Friday, January 18, 2013

19 (1)


இருபது ஆண்டுகளுக்கு முன் எங்கள் சிற்றூரில் யார் இறந்தாலும் அன்று எவரும் வேலைக்குச் செல்லக்கூடாது.  இது எழுதப்படாத விதி.  விதியை மீறுபவர்களுக்கு தண்டனை என்று எதுவும் இல்லை.  இருந்தும் எல்லோரும் இறப்பு நடந்த வீட்டில் குழுமியிருப்பதும், துக்க வீட்டிற்கு வருபவர்களுக்கு உணவு படைப்பதும், இறந்தவரின் உடலை எடுத்துச் செல்வதற்கான வேலையை மட்டுமே செய்து கொண்டுருப்பார்கள்.  தொழு ஆடு மாடு வைத்திருப்பவர்கள் மட்டும் ஊரின் முக்கிய வீதியில் செல்லாமல் ஊரின் கொல்லைப்புற வழியாக தங்களது கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்வர்.  அதுவும் வழக்கத்திற்கு மாறாக கொஞ்சம் தாமதமாக.   மேய்ச்சலுக்கு சென்றவர்களும் இறந்தவரின் உடலை எடுத்துச் செல்லும் போது ஆடு மாடு ஓட்டிச் சென்றவர்களும் வந்துவிடுவார்கள். இறந்தவரின் இறுதி ஊர்வலம் ஊரார் புடை சூழ நடந்தேறும்.  இறுதி ஊர்வலம் இறுதியடைந்த பின்பு வீட்டை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்தபின்பே அடுத்த காரியங்களில் இறங்குவர்.  இறந்தவருக்கு இறங்கல் கூட்டம் நடத்தும் பாங்கெல்லாம் இல்லை.    ஊரில் பெரும்பலோர் உண்ணா நோன்பு இருப்பதால், வீட்டில் வளர்க்கும் கால்நடைகளுக்கும் நோன்பு தான்.  எனவே, இறந்தவருக்காக ஊரே அழும்... இங்கே ஊரே என்பது உயிருள்ள எல்லா உயிர்களையும் சேர்த்துதான்.

ஊரில் உள்ளவர்கள் எவ்வளவு முக்கியமான பணியானலும் தள்ளி வைப்பதையும் தவிர்ப்பதையும் முழு மனதோடு ஏற்றுக்கொண்டே செய்து வந்தனர்.  காலப்போக்கில் பணிச் சூழல் மாறியது.  பலர் நகரங்களில் உள்ள தொழிற்கூடங்களுக்கும், கடைகளுக்கும் வேலைக்குச் சென்றனர்.  முதலாளிகளுக்கு எங்கள் ஊர் கட்டுப்பாடெல்லாம் கதைக்குதவ்வில்லை.   விடுமுறை எடுப்பதென்றால் அதற்கு என்று.... என்று கட்டுப்பாடு சுமத்த.... அருகில் உள்ள நகரங்களுக்கு வேலைக்குச் சென்றவர்கள், கொல்லைப்புற வழியில் வேலைக்குச் சென்றனர்.   அடுத்த பத்தாண்டில் பள்ளி செல்வோரும், கல்லூரி செல்வோரும் கணிசமாக உயர்ந்தனர்.  இவர்களால் ஒவ்வொரு இறப்பிற்கும் விடுப்பு எடுப்பது இயலாத ஒன்றானது.  இவர்களால் மட்டுமே கொஞ்சம் கூட மனம் கூசாமல் வெளியில் செல்ல முடிந்த்து.  இன்று சூழல் மாறிவிட்டது.  முக்கியமான பணிகளை தவிர்க்காமல் செய்யத் தலைப்பட்டுவிட்டனர்.  ஆம். பூ விவசாயம் அதிகரிக்கத் தொடங்கியது.  பூ பறித்து சந்தைக்கு அனுப்பிய பின்பே இறப்பு வீட்டில் இளைப்பாறும் நிலை வந்துவிட்டது.  இதனைப்போன்றே மற்ற பணிகளையும் செய்யப் பழகிவிட்டனர். 

இன்றும் இருப்பவர்கள் அனைவரும் இறுதி ஊர்வலத்தில் இறங்கிவிடுகின்றனர்.   மற்றவர்கள் சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் இறந்தவரின் வீட்டிற்கு சென்று துக்கம் விசாரித்து விட்டு துணையாய் நிற்கின்றனர்இதனை பெரிய குற்றமாய் யாரும் பார்ப்பதில்லைமாற்றம் மண்ணோடு புரள்கின்ற மக்களிடம் வந்துவிட்டது. ஆனால், மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா தலைவர் பால்தாக்கரே 17.11.2012 சனிக்கிழமை மரணம் அடைந்தார்அடுத்த நாள் இறுதிச் சடங்குகள் நடந்தன.  இதற்காக மும்மையின் பல பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.  போக்குவரத்தும் தடைசெய்யப்பட்டிருந்த்து.  இவரது இறுதி ஊர்வலத்தில் ஏராளமனோர் கலந்து கொண்டனர் என சில ஊடகங்கள் நேரடி ஒளிபரப்பும் செய்திருந்தன. கடைகள் அடைக்கப்பட்டது உண்மையிலேயே துக்கத்தினாலா? இல்லை பயத்தினாலா? என்பதை ஆய்வுக்குத்தான் உட்படுத்த வேண்டும்.

இந்த நிலையில் பால் தாக்கரே மரணத்துக்காக கடைகள் அடைக்கப்பட்டதை கண்டித்து விமர்சனம் செய்து மராட்டிய மாநிலம் பல்கர் நகரில் வசிக்கும் கல்லூரி மாணவி ஷகீன்ததா என்பவர் சமூக வலைதளமான முக நூலில் கருத்து வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- 'உலகில், தினமும் ஏராளமானோர் இறக்கின்றனர்.  அவர்களின் மறைவுக்காக, கடைக்ள் அடைக்கப்படுவதில்லை. போக்குவரத்தை துண்டிப்பதில்லை.  தாக்கரே மறைவுக்கு மட்டும், ஏன் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.  மரியாதை என்பது, தானாக கிடைக்க வேண்டும். கட்டாயப்படுத்தி பெறக் கூடாது.  தாக்கரே மீதுள்ள, மரியாதை காரணமாக, மும்பையில் கடைகள் அடைக்கப்படவில்லை, பயத்தின் காரணமாகவே கடைகள் அடைத்துள்ளனர்.

இந்த கருத்தை அவரது கல்லூரி தோழி ரேணு சீனிவாசன் ஆமோதித்திருந்தார். அதாவது முகநூலில் (பேஸ்புக்கில்) விருப்பம் (லைக்) போட்டிருந்தார். பேஸ்புக்கில் ஷகீன் வெளியிட்ட கருத்து பற்றி தகவல் அறிந்ததும் பல்கர் நகர சிவசேனா தொண்டர்கள் ஆத்திரம் அடைந்தனர். ஷகீனின் மாமா கிளீனிக்கை அடித்து நொறுக்கினார்கள்.  இது ஒருபுறம் இருக்கட்டும்.

ஆனால், ஆளும் அரசு சட்டப்பிரிவு 505(2)ன் கீழ் இரு தரப்பினருக்கிடையே பகையையும் வெறுப்பையும் வளர்க்கும் வித்த்தில் கருத்து தெரிவிக்கப்பட்டதாக்க் கூறி மும்பை காவல் துறை ஷகீன்ததாவையும், கருத்தில் உடன்பாடு உண்டு என்று சொன்ன ரேணு சீனிவாசனையும் கைது செய்துத்து. இந்தக் கைது எவ்வளவு சரியானது என்று ஆளும் ஆட்சியாளர்களுக்கே வெளிச்சம்.   குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால் இருவருக்கும் அதிகபட்சமாக மூன்று ஆண்டு சிறைதண்டனை கிடைக்குமாம். 

கைதான இரண்டு பேரையும் 14 நாள்கள் காவலில் வைக்க உத்தரவிட்ட மும்பை நீதிமன்றம் என்ன நினைத்த்தோ ரூபாய் 15000 செலுத்தி பிணையில் செல்ல அனுமதித்தது.  வெளியில் வந்த இருவரும் மிகுந்த வேதனையோடு மன்னிப்பு கோரியிருக்கிறார்கள்.  இனிமேல் இதுபோன்ற சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிப்பதா? அய்யோ! என்று பயந்துள்ளார்கள். 
மராட்டியம் மராட்டியர்களுக்கு என்ற முழக்கத்தோடு அப்பாவிகள் பலரை காவு வாங்கிய சிவசேனா கட்சியை ஆரம்பித்த தலைவருக்கெல்லாம் 505(2) பாயவில்லை. ஆனால், இந்த பெண்கள் மீது பாய்ந்துள்ளது.  பெண்கள் தங்களது மனதில்பட்ட கருத்துகளை வெளியில் பேசுவதற்கு பொது இடங்கள் வாய்ப்பு மிகக் குறைவு. இவர்கள் டீ கடையில் நின்றோ, மந்தையில் அமர்ந்தோ கருத்தை சொல்லுமளவிற்கு நம் சமூகம் வளர்ந்துவிடவில்லை.  இவர்களுக்கு இது போன்ற சமூக வலைதளங்களே  வடிகாலாக உள்ளது.  இருவருக்கும் ஏற்பட்டிருக்க அடக்குமுறை நமது அரசியல் சட்டம் முன்வைக்கின்ற அடிப்படை உரிமையான 19(1) சுதந்திர உரிமையை கொலைசெய்த்தாகவே உணர்கிறேன்.

இந்தியக் குடிமகனுக்கு  இருக்கின்ற பேச்சுரிமையும், கருத்துரிமையும் காவுகொடுத்துவிட்டு எதைக்காக்க இந்தப் போலி நாடகம்.   மனதில்பட்டதை துணிந்து சொல்ல இந்தச் சம்பவத்த பார்த்த பிறகு இனியார் வருவார்கள்.   இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர் மார்க்கண்டேய கட்சுக்கும், சுப்பிரமணியாசுவாமிக்கும் மட்டும்தான் இந்தச் சுதந்திரம் இருக்கிறதா? சமானியர்களுக்கு இவையெல்லாம் சாத்தியமில்லையா?

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைதான் மேலானது என்றால், மும்பை நீதிபதிக்கும், காவல்துறைக்கும் மறந்து போனது எப்படி.   நியாமாக பார்க்கப்போனால் இந்த இரண்டு பெண்களை காப்பதற்கு காவல்துறை அரணாக இருந்திருக்க வேண்டும்.  இதனை நீதி மன்றம் முறைப்படுத்திருக்க வேண்டும்.  சமீபத்தில் தகவல் தொழில்நுட்பச் சட்டப்பிரிவு 66 ஏ புதுவையைச் சேர்ந்த ரவி மீது பாய்ந்த்து.  இப்படியான புதுப்புது சட்டப்பிரிவுகள் கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராக நின்றுகொண்டு(று)ள்ளது பலரைப் பயம்கொள்ள வைத்திருக்கிறது.  

பயமின்றி வாழ்வாதற்கான சூழலை உருவாக்க வேண்டிய ஆளும் அரசு நியாமான முறையில் பேசவும், எழுதவும் தடையாய் இருப்பதை பார்க்கும் போது மன்னராட்சி காலத்தில் இருப்பதைப்போன்றே உணரமுடிகிறது.  சங்காலத்தில் கூட சில இடங்களில் இழித்தும் பழித்தும் கவி பாடியதை பார்க்க முடிகிறது.  ஆனால், இன்று..... நாம் எங்கு போகிறோம்.

இன்று மராத்திய மண்ணிலிருந்தும், மக்களிடமிருந்தும் விடுதலைபெற்றுள்ள பால்தாக்கரே தென்னிந்தியர்களை மும்பையைவிட்டு வெளியேறச் சொன்னரே, அப்போது அது பகையை வளர்க்கும் பேச்சாகப் பார்க்கப்படவில்லை. சச்சின் டெண்டுல்கர் ஒரு செய்தியில் நான் முதலில் இந்தியன், அதற்குப்பிறகுதான் மராத்தியன் என்று சொன்ன போது, டெண்டுல்கரை மூர்க்கமாக எதிர்த்தாரே தாக்கரே அப்போதும் வேடிக்கைதான் பார்த்த்து.  நேற்று, தாக்கரேயின் தம்பி மகன் ராஜ் தாக்கரே பீகாரிகள் வெளியேற வேண்டும் என்று வெக்கமில்லாமல் பேசினாரே அப்போதும் வேடிக்கை பார்த்த்து நம் மைய மாநில அரசுகள். ஆனால், இன்று நம் மராத்திய அரசு இந்த இரண்டு பெண்களுக்கு மட்டும் கடிவாளம் போட்டது எதற்காக? பேச்சு அரசியல் வாதிகள் எங்களுக்கு மட்டுமே! நீங்கள் உங்களது அன்றாடப் பணிகளை பார்த்துக்கொண்டு இருக்க வேண்டும் என்கிறார்களா?

மண் பயனுற வேண்டும் என்ற பாரதி இம் மண்ணைவிட்டுப் பிரிந்து சென்ற இறுதி ஊர்வலத்தில் எத்தனை  பேர் இருந்தார்கள்... வைரமுத்து தனது கவிராஜன் கதையில் சொல்கிறார்பாரதியின் உடம்பில் மொய்த்த ஈக்களின் எண்ணிக்கையை விட குறைவாகவே மக்கள் இறுதி ஊர்வலத்தில் இருந்ததாக”. பாரதி மக்களின் இதயங்களை விட்டு அகன்றுவிட்டானா! இல்லையே... இறப்பில்லாதவனுக்கு இறுதி ஊர்வலம் எதற்கு? தமிழகத்தில் உள்ள சில அரசியல்வாதிகள், பிரபலங்கள் தாக்கரேயின் இறப்பிற்கு இரங்கல் தெரிவித்திருந்தனர்.  இறப்பின் போது விமர்சிப்பது தமிழனின் பழக்கமாக இருக்கவில்லை, அதனால் கூட இருக்கலாம்.   ஆனால், இறப்பைக் கொண்டு இழிவான செயல்களில் ஈடுபடுவதை எடுத்துச் சொல்வோர் மீது ஆளும் வர்க்கம் அத்துமீறுவது அவமானம்.

நாட்டின் வளங்களையும், வளரும் தலைமுறையையும் காப்பதற்கு கருத்துச் சுதந்திரம் அவசியம்.  இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகள் காக்கப்பட நீதிமன்றம் அநீதிக்கு துணைபோகாமல், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை உறுதிப்படுத்த இனியாவது சமமாக இருந்தால் சந்தோசப்படுவோம். 
பசுமைத்தாயகம் சுற்றுச்சூழல் இதழில் வெளிவந்த கட்டுரை