டு. அதே போல நமது தேசத்திற்கு உள்ள அடையாளம் உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற பெருமை. அத்தகைய ஜனநாயகம் போற்றப்பட வேண்டுமென்றால் தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடந்தால்தான் அது உண்மையான ஜனநாயகமாகும். இப்பணியை மாவட்ட நிர்வாகம், வருவாய்த்துறை, போலீஸ் துறையால் மட்டுமே செய்து விட முடியாது. அனைவருடைய பங்களிப்பும் இதில் இடம்பெற வேண்டும். 2 நாட்களில் 200க்கும் மேற்பட்ட வந்த புகாரின் அடிப்படையில் பல இடங்களுக்கு சென்று நள்ளிரவில் ஆய்வு மேற்கொண்டேன். உங்களைப் போன்ற இளைஞர்களுக்கும் கடமை உள்ளது. நடக்க இருக்கும் சட்டசபை தேர்தலில், 18 வயது பூர்த்தியான அனைவரும் ஓட்டளிக்க வேண்டும். 100 சதவீத ஓட்டுப்பதிவை உறுதி செய்ய வேண்டும். மற்றவர்களையும் ஓட்டளிக்க சொல்லுங்கள். நேர்மையான ஓட்டுப்பதிவு முக்கியம். அன்பளிப்பு பெற்றாலும் அது லஞ்சம் தான். அதைப் பெறாமல் ஓட்டளியுங்கள். லஞ்சம் பெற்று அளிக்கும் வாக்கு; தேச நலனுக்கு தூக்கு.எந்த மாற்றத்தையும் இளைஞர்கள் தான் உருவாக்க முடியும். "லஞ்சம் இல்லாத ஓட்டளிப்போம்' என மற்றவர்களுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்புங்கள் என்றார்) பேசிய வார்த்தைகளை தவறாக புரிந்து கொண்டு செய்தியை திரிப்பது தர்மம் ஆகாது.  நல்ல மாற்றம் வேண்டுமென்று பள்ளி கல்லூரி மாணவர்களிடம் பேசியதில் எந்தத் தவறும் இல்லை. லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து என்ற வாசகத்தை வைத்துள்ளவர் வாக்களிக்க லஞ்சம் வாங்காதீர்கள் என்று மாணவர்களிடம் அவர் பேசியதில் வியப்பேதுமில்லை.


வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்றவர்களை கையும் களவுமாக பிடித்துள்ளார்.  யார் வாக்களர்களுக்கு பணம் கொடுத்தாலும் சகாயம் காட்டமாட்டார்.  தன் மீது எந்த ஒரு கட்சி சாயமும் பூசி விட வேண்டாம் என்று பணிவோடு வேண்டுகிறார். இவரை ஆளும் கட்சிக்கு எதிராக செயல்படுகிறார், சகாயம் போன்ற ஆட்சிப் பணி அதிகாரிகள் தங்களது பொறுப்பின் மதிப்பை உலகிற்கு உணர்த்தியுள்ளனர்.  நேர்மையின் சின்னமாக விளங்கும் இவரைப்போன்ற ஆட்சிப் பணி அதிகாரிகள் எண்ணிக்கையில் அதிகரிக்க வேண்டும்.  அப்போதுதான் தங்களது ஆட்சி அதிகாரத்தால் எதையும் செய்ய முடியும் என்று நினைப்பவர்களின் கொட்டம் அடங்கும்.







Friday, May 27, 2011

அப்பா நான் பாஸாயிட்டேன்



அடுப்பு வேலையில அம்மாவுக்கு ஒத்தாசை செஞ்சு
அண்ணன் ஜீன்சை துவைச்சு அயன் பன்னி
அரைப்பரிட்சை லீவுல தோட்ட வேலை பாத்து
அப்பா நான் பாஸாயிட்டேன்

பள்ளிக் கூடத்திலேயே மூனாவது மார்க்
மொத மார்க் வாங்குன 
முத்துலட்சுமிக்கும் எனக்கும்
மூனு மார்க் வித்தியாசம்

முத்துலட்சுமி டாக்டருக்கு படிக்கப் போகுதாம்
ரெண்டாம் மார்க் வாங்குன ஜான் எஞ்சினியருக்கும
எனக்கப்புறம் இருக்கும் நளினி நர்சுக்கு படிக்கப் போகையிலே...
நான் என்ன படிக்கப்பா...?

சித்தப்பா சிவில் எஞ்சினியரிங் படிக்கும் போதே
ஆடு மேச்சதா அப்பத்தா சொல்லுச்சு
பக்கத்தூரு கவர்மெண்ட் கலேசுலயாவது 
என்னையும் சேர்த்து விடு...
அப்படியே ரெண்டு ஆட்டு குட்டியும் வாங்கிக் கொடு...

நான் கலெக்டர் ஆகனும்ப்பா - அதுக்கு
ஒரு பட்டப் படிப்பு வேணும்ப்பா
கலேஜ் சேருவதற்கு கரிசனம் காட்டுப்பா
கலெக்டர் மகள்ன்னு காலர தூக்கலாம்ப்பா

ஆடு மேய்சசு ஆட்சியர் ஆனது 
வார மாத இதழ்களில் படத்தோட வரும்
அம்மா அப்பா இனிப்பு கொடுத்தது 
அடுத்தடுத்த பககத்தில் கலர்புல்லா வரும்
அப்பா நான் பாஸாயிட்டேன்...