Tuesday, November 16, 2010

நான்கு வழிச் சாலை

நான்கு வழிச் சாலை
நகரங்களை இணைக்கும் சாலை


நாள் கிழமை பார்த்து
நவ தானியங்கள் இட்டு
நான்கேழுதலைமுறைக்கு
நிலைத்து நிற்க நிலை வைத்து
பகல் இரவு பாராது உழைத்து
பார்த்து பார்த்து கட்டிய வீட்டை
பகலிலேயே கொள்ளை கொண்ட சாலை


வீட்டிற்கொரு மரம் வளர்ப்போம் என்ற
வீர கோஷத்திற்கு முன்னரே
சாலையெங்கும் சோலையாக நின்று
கத்தரி வெயிலை தான் வாங்கி
கரியமில வாயுவை உள் வாங்கி
நா ஊற சுவை கூட புளி தந்து
நல்லவன் கெட்டவன் பார்க்காம நிழல் தந்து
நட்டமா நின்ன நெட்டை மரங்களை
கட்டை கட்டையா வெட்ட வச்ச சாலை



துடியான கருமாரி
தூங்காத கருப்புச்சாமி
அரச மர பிள்ளையார்
ஆடிக் கூழ் அம்மன்
அத்தனை பேரையும்
இடம் மாத்தி தடமான சாலை


காட்டை கொடுத்தவனுக்கும்
மேட்டை கொடுத்தவனுக்கும்
உழுத நிலத்தை கொடுத்தவனுக்கும்
ஒண்டிக் கிடந்த வீட்ட கொடுத்தவனுக்கும்
காசு தந்த கடையை விட்டுக் கொடுத்தவனுக்கும்
நன்றி கெட்டு சுத்தி சுத்தி வரவச்ச சாலை


ஊரை ரெண்டாக்கி
ஊருக்குத் தண்ணி தரும்
ஊருணியை மேடாக்கி
ஏர் உழவனின்
ஏரியை துண்டாக்கி
வாய்க்காலை பாழாக்கி
நன்செய்யை நாசாமக்கி
பாதைகளை வீணாக்கி
பயன் தரும் மரங்களை பிணமாக்கி
அரளிச் செடி தாங்கி
அம்சமாய் படுத்த சாலை


அரச மரத்து நிறுத்தம்
ஆல மரத்து நிறுத்தம்
பத்துப் பனை மரம் நிறுத்தம்
ஒத்தப் புளிய மரம் நிறுத்தம்
புங்கை மர நிறுத்தம்
வேங்கை மர நிறுத்தம்
மா மர நிறுத்தம்
பூ மர நிறுத்தம்
அத்தனையும் அடையாளமில்லாம ஆக்கி
உலகத் தரத்தில் ஒய்யாரமா நின்ன சாலை


நான்கு வழிச் சாலை...
நகரங்களை இணைக்கும் சாலை

Saturday, November 13, 2010

யாருக்கும் நேரமில்லை.... வீரமில்லை....

அரசுப் பேருந்தில் அறிவிப்பே இல்லாம்
பேருந்து கட்டணம் உயரது
மாடுகள் மாதிரி
பேசமா டிக்கெட் வாங்கிட்டு போகுது



திருமங்கலம் தொடங்கி
பென்னாகரம் வரை
நோட்டுக்கு ஓட்டுகள் விலை போகுது
85 சதவிகிதததிற்கு மேல்
வாக்குகள் பதிவாகுது


ஒத்த ரூபாய்க்கு அரிசி விலை
பத்து ரூபாய்க்கு உப்பு விலை
சமைக்கிறதுக்கு வேணும் நூறு வில்லை
வயிறு இன்னும் நிறைய வில்லை


காயுது கரும்புக் காடு
தாகத்தால் நோகுது ஆடு மாடு
நீச்சல் குளத்தோடு சென்னையில் வீடு
நீ டாஸ்மார்க் தண்ணீயில் ஆடு


பொது நலமே தன் நலன் என்பவனுக்கு
பெட்டி பெட்டியா போகுது பணம்
முற்றும் துறந்த ஞானியின் ஆசிரமத்தில்
தோண்டத் தோண்ட வருது பிணம்


ஆதி முதல் அந்தம் வரை
அரசாங்க அலுவலகங்களில் லஞ்சம்தான்
அது கொடுக்காம தாராம
அங்க நடக்காது காரியம்தான்


கல்விக் கூடத்திலும் காவல் நிலையத்திலும்
காம வன்கொடுமை களியாட்டம் - அதை
கண்டுக்காம இருக்கிறோமே இல்லாத பேயாட்டம்
இன்னும் இருக்குதா மனுசப்பயக நடமாட்டம்