Saturday, April 12, 2014

நோட்டா (Non of The Above) ஏற்றமா! ஏமாற்றமா!

“இந்தியாவின் கடைநிலை ஏழையும், இது எனது இந்தியா, எனது குரலும் எண்ணமும் இந்தியாவின் ஒட்டுமொத்த நிர்வாகத்தில் பிரதிபலிக்கிறது என்று உணரவேண்டும்” ‘எனது கனவு’ என்கின்ற கட்டுரையில் காந்தியடிகள். 2006 சட்டமன்றத் தேர்தலின் போது நீண்ட வரிசையில் நின்று, வாக்குச்சாவடி அதிகாரியிடம் போய் நான் 49 ஓ போட வேண்டும் என்றேன். அவர் என்னிடம் “ஏங்க இவ்வளவு தூரம் வந்துட்டீங்க, யாராவது சுயேச்சை வேட்பாளருக்குக் கூட ஓட்டுப்போட்டுட்டு போங்க” என்றார். நான் மீண்டும் இல்லை நான் 49 ஓ தான் போட வேண்டும் என்று நிற்க, வாக்குச்சாவடி முகவர்கள் உள்பட வரிசையில் நின்ற அனைவரும் என்னை ஏகத்துக்கும் வெறித்துப் பார்த்தனர். இதில் ஒரு நல்ல விடயம், என் கிராமத்தவர்கள் எவரும் (கரை வேட்டி கட்டியவர்கள் உள்பட) ஒன்றும் சொல்லவில்லை, அட எந்தவொரு சைகையும் இல்லை. வாக்குச்சாவடி அதிகாரி திரும்பவும் என்னை சமதானப்படுத்த முயல, முடியாது என்ற பாவனை என் முகத்தில் வர, கொஞ்சம் காத்திருங்கள் என்றார். நான் நின்றதை வந்தவர்கள் எல்லாம் பார்த்துச் சென்றனர். ஒரு வழியாக 49 ஓவிற்கான படிவத்தை எடுத்து, கொடுத்து, முடித்து அனுப்பிவைத்தார். வாக்குச்சாவடியை விட்டு வெளியே வந்த பின்புதான் தெரிந்தது, நான் செய்த்து ரகசியம் காக்கப்படவில்லையென்று. அடுத்த தேர்தலின் போது ”மாமா இந்த முறையும் ஓ தானா” என்ற ஏளனம் ஒரு புறம், ஊராட்சி மன்றத் தேர்தலில் மன்ற உறுப்பினருக்கு நின்ற உறவுக்கார அண்ணன் ”எனக்கு ஒட்டுப்போட்டுருப்பா, இதுலேயும் ஓ போட்டிராதா” என்ற அன்பு கட்டளை ஒரு புறம், நான் ஓ போட்டது சரியா? தவறா? என என்னை பலவாறு யோசிக்க வைத்த்து. இவ்வேளையில், கடந்த செப்டம்பர் 27ஆம் தேதியன்று உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பினை ஒட்டி வேட்பாளரை நிராகரிக்கும் உரிமையை வாக்கு இயந்திரத்திலேயே நோட்டா பட்டன் பொருத்தப்படவுள்ளது என்று தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்த போதும் உள்ளபடியே எந்தவித உணர்வையும் உள்மனது உணர்ந்துகொள்ள இயலவில்லை. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளரை நிராகரிக்கும் உரிமையை வழங்கும் நோட்டா சின்னம் சட்டமன்றத் தேர்தலில் இளம்சிவப்பு வண்ணத்திலும், நாடளுமன்றத் தேர்தலில் வெள்ளை வண்ணத்திலும், செவ்வக வடிவ பொத்தானில் நோட்டா(NOTA) என ஆங்கிலத்தில் பெரிய எழுத்தில் அச்சிடப்பட்டிருக்கும். இது வேட்பாளர் பெயர் வரிசைப்பட்டியலில் கடைசியாக இடம்பெறும். இதில் மேற்கண்ட யாருமில்லை என்ற வாசகம் அந்தந்த பிராந்திய மொழிகளில் இடம்பெறும். இந்த வாக்குப்பதிவு இயந்திரம் தமிழ்நாடு ஏற்காடு சட்டமன்ற இடைத்தேர்தலிலும், வட இந்தியாவில் நடைபெறவிருக்கும் டில்லி, மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்திஸ்கர், மிசோரம் ஆகிய சட்டப் பேரவை தேர்தலிருந்து இந்த வாக்குப் பதிவு இயந்திரம் பயன்பாட்டிற்கு வருகிறது.பத்தாண்டுகளாக பலர் மக்கள் மத்தியிலும், ஊடகங்களிலும், நீதித் துறையிலும் எடுத்த முயற்சிக்கு கிடைத்த பயனாக மேற்கண்டவை கிடைக்கப்பெற்றுள்ளது. என் ஊரில் தேர்தல் நாள் அன்று ஒரு திருவிழா போல் இருக்கும். என் ஊரில் மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள ஆறு இலட்சம் கிராமங்களிலும் உள்ள ஏழைகள், விவசாயிகள், கூலிகள், தொழிலாளர்கள் வரிசையாக நின்று தங்களது கடமையை நிறைவேற்றி வருவார்கள். இந்திய குடிமகன்களாக மகிழ்ச்சியோடு செய்கின்ற பணிகளில் அதுவும் ஒன்று அவர்களுக்கு... நம்மில் பலர் நினைக்கலாம், அவர்கள் எல்லாம் ஓட்டுக்கு துட்டு வாங்கிட்டு செய்கிறார்கள் என்று! இதை இங்கே பேசுவதற்கில்லை.... ஆனால், படித்த, பணம்படைத்த பெரும்பாலோனோர் வாக்குச்சாவடிக்கு வருவதே கிடையாதே. கேட்டால் வேட்பாளர்கள் யோக்கியாவான்கள் இல்லை... வாக்குச்சாவடி வாசல் அறியாத நாம் யோக்கியன்கள்.... நாடளுமன்றத்தின் இரு அவைகளிலும் இத்தனை பேர்..(வயது வாரியாக) அடடா இளைஞர்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. இத்தனை பேர்...(குற்றம் வாரியாக) அய்யகோ குற்றவாளிகளின் எண்ணிக்கை இவ்வளவா!. இத்தனை பேர்...(பாலினம் வாரியாக) வருத்த்த்தோடு பெண்களின் எண்ணிக்கை மிக மிக குறைவாக இருக்கிறது. இத்தனை பேர்...(வாரிசு வாரியாக) அட இதுல யாரும் விதிவிலக்கில்லை. இத்தனை பேர்...(கல்வித் தகுதி வாரியாக) என புள்ளிவிபரம் தந்து பூரித்துப் போகின்றோம். குற்றவாளிகள் வேட்பாளர்களானது, ரவுடிகள் வேட்பாளர்களாக மாறியது, யாரால்? பெண்களும், இளைஞர்களும் தேர்தல் களத்தில் குறைவாக உள்ளது யாரால்? "பெண்களுக்குப் போதிய பங்கு இல்லாத சட்டசபைகளை நான் பகிஷ்கரிப்பேன்' என்று 1931-இல் நடைபெற்ற இரண்டாம் வட்டமேஜை மாநாட்டின் போதே காந்திஜி பகிரங்கமாக அறிவித்திருந்த போதும், கர்நாடாக சட்ட சபையில் பெண்களின் பிரதிநிதித்துவம் வெறும் இரண்டு சதவீதம். அரசியல் சாக்கடை, அரசியல் வாதிகள் பெரும்பாலும் ஊழல் வாதிகள் என திண்ணையில் உட்கார்ந்து பேசிக்கொண்டே இருப்பது மட்டும் சரியாகுமா? நாடு எனக்கு என்ன செய்த்து என்பதைக் காட்டிலும் நாட்டிற்கு என்ன செய்தோம் என்ற சிந்திப்பது சிறந்தது என்ற வகையில், அரசியல் ஜனநாயகத்தை சரிபடுத்த என்ன செய்யவிருக்கிறோம். நோட்டா அரசியல் வாதிகளை திருத்தும், மாற்றும் என்பது கால்வலிக்கு உடம்பு முழுக்கு பரிசோதனை செய்து வைத்தியம் பார்ப்பது போன்று. நல்லது தான். ஆனால் நமது சோதனைகளை எத்தனை ஆண்டுகளுக்கு செய்வது. இன்னொரு புறம் நோட்டா சின்னத்தில் வேட்பாளர்களை விட அதிக வாக்குகள் கிடைக்கப்பெற்றால் என்ன செய்வது? அப்படி கிடைக்கப்போவதில்லை... அப்படி கிடைக்கப்பெற்றால்...! தற்போது இந்தியாவில் நடைபெறுகின்ற தேர்தல்களில் சராசரியாக 65சதவீதம் வரை வாக்குப் பதிவு நடக்கிறது. இந்திய அரசியல் வேட்பாளர்கள் அனைவரும் உத்தமர் என்ற வகையில் வாக்களிக்காவிட்டாலும், இவர்களால் ஏதாவது நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில் வாக்களித்து வருகின்றனர். மீதமுள்ள 35 சதவீத வாக்காளர்கள் வாக்குச் சாவடிக்கே வரவில்லை. இவர்களில் எத்தனை சதவீதம் பேர் வாக்குச் சாவடிக்கு வராமலேயே வேட்பாளர்களை நிரகாரித்தவர்கள் என்பதை ஆய்வு செய்துதான் நோக்க வேண்டும். வாக்களிக்க வராத பெரும்பகுதி பொதுஜனத்திற்கு நியாமான காரணமில்லை என்பதை அத்தனை அறிவுஜீவிகளும் ஒத்துக்கொள்ள வேண்டும். இவர்கள் யார்? ஜனநாயகத்தை வலுப்படுத்த, இவர்களை வாக்களிக்க வரவைப்பதற்கு அறிவுஜீவிகள் எனச் சொல்பவர்கள் முயல்வது நல்லது. சமூக வர்க்கத்தில் கீழ்த்தட்டு மக்கள் வாக்களிக்கத் தவறுவதில்லை. பிரபலங்கள் வாக்களித்தும் தங்களது பிம்பங்களை ஊடகங்களில் காண்பித்துக்கொள்கிறார்கள். ஆசிரியர்கள், காவலர்கள் தபால் வாக்களித்து தங்களது கடமையை செய்துகொள்கிறார்கள். ஆனால், நடுத்தட்டில் உள்ள மேல்தட்டு, மேல்தட்டு வர்க்கத்தின் வாக்களிக்கு சதவீதம் எவ்வளவு என்பது வெளியில் சொல்லமுடியாத முடிச்சுதான். சமூக வலைதளங்களில் தங்களது கருத்துக்களை பராபட்சம் பார்க்காமல் பதிவேற்றம் செய்கின்ற இளைஞர்கள், பண்டிகை பயணத்திற்கு முன்பதிவு செய்கின்ற ஆர்வம், வேகம் தேர்தல் நாளுக்கு இருப்பதில்லை. சென்னை, பெங்களுர், மும்பை போன்று பெரு நகரங்களில் முன்னணி நிறுவனங்களில் பணி புரிகின்ற படித்த இளைஞர்கள் எத்தனை சதவீதம் பேர் வாக்களித்தார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம். ஆனால், திருப்பூர், கோவை போன்ற தொழில் நகரங்களில் பணிபுரிகின்ற இளைஞர்கள் தங்களது கிராமத்து வாக்குச்சாவடியில் வாக்களிப்பதை நான் பார்த்திருக்கிறேன். நோட்டா என்ன மாதிரியான விளைவை சமூக தளத்தில் ஏற்படுத்தும் என்பதை ஆழ்ந்து நோக்கும் போது, நமது அரசியல் தளம் இப்படி இருக்கிறதே என வேதனைப்படும் சிலர், ஆட்காட்டி விரலில் கறையை பெற்றுக்கொண்டு, நோட்டா பொத்தானில் கோபத்தோடு வாக்கை அளித்துவிட்டு சென்று விடுவர். பிறகு முருகனைப் போல் கோபம் தணிந்து தங்களது இயல்பு வாழ்க்கையில் தங்களை தயார்படுத்திக்கொண்டு, அடுத்த நாள் தொடர்ந்து விடும். எங்களைப் போன்றவர்கள் இத்தனை சதவீதம் பேர், நோட்டாவில் வாக்களித்துள்ளனர், வேட்பாளர்கள் இவ்வளவு பேர், வெற்றிபெற்றவர்களில் இவ்வளவு பேர் என இன்னொரு புள்ளிவிபரத்தை சொல்லிக்கொண்டே... நமது தேசத்தில் எந்தவொரு மாற்றமும் அரசியல் ஜனநயாத்தின் வழியே செய்ய வேண்டியிருக்கும் போது, இந்த தேசத்தின் மீது அக்கறையுள்ள சிலரை நோட்டா பொத்தான் வழியோடு நிறுத்திக்கொள்வது எந்தவகையில் சரியாகும். தேசத்தின் மீது தீரா பற்றுள்ள அக்கனிக்குஞ்சுகள் அரசியல் ஆட்சிக்கு வரவேண்டும். அந்த அக்கினி உள்ளத்தில் கனன்றுகொண்டே இருக்க வேண்டும். இல்லையேல், இந்தியால் முதல் பிரதமந்திரி நேரு தொடங்கி வைத்த வறுமையை ஒழிப்போம் என்ற ஒற்றை முழக்கம் இன்றைய மன்மோகன் வரை ஒலிக்கிறது. இன்னும் அந்த ஒற்றை முழக்கமே ஒலித்துக்கொண்டு இருக்கும். முழக்கத்தை கூட மாற்ற முடியாத மந்திரிசபையை வெறுப்பது சரிதான். ஆனால், மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமே! யார் செய்வது? இந்தியாவில் பலருக்கு தங்கி தூங்கி எழுவதற்கு வீடு இல்லை. சிலரிடம் ஒரு ஊரே உல்லாசமாக வாழ்வதற்கு தகுந்த வசதியுள்ள மாட மாளிகைகள். அரசு பள்ளியில் கழிப்பறை கட்ட ரூபாய் இரண்டு இலட்சத்திற்கு ஒப்பந்தம் விடப்படுகிறது. பசுமை வீடு கட்ட ரூ.1.8 இலட்சம் போதும் என்பது எந்த வகையில் சரியாகும். சமூக நீதி சரியாக வழங்கிட, சிறப்பான நிர்வாகத்தை வழங்கிட தற்போது பதவியில் இருப்பவர்களிடம் எதிர்பார்ப்பது மட்டுமே சரியாகது. ஏனெனில் அவர்களிடம் சரியான சமூக நீதியை எதிர்பார்க்க முடியாது. அவர்களை மாற்றவும் முடியாது. ஆகையால் மாற்றத்தை தருபவர் ஆட்சி அதிகாரத்திற்கு வருவதே சரியான தீர்வாக அமையும். அதைவிடுத்து நோட்டா தோட்டா என்றெல்லாம் பேசுவது வார்த்தை ஜலமாக மட்டுமே இருக்க முடியும். ஒன்றை நாம் ஒத்துக்கொள்ள வேண்டும். தோட்டா உடைப்பதற்கு சரியாக இருக்குமே தவிர கட்டமைப்பதற்கு சரியாகா... சரியாக ஆட்சி கட்டிலை கட்டமைக்க நெஞ்சுரம் மிக்க இளைஞர் கூட்டம் இந்தியா வெங்கும் கிளம்ப வேண்டும். சாதி, மத, இன வர்க்க பேதமில்லாமல், சமத்துவத்தை ஏற்படுத்தும் ஓர் அரசியல் கூட்டம் விரைவாய் அமையும்.