Tuesday, March 13, 2012

இளநீர் கடை வைத்து பிழைத்துக்கொள்ளுங்கள்


 

ஒரு சமுதாயத்தின் வளர்ச்சியில் மொழியும், பண்பாடும் பெரும்பங்கு வகிப்பதை அறிவோம். அமைதியான முறையில் நடந்த எழுச்சிகளாகட்டும், அடிமைத்தனத்தை உடைத்த புரட்சிகளாகட்டும் அவர்களது மண்சார்ந்த மொழியிலும் பண்பாட்டிலும் ஊறியே விளைந்தது என்பது வரலாறு நமக்கும் சொல்லும் ஒளிவு மறைவில்லா உண்மை.  ஒரு மொழி அழிந்தால் போதும் அந்தத் தேசிய இனமும் அழிந்துவிடும்.  ஓர் இனத்தின் உயிர்நாடியே தாய்மொழிதான்.  மொழிதான் உயிரோடும் உணர்வோடும் கலந்திருக்கிறது.  தாயை விட தாய்மொழி மேலானது என்பர்.  நமது செம்மொழித் தமிழை காலம் காலமாக காத்துவந்த பெருமைக்குரியவர்கள் புலவர்கள்.  இவர்களை ஒரு படி மிஞ்சி நிற்பவர்கள் நமது கிராமத்தார்கள். ஆம்... அவர்களது ஒவ்வொரு செயலிலும் பாடல் பொதிந்து இருந்தது.

மனிதனின் பிறப்பில் தொடங்கி இறப்பு வரை பாடல்.... விவசாயப் பணிகளில் உழவில் தொடங்கி அறுவடை வரை பாடல்... ஆடு மேய்க்கும் போது பாடல்... மாடு ஓட்டும் போது பாடல்....  நல்லதுக்கு பாடல்... கெட்டதுக்கு பாடல்.... ஆடுவதற்குப் பாடல்.... ஓடுவதற்கும் பாடல்.... விழிப்புக்கும் பாடல்.... துயில்வதற்கும் பாடல்.... இப்படி தனது பண்பாட்டோடு பாடல்களை வைத்திருந்தான்.  பாடல்கள் மட்டும் தானா? பழமொழி... சுட்டிக்காட்ட விரும்பியதையெல்லாம் பழமொழியில் சொல்லிப் புரிய வைத்த தமிழன் இன்று தரம் தாழ்ந்த திரையிசைப் பாடல்களுக்கு தலையாட்டிக் கொண்டிருக்கிறான்.

இன்றைய பிரபல தமிழ்த் திரையிசைப் பாடல் why this  கொலை வெறிடி? தனுஷ் என்கிற பிரபல நாயகன் எழுதிப் பாடிய பாடல்.  பாடல்கள் எழுதுவதை வரவேற்போம்.  இதுபோன்ற பாடல்கள் எழுதுவதை எப்படி வரவேற்பது... இன்னொரு பிரபல நாயகன் சிலம்பரசன் where is the party? என்று தொடங்கும் திரைப்படப் பாடலை எழுதி பிரபலப்படுத்திய பெருமைக்குரியவர்.  இருவருக்கும் இப்படி ஒரு ஒற்றுமை... இவர்கள் நாளைய தமிழகத்தின் முன்னணி நடிகர்கள்.  பாடல்களில் ஆங்கில கலப்பு செய்வதோடு அதை ஆதரிக்கவும் செய்கிறார்கள்.  நமது தொலைக்காட்சிகள் இந்தத் தமிங்கல கவிஞர்களை நல்ல நாள்களில் நேர்காணல் செய்து பெருமைப்படுத்துகிறது.

ஆங்கில கலப்போடுதான் மற்ற கவிஞர்களும் பாடல் எழுதுகிறார்கள், அவர்களை எல்லாம் விட்டு விட்டு இவர்களை மட்டும் எப்படிச் சொல்லலாம்.  அதுவும் இவர்கள் எழுதிய ஒரு பாடலுக்கு? அவர்களுக்கும் சேர்த்துதான்.... ஒன்று நல்லவை செய்யுங்கள் இல்லை விட்டு விலகி... ஊர்ப்பக்கம் போய் இளநீர் கடை வைத்து பிழைப்பு நடத்துங்கள்.

சட்டமேதை அம்பேத்கர் குறிப்பிடுவது போல் சுமார் 3500 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா முழுவதும் பரவியிருந்த செம்மொழித் தமிழ் இன்று 40 மக்களவைத் தொகுதிக்குள் சுருங்கிவிட்டது.  இந்த நாற்பது மக்களவைத் தொகுதியிலும் முழுமையான ஆட்சிமொழியாக அங்கிகரிக்கப்பட்டிருக்கிறதா என்றால்? அஞ்சலகத்திற்கு செல்கிற அஞ்சலை ஆங்கில விண்ணப்பத்தில்தான் பூர்த்திசெய்ய வேண்டியிருக்கிறது. 

தமிழனின் வயது சுமார் அய்ம்பதாயிரம் ஆண்டுகள் என்று பாவாணார் குறிப்பிடுகிறார்.  இந்தக் கருத்தை மொழியியல் அறிஞர் லிவிட்டும் ஒப்புக்கொள்வதாக காசிஆனந்தன் சொல்கிறார்.  அட, அய்ம்பதாயிரம் ஆண்டுகள் இந்த மண்ணில் மரணமில்லாம் மலர்ந்து வந்த தாய்மொழியை இன்னொரு அய்ம்பது ஆண்டுகளுக்குள் மாற்றிவிடுவார்களோ என்ற பயம் தொற்றிக்கொள்ளத்தான் செய்கிறது. 

பங்குனி சித்திரையில்இறக்குமதியான முரட்டுத் துணிகளை அணிந்தோம்... உடல் எரிந்து வேர்வை ஊற்றாய் பெருக்கெடுத்தாலும் அனுபவித்தோம்.... ஆடையில் மாறினோம்... இழப்பு நுற்பாலர்களோடு போனது. விவசாயத்தில் மேற்கத்திய முறைகளை புகுத்தினோம்... விளைச்சலில் மேம்பாடு கண்டோம்... விளைவு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை இழந்தோம்.... ஆங்கில கலப்பை அணுமதித்தால்?

இனிமேல் ஆங்கில கலப்பை தவிர்க்க முடியாது.  எங்கே cement க்கு தமிழில் சொல் என்று வினாவேறு? தமிழன் தன்மானம் உள்ளவன்தானா என்று கேள்வி எழுப்ப வேண்டியிருக்கிறது.  எல்லாவற்றிற்கும் தமிழில் சொற்கள் இருக்கிறது.  ஒவ்வொரு தமிழ்ச் சொல்லும் மறைந்தமைக்கு ஆங்கில கலப்புதான் காரணம் என்பதை அறிய முடியாத மூடர்களாக இருப்பது தான் வேதனைக்குரியது.

ஆங்கிலம் பேசுவதை தவறு என்று சொல்வதாக புரிந்து கொள்ளக் கூடாது.  தமிழில் ஆங்கிலத்தை கலந்து பேசக்கூடாது என்றே புரிந்து கொள்ளுங்கள். நடிகர்கள் கவிஞர்கள் ஆகக் கூடாது என்பது நமது வாதமல்ல.... நல்ல செம்மொழிக் கவிஞர்களாக வளர வேண்டும் என்பதே விருப்பம்.  கவிஞன் கலப்படம் இல்லாத பொருளை கற்பனையில் தரட்டும்.  காதுகளைத் தந்து கைகூப்பி வரவேற்கிறோம்.
பசுமைத்தாயகம் சுற்றுச் சூழல் 2012 மார்ச் இதழில் வெளிவந்துள்ளது.

Wednesday, March 7, 2012

மக்கள் போற்றுவார்கள்


ஆதி கால மனிதன் காடுகளில் விலங்கோடு விலங்காக வேட்டையாடி வாழ்ந்து வந்தான்.  ஒரு இடத்தில் நிலைபெறாமல் சுற்றித்திரிந்தான். கற்களை கருவிகளாக்கினான் கொஞ்சம் வளர்ச்சி பெற ஆரம்பித்தான். விலங்குகளை பழக்கி தனது பணிக்கு பயன்படுத்தினான். நெருப்பை கண்டுபிடித்து தனது இருப்பை உறுதிசெய்தான். வேட்டையாடிக்கொண்டிருந்த மனிதன் வேளாண்மை செய்யப் பழகினான். மனித வரலாறு மாற்றம் கண்டது. சக்கரமும் வேளாண்மையும் மனித வரலாற்றில் மிக முக்கிய மைல்கல் ஆகும்.  வேளாண்மை செய்யும் போது அவனுக்கென உடமைகள் உருவாகின. வேளாண்மையில் ஈடுபட ஒரு கூட்டு சக்தி தேவைப்பட்டது. அங்கு ஒரு இனக்குழு உருவானது. தான் முன்னரே உருவாக்கிவைத்திருந்த விலங்கினங்களான ஆடு மாடு போன்றவைகளை விவசாயத்திற்கு பயன்படுத்துகிறான்.

விவசாய நிலங்கள், கால்நடைகள், தமது இனக் குழுக்களை மாற்று இனக்குழுவிடமிருந்து காப்பாற்றிக்கொள்ள வேண்டிய காட்டாயம் மனிதனுக்கு ஏற்படுகிறது. தம்மை தற்காத்துக்கொள்ள உடல்வலிமையும் புத்திக்கூர்மையும் உள்ளவர்கள் தலைவர்கள் ஆனார்கள். இது மனித வரலாற்றில் ஒரு மறுமலர்ச்சியாகும். இந்த மறுமலர்ச்சிதான் காலப்போக்கில் பரிணாம வளர்ச்சி பெற்று அரசியலுக்கு வித்திட்டது.  ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மனித இனத்தின் அரசியல் உள்ளுர் அளவிலேயே தொடங்கியிருந்தது.

தமிழகத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மன்னராட்சி காலத்திலும் சிறந்த கிராம ஆட்சி நடைபெற்றதற்கான கல்வெட்டுச் சான்றுகள் பாண்டிய நாட்டில் மானுரிலும், சோழ நாட்டில் உத்திரமேரூரிலும் கிடைக்கப் பெற்றுள்ளது.  சம காலத்தில் கிடைக்கப்பெற்ற வரலாற்று ஆவணங்கலான கல்வெட்டில் ஊர் கூடி ஆட்சி செய்த செய்தி நம்மை வியப்புறச் செய்கின்றன.

உத்திரமேரூர் கல்வெட்டு இன்று நடைபெறும் உள்ளாட்சிக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே முன்னுதாரணமாக விளங்கியிருக்கிறது.  முதலாம் பரந்தாகச் சோழன் காலத்தில் இருந்த கிராம ஆட்சி முறையில் ஒவ்வொரு கிராமமும் பல குடும்புகளாக பிரிக்கப்பட்டிருந்தன.  இன்று வார்டுகளாக பிரிக்கப்பட்டிருப்பது போல் அன்றே இருந்ததை நாம் பாராட்ட வேண்டும்.  இன்று கிராம ஊராட்சியில் போட்டியிடுவதற்கான தகுதிகள், எந்த கிராமத்தில் போட்டியிடுவரோ அக்கிராமத்தின் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்றிருக்க வேண்டும், 21 வயதாயிருக்க வேண்டும் என்கிறது. அன்று சொந்த இடத்தில் வீடுகட்டி வசிப்பவர், காணி நிலத்திற்கு வரி செலுத்துபவர், 35 வயதுக்கு மேலும் 70 வயதுக்குள்ளும் இருப்பவர், மூன்றாண்டிற்குள் எந்தக் காரியத்திலும் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படாதவர் போன்ற தகுதிகளை நாம் கல்வெட்டின் வாயிலாக அறிய முடிகிறது.

தகுதியை குறிப்பிடுவது போன்று தகுதியின்மையையும் குறிப்பிடுகிறது. அவை நிறைவேற்றுக் கழகத்தின் உறுப்பினராக இருந்து கடைசியில் கணக்கு காட்டாமல் இருந்தவர்கள், கூடத்தகாதவர்களுடன் கூடுபவர்கள், ஐம்பெரும் பாதகங்களில் முதல் நான்கு புரிந்தவர்கள், எவ்வகைப்பட்ட கையூட்டும் வாங்கிப் பின்னர் அதற்காக தண்டம் செலுத்தியவர்கள், மாபாதகம் செய்தவர்கள், ஊருக்குத் துரோகம் செய்தவர்கள், கூடத்தகாதவரோடு கூடுதல் போன்ற குற்றம் செய்து பிராயச்சித்தம் செய்தவர்கள், குற்றம் புரிந்து கழுதை மேல் ஏற்றப்பட்டவர்கள்,கள்ளக் கையெழுத்து போட்டவர்கள் இவர்கள் எவரும் கிராம சபை உறுப்பினராக தகுதியற்றவர்கள் என்கிறது உத்திரமேரூர் கல்வெட்டு. இது மட்டுமில்லை இதற்கு முன்னர் பொறுப்பு வகித்தவர் போட்டியிடமுடியாது. இன்று இவ்வளவு தகுதியின்மை இல்லை.

தேர்தல் குடவோலை முறையில் நடைபெற்றது.  கிராமத்தில் வசித்து வரும் அனைத்து ஆண் மக்களும் உறுப்பினர்கள்.  ஒவ்வொரு குடும்புக்கும் ஒரு உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படுவர்.  கிராம சபையின் முன் ஒரு குடத்தை எடுத்து அனைவரது முன்னிலையிலும் காண்பிப்பர். உள்ளே எந்தப் பொருளும் இல்லை என்பதை அனைவருக்கும் உறுதிப்படுத்துவர்.  பின்னர் தகுதியுள்ள உறுப்பினர்களின் பெயரை குடும்புவாரியாக ஓலையில் எழுதி குடத்தில் போட்டு, ஒரு குழந்தையை எடுக்கச் சொல்லி, ஒருவர் பார்த்து, அனைவரது முன்னிலையிலும் தேர்தல் அதிகாரி வாசிப்பார். இதிலிருந்து எந்த இடத்திலும் தவறு நிகழக்கூடாது என்பதில் உறுதியாக இருந்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது.

தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் கிராமத்தை நிர்வகிகக்கூடிய வாரியங்களுக்கு பொறுப்பேற்பர். அன்று சமசத்ர வாரியம், ஏரிவாரியம், தோட்டவாரியம், பஞ்சவாரியம், பொன்வாரியம், கணக்கு வாரியம், கலிங்கு வாரியம், தடிவழிவாரியம் இருந்தது.  இதில் சமசத்ர வாரியம் குடிநீர், தெரு விளக்கு, சாலை போன்ற பொதுப்பணிகளை மேற்கொண்டது. மூத்த உறுப்பினர்கள் சமசத்ர வாரியத்தில் பொறுப்பில் இருப்பர்.  ஒவ்வொரு வாரியமும் தனது பெயருக்கேற்ற பொருப்பினை செய்தன.

முரசு அடித்தோ, காளம் ஊதியமோ சபை கூடும் இடத்தையும் நேரத்தையும் அறிவித்தனர்.  ஊரில் உள்ள தனி மண்டபத்திலோ, கோவில் மண்டபத்திலோ சபை கூடும். சபை உறுப்பினர்கள் ஊதிய இழப்பின்றி ஓய்வு நேரத்தில் சபையை கூட்டினர்.  இரவு நேரங்களில் கூட்டம் கூட்டுவதில்லை.  இந்நேரங்களில் கூட்டம் கூட்டினால் விளக்கெரிக்க எண்ணெய் செலவாகும் என்பதை கருத்தில் கொண்டு அந்திமாலை பொழுதில் பெரும்பாலும் கூட்டத்தை நடத்தியுள்ளனர்.  சபையில் ஊதியம் பெற்ற மத்தியஸ்தன், கரணத்தான், தண்டுவான், அடிகீழ்நிற்பான் போன்ற பணியாளர்களும் இருந்தனர். கரணத்தான் என்பவன் கணக்காளன் ஆவான்.  கணக்கை சபையில் சமர்ப்பிக்கும் போது சிவக்கக்காய்ச்சிய மழுவை கையில் பிடித்து, தன் வேலைத் துாய்மையை நிரூபிக்க வேண்டும்.  இத்தகு கிராம நிர்வாக முறை நம் தொன் தமிழகத்தில் இருந்தனை நாம் பெருமை கொள்ளும் வேளையில், சில குறைபாடுகளும் இருந்தன்.

சபை உறுப்பினராவதற்கான தகுதி ஆண்களிடமும், வசதியுள்ளவர்களிடமும் மட்டுமே இருந்தது.  இந்த குறைபாடுகளை இன்றைய உள்ளாட்சித் தேர்தல் களைந்துள்ளது. ஆம், இந்திய அரசியலமைப்பின் 73வது அரசியல் திருத்தச்சட்டம் இடஒதுக்கீடு முறையை அமல்படுத்தி பெண்களும் ஒடுக்கப்பட்டோரும் பங்குபெறும் வண்ணம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

இடஒதுக்கீடு கிடைக்கப்பெற்ற இந்த பதினைந்து ஆண்டுகளில் நமது உள்ளாட்சி அமைப்புகளில் பல ஆயிரக்கணக்கான பெண்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் பொறுப்பேற்றுள்ளனர்.  அதே போல் தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் பொறுப்பேற்று அலங்கரித்து வருகின்றனர்.  ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சிறப்பாக இருந்து வந்த கிராம ஆட்சியில், செழுமைபடுத்த அரசாங்கம் மேற்கொண்ட முயற்சியில் 100 சதவிகிதம் சென்றடைந்துவிட்டோமா? என்றால்... பல பெண்கள் தேர்வு செய்யப்பட்ட பல ஊராட்சிகளில் தலைவரின் கணவரே, தலைவராக செயல்படும் அவலம் ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னரும் தீர்ந்தபாடில்லை.

கையெழுத்துப் போடும் உரிமை கூட பல பெண் ஊராட்சி மன்றத்தலைவருக்கு கிடைக்கவில்லை என்பது வேதனை தான்.  பெரும்பாலான பெண் தலைவர்கள் கிராம சபைக் கூட்டத்தில் மட்டும் அமர்ந்து செல்கிற பணியைச் செய்தார்கள் என்று கேள்வியுறும் போது நெஞ்சு பொறுக்குதில்லையேஎன்ற வரிகள்தான் வந்து வாட்டுகிறது.  அரசியல் கட்சிகளின் சார்பில் தேர்வு செய்யப்பட்ட மேயர்களின் கணவன்மார்கள் அலுவலகத்திற்கு வெளியே ஆட்சி செய்த அவலத்தை மறுப்பதற்கில்லை.  ஒன்றிய அலுவலகங்களில் பெண் தலைவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் தலைவர்களின் தந்தையோ, கணவனோ, அமர்ந்து அரஜாகம் செய்ததை அரசு அலுவலர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டுதான் இருந்தார்கள்.  பாவம் அவர்கள் என்ன செய்வார்கள், அவர்களிடமும் ஒரு சான் வயிறுதானே இருக்கிறது. இந்த நெறிஞ்சிக் காட்டில் குறிஞ்சிப் பூவாய் பூத்து குலுங்கியவர்கள் இருக்கத்தான் செய்தார்கள்.  இவர்கள் உள்ளாட்சியில் நல்லாட்சி தந்தார்கள். பத்திரிகை தொடங்கி பாமரர்கள் வரை அனைவரது பாராட்டையும் பெற்றார்கள்.

பெண் தலைமையை ஒடுக்கி வைத்தவர்கள் எல்லா சமூத்திலும் எல்லா வர்க்கத்திலும் இருந்தார்கள் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.  பெண் தலைமையோடு ஒப்பிடுகையில் தாழ்த்தப்பட்ட பழங்குடியின இடஒதுக்கீடு முன்னேற்றம் கண்டதாகவே பார்க்க முடிகிறது.  எதிர்பார்த்த மாற்றத்தை இந்த பதினைந்து ஆண்டு தாராவிட்டாலும் மோசமில்லை.  ஊராட்சிகளில் நல்ல மாற்றத்தை தந்தனர்.  பரம்பரையாக இருந்துவந்து தலைவர் பதவி மாற்றமடைந்த போதும் கிராமப் புறத்தில் நல்ல மாற்றமே இருந்தது.  இதிலும் ஆதிக்க மனோபவமுள்ள பகுதிகளில் இடஒதுக்கீடு பெரும் வெற்றியைத் தரவில்லை.  ஊராட்சி மன்றத் துணைத் தலைவரின் ஆளுமை அதிகம் இருந்ததை நாம் எல்லோரும் காண முடிந்தது.  இன்றும் சில பகுதிகளில் ஆதிக்க சமூகத்தின் இழுவைக்கு வரக்கூடிய தாழ்த்தப்பட்ட சமூகத்தில் உள்ள  ஏழையை ஊரின் வேட்பாளராக நிறுத்தக் கூடிய, ஆதிக்க சமூகத்தின் புத்திசாலித்தனத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

பொறுப்பேற்ற பலர் ஊரகங்களில் வியத்தகு மாற்றங்களை செய்துள்ளனர்.  விருதுகள் பெற்றுள்ளனர். சுய சார்புள்ள பஞ்சாயத்துகளை உருவாக்கி அரசையே ஆச்சரியப்படுத்துயுள்ளனர்.  ஆனால், காசோலையில் கையொப்பம் போட முடியாத நிலையை உருவாக்கிக் கொண்ட பல ஊராட்சி மன்றத் தலைவர்களும் கடந்த காலங்களில் இருக்கத்தான் செய்தனர்.  வருவாய் இல்லாத ஊராட்சி மன்றத் தலைவர் பதவி 341 இடங்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளது.  ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே போட்டி இருந்த பதவிக்கு இன்று தமிழகத்தில் 341 இடங்களுக்கு போட்டியில்லை.  நீங்கள் வியப்படைய வேண்டாம்.   இரண்டு பேரூராட்சி தலைவர் பதவிக்கும் போட்டியின்றி தேர்வு நடைபெற்றுள்ளது.  ஒட்டு மொத்தமாக 19000 பதவிகள் போட்டியின்றி தேர்வு பெற்றுள்ளனர்.  காந்தி போட்டியின்றி தேர்வு பெறுவதைத்தான் விரும்பினார்.  காந்தி படம் பொறித்த பணத்தை மாற்றாளுக்கு கொடுத்து போட்டியிலிருந்து விலகிக்கொள்ள வைத்திருப்பார்களா? காந்தி படம் பொறித்த பணம், காந்தியின் கனவுப் பதவிக்கு ஏலம் போகிறது.

ஊராட்சித் தலைவராக வருபவர் இன்னொரு ஒப்பந்தக்காராக மாறுகின்ற சூழல்தான் கடந்த காலம் நமக்கு தந்துள்ளது.  ஊராட்சியின் முதல் குடிமகனாக இருக்கிற தலைவர்கள் குடிகளின் நலனில் அக்கறையின்றி, லட்சியங்களை மறந்து லட்சங்கள் திரட்டுவதிலியே கருத்தாய் இருந்துவிட்டு காலத்தை கடத்திவிட்டனர்.

இந்தியாவில் பெரும்பகுதியாக இருக்கிற கிராமம் வளம்பெற வலுப்பெற இந்த உள்ளாட்சி அமைப்புகள் சிறப்பாக செயல்படுவது அவசியம்.  மேற்கத்திய நாடுகள் எல்லாம் போற்றும் நமது குட்டி குடியரசுகளான ஊராட்சிகள் செவ்வனே செயல்படும்போதுதான் ஏழ்மை அழியும்.  நமது மண்ணில் வளமான மனித இனமே வாழ வேண்டும். அதற்கு வலுவான உள்ளாட்சி அமைப்புகள் அந்ததந்த ஊர்களில் வேண்டும். 

புதிதாய் தேர்வு செய்யப்பட்டுள்ள உள்ளாட்சித் தலைவர்கள் ஊர் நலனில் அக்கறை கொள்ள வேண்டும். நல்லவர்கள் தேர்வாகியிருக்கலாம். நாணயம் கொடுத்து தேர்வாகியிருக்கலாம். முடிந்த்தை விட்டுவிடுவோம்.  காலம் காலமாக நம்மோடு இருக்கிற இந்த அமைப்பை சிதைக்காமல் சிற்பமாக்க வேண்டியது உள்ளாட்சி பொறுப்பாளர்களின் கடமையாகும்.  போட்டதை எடுப்பதற்கு வேறு தொழில் இருக்கிறது.  விட்டதை பிடிக்க வேறு இடம் இருக்கிறது. இது விதைக்க வேண்டிய இடம்.  கடந்த கால அனுபவங்களிலிருந்து கிடைத்தவற்றை தனதாக்கிக் கொண்டு ஊரகப் பகுதியில் உயரிய மாற்த்தை ஏற்படுத்த உங்களைத்தான் நம்பியிருக்கிறது உங்கள் மண்... மழை பொய்க்கவில்லை... காற்று நிறுத்தவில்லை... நெருப்பு நெருக்கமாக இருக்கிறது... மண் வாசம் வீசுகிறது....  அடுத்த தலைமுறை கண்ணியமான வாழ்க்கை வாழ்ந்திட உங்கள் கைவசம் உள்ள பொறுப்பை, பொறுப்பாய் செய்திடுங்கள்...... உங்களை மண் போற்றும் மழை போற்றும் மக்கள் போற்றுவார்கள்.
 பசுமைத்தயாகம் சுற்றுச்சூழல் இதழில் வெளிவந்தது.

பண்டிகைகள் பண்படவேண்டும்


மனித மனம் கொண்டாட்டங்களில்தான் மகிழ்ச்சியடைகிறது. பண்டிகைகளில்தான் கொண்டாட்டங்கள் மிகுந்திருக்கின்றன. பண்டிகைகள் என்று கையாளப்படுகிற விழாக்கள் உறவுகள் ஒன்று கூடும் நிகழ்வாகவே காலம் காலமாக இருந்து வந்துள்ளன.  இந்தியாவில் பெரும்பாலோர் கொண்டாடுகிற விழாவாக தீபஒளி திருநாள் விளங்குகிறது.  “தீபாவளிக்குதான் நெல்லுச்சோறு ஆக்குவோம், அதுவும் ஒரு நேரத்துக்குத்தான், அப்புறம் தைப்பொங்கலுக்கு, இதுல முனு நாளும் நெல்லுச் சோறு கிடையாது. மாட்டுப் பொங்கல் அன்னைக்கு மட்டும்.  மத்த இரண்டு நாளும் சாமைச்சோறு... மருமகன் மறுவீடு வந்திருந்தாளும் ஆடியன்னைக்கு கூட சாமைச்சோறுதான், அப்பயெல்லாம் நெல்லுச்சோறு சாப்பிடுதறபத்தியே பேசிக்கிட்டுருப்போம்  இது எங்க அப்பாவின் பால்ய காலம். விழாக்களில் சோறு சாப்பிடுவதே மகிழ்ச்சியைத் தந்துள்ளது. 

நெல்லுச்சோறு, கறி, புத்தாடை, புதிதாக வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குதல், விதவிதமாக வெடிவெடித்தல் என தீபாவளி பரிணாம வளர்ச்சி பெற்றிருக்கிறது.  கிராமங்களில் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னரெல்லாம் வசதிஇருப்பவர்கள் மட்டுமே கொண்டாடிய விழா தீபாவளி.  இன்று எல்லோரும்... “எங்கள் வீட்டில் புதுத்துணி எடுப்பது, வீட்டிற்கு வெள்ளையடிப்பது...மராமத்து பார்ப்பது.... இப்படி... தை தான் விசேசம். நாங்க, தீபாவளி சமயம் விவசாய வேலையில் மூழ்கியிருப்போம்“ என்கிற விவசாயி வீட்டிலும் தீபாவளி கோலுச்சுகிறது. விவசாய குடும்பங்களிலிருந்து வேறுபட்ட பணிகளுக்கு செல்வோர் தொடங்கியதும், தீபாவளி எல்லா கிராமங்களிலும் ஒளிர்கிறது.

கொண்டாட்டங்கள் அவசியம்தான். ஏனென்றால், உழைப்பு மட்டுமே வாழ்க்கையில்லை, உழைப்பால் பிழைப்பதுவும்தான் வாழ்க்கை. உழைப்பு, உணவு, உடை, உறைவிடம் உற்சாகம், உறக்கம் இந்த “உ“ க்கள் சரியாக அமைந்துவிட்டால் வாழ்க்கை ஆனந்தம்தான். ஆனந்தமான வாழ்க்கை வாழ அனைவருக்குமே ஆசையிருக்கும்.  ஆனால், வாழ்வதற்கு இந்த உலகம் வேண்டும்.  இதை மறுக்க முடியாது, மறக்கவும் கூடாது....

அத்தனைக்கும் ஆசைப்படு என்றதும் நாம் நன்மை எது தீமை எது என்று பார்க்காமல் அனைத்தின் மீதும் ஆசைப்படுகிறோம். அளவற்ற பற்று கொள்கிறோம். தீபாவளிக்கு முன்னதாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. மது மகன்களுக்கு மதுப்புட்டிகளெல்லாம் இலவசம், இதில் மது மகன்களுக்கெல்லாம் ஏக சந்தோசம். தெருவிக்கு பத்து இருபது பேரை விதைக்காய் இருந்தார்கள். அவர்களிலும் பத்துப்பேருக்கு ஊத்தி, ஊருக்கு பத்து இருபது பேர் மது அருந்தாதவர்கள் என்ற நிலையை உருவாக்கிவிட்டது உள்ளாட்சி தேர்தல்.  தொடர்ச்சியாக தொன்னுறு நாட்கள் மது வாங்கிகொடுத்து வாக்கு வாங்கியவர்கள், வாக்குத்தவறாமல் இருக்கப்போகிறார்களா?

தீபாவளி சமயம் இரண்டுநாட்களில் இருபதாயிரம் உபரிவருமானம் என்கிறார் மதுக்கடை ஊழியர். அக்கடையில் தீபாவளி அன்று மட்டும் மது விற்பனை ரூபாய் ஆறு இலட்சம்.  ஒரு கடையில் விற்பனையே ஆறு இலட்சம் என்றால் தேநீர் கடைபோல் நீக்கமற நிறைந்திருக்கும் மதுக்கடைகளின் விற்பனையை நீங்களே யோசித்துக்கொள்ளுங்கள்.  பணத்தை தண்ணியா செலவு செய்யாதே என்பார்கள், இன்று, மது தண்ணிக்கு கணக்கே இல்லாமல் செலவு செய்து மகிழ்ச்சியை வாங்குவதற்குப் பதிலாக வம்மை விலைக்கு வாங்குகின்றனர். கொஞ்ச நாளில் எல்லாத் துண்பங்களையும் துணைக்கு அழைப்பர். 

தீபாவளி திருநாளை குறிவைத்து தேவைக்கு மிஞ்சிய பொருட்கள் சந்தைப்படுத்தப்படுகின்றன.  வாழ்நாள் எல்லாம் செலவைத் தருகிற செல்போன்கள் விற்பனை படு ஜோர். சலுகை விலை, அன்பளிப்பு என்ற போர்வை போர்த்திய செல்போன் கடைகளில் கட்டுக்கடங்கா கூட்டம். விடுமுறை விடாமல் கடைகளை திறந்து வைத்து விற்பனையை துரிதப்படுத்தினர்.  இதில் நமது அரசு அலைபேசி சேவையில் கூட புல் டாக்டைம் என்ற வலை விரிக்கப்பட்டது.  கையில் உள்ள காசை அவர்கள் கையில் மாற்றுவதற்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையையும் செய்தனர்.  இதே போல் மின்சாதனப் பொருட்கள் விற்பனை... ஆசையைத் துாண்டும் விளம்பரங்கள் எல்லா ஊடகங்களிலும். கையில் காசு இல்லாதவன் கந்து வட்டிக்கு வாங்குகிறான். தீபாவளி முடிந்து விட்டது.  கடன் முடியவில்லை. இதைத்தான்   ஆசையே துண்பத்திற்கு காரணம் என்றார்களோ!

தீபாவளிச் சந்தைக்கு சென்றால் நெகிழிப் பொருட்களும், பட்டாசும்தான் பிரதான விற்பனை.  கூட்டம் கூட்டமாக இயற்கைக்கு ஒவ்வாத பொருட்களை வாங்கி மாசை வீங்க வைப்பதில் அவ்வளவு என்ன சந்தோசமோ? ஒருவர் இரண்டாயிரம் ரூபாய்க்கு பட்டாசு வாங்கியதாக பெருமை கொள்கிறார்.  இன்னொருவர் ஐநுாறு ரூபாய்க்குத்தான் வாங்கினேன் என வருத்தப்படுகிறார்.  மதுரையில் ஒவ்வொரு வீட்டுக்கு முன்னும் பெரிய காகித குவியல்.  அடாத மழையிலும் விடாமல் வெடிவிட்ட சரித்திர நாயகர்கள் நம்மூர்க்கார்கள்.  இதைத்தான் காசை கரியாக்குவது என்றனர் நம் முன்னோர்கள்.  காது கிழியட்டும், காசு கரையட்டும், சூழல் கெடட்டும் எனக்கு கவலையில்லை.  என்னுடைய வேலை அவனுக்கு குறையா வெடி போடக்கூடாது.  எதற்கு வெடி போடுகிறோம் என்று தெரியாமல் கூட ஒரு கொண்டாட்டம்.

அறியாமல் செய்கிறார்கள், அவர்கைள விட்டுவிடுவோம் என்று சொல்லி விட்டு விட முடியாது. அறிவுரை சொல்ல வேண்டிய அப்பனும் ஆத்தாளும் முன்னத்தி ஏராக வெடித்து குழந்தைக்கு கெ(ா)டுக்கிறார்கள்.  பயந்த சுபாவம் கொண்ட பெண்களும் வெடிப்பதில் அதிக ஆர்வம் கொண்டு எதிர்த் வீட்டுக்காரியோடு போட்டி போடுகிற அவலம் இங்குதான்  வீதியேறியது. வீதியெங்கும் மழைபெய்ததால் காகிதக்கூழ். இரவு தொலைக்காட்சி செய்தியில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சென்னையின் மாசுபாடு 12 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்ற செய்திவருகிறது.  அதைப் பார்த்துக்கொண்டு இரவு வானவெடி வெடிக்கிறார்கள்.  மத்தாப்பு கொழுத்துகிறார்கள்.  பூமி புகைமண்டலமாக காட்சியளித்தது தீபாவளி இருளில்.  யாருக்கும் கவலையில்லை! எல்லோரும் சந்தோசமாக இருக்கிறார்கள். இந்த சந்தோசத்திற்குத்தானே ஒரு வருடம் காத்திருந்தார்கள்.  பலருக்கு பலத்த கவலை மழை அடிக்கடி அடிக்கிறதே என்று.  மீதமிருந்து பட்டாசை அடுத்தடுத்த நாட்களில் வெடித்து சரியாகப் பயன்படுத்தியதாக திருப்பதிபடுத்திக்கொள்கிறார்கள்.  அரசாங்கம் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கைக்குப் பின்னும் முழித்துக்கொண்டதாக தெரியவில்லை.

இந்த பட்டாசு சீனாவை புர்வீகமாக கொண்டதாம்.  தற்போது சிவகாசியில்தான் உற்பத்தி. பட்டாசு தொழில் ஈடுபடும் உழைக்கும் வர்க்கத்தின் மீது பற்றுள்ளவர்கள் பட்டாசு வெடிக்காமல், அந்த தொழிலுக்கு வெடிவைப்பதுதான் சிறந்ததாகும். இத்தொழில் ஈடுபடுபவர்கள் உள்ளாகும் ஆபத்துகள் அதிகம்.  அரசாங்கம் இத்தொழிலை தடைசெய்தால் தலைமுறை காக்கும் தர்மத்தை செய்யும். புலிகளை காக்க திட்டம் வைத்திருக்கிறோம்.  புவியைக் காப்பதில் நாட்டம் வேண்டாமா?

குழந்தைகளுக்கு பட்டாசின் தீமைகளையும், அது தரும் விளைவையும் போதிக்க வேண்டியவர்கள் ஆசிரியர்கள். விடுமுறைக்கு முன்னர் ஆசிரியர்கள் சூழல் பேணுவது குறித்து ஒவ்வொரு மாணவனுக்கும் ஓதுவது அவசியம்.  வாழ்க்கையின் மீது அக்கறையுள்ள ஆசிரியர்கள் இதை அறப்பணியாக செய்யலாம்.  வகுப்பறை வாழக் கற்றுத்தரும்... வாழ்க்கையைக் கற்றுத்தரும்....

தீபாவளியன்று வருகிற இன்னொரு கொண்டாட்டம் திரைப்படங்கள்.  முன்பதிவு வசூலில் சாதனை, திரையரங்குகளில் சாதனை... இந்த சாதனைகளுக்குப் பின்தான் இல்லாமைக்கான சோதனை துவங்குகிறது.  ரூ. 300 லிருந்து ரூ. 500 கொடுத்து படம் பார்க்கிற அவலம் தீபாவளியன்று திரையரங்குகளில் அரங்கேறுகிறது.  பல நாள் உழைப்பு, சேமிப்பு, கடன் எல்லாம் ஒரே நாளில்...

பகிர்ந்துகொள்வதில்தான் உண்மையான சந்தோசம் உள்ளது.  ஆரோக்கியமான உணவுக்கு வழியில்லாம் நம்மூரிலேயே ஏரளாமனோர் இருக்க வீண் செலவுகளை ஏன் செய்ய வேண்டும்.  கூடுதல் விலை போட்டு உடை எடுப்பவர்கள் கொஞ்சம் விலை குறைத்து உடை எடுத்துக்கொண்டு, மிச்சமிருக்கும் பணத்தில் கஷ்டப்படும் உன் சொந்தக்காரன் பிள்ளைக்கு புத்தாடை எடுத்துக்கொடு. அவன் கந்துக்கடைக்கு போகமாட்டான்.  தீபாவளியன்று வாழ்த்தை பகிர்ந்து கொள்வது மட்டும் வாழ்க்கையில்லை.  பிறர் வாழ்க்கை வளத்திலும் வாழ்த்தைத் தருவதில்தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது.   ஏழையின் சிரிப்பில் இறைவன், ஏழைகள் ஏழைகளாகவே இருப்பது வேண்டாமே.  அவர்களும் நம்மை ஒத்தவர்களாக இருக்க ஒத்துழைப்போம்.

எங்க பாட்டனும் பாட்டியும் பூட்டனும் பூட்டியும் வாழ்ந்த பூமி... நாம் வாழ்கின்ற பூமி... நம்ம உறவுகள் வாழவேணும் இந்த பூமியில். நாம் வாழும் பூமி நமக்கனதாய் அமைந்திட இயற்கையோடு இயைந்த வாழ்வை தேர்ந்தெடுத்தல் நலம்.
 இவள் புதியவள் சனவரி 2012ல் வெளிவந்தது.

Tuesday, March 6, 2012

மழை வருது... மாற்றம் தருது....


நான் அப்பா பேசுறேன்ம்மா, ஊர்ல மழை பேயுதா? பேரனையும் பேத்தியையும் பத்திரமா பாத்துக்கோ, மழையில நனையவிடாத, ஈரத்துல விளையாட விடாத, கண்ணு... குழந்தைகளை கண்ணும் கருத்துமா பாக்கனும். கண்டதைத்திங்க விட்டுறாதா... இப்படி மழை காலத்தில் மழையடிக்குதோ இல்லையோ அட்வைஸ் மழை  பொழிவதற்கு பஞ்சமிருக்காது.   அப்படி இந்த மழை மீது ஏன் இந்த பயம்.  மழை வேணும் வேணுமுன்னு தவமிருப்பவர்கள் கூட ஒரு வகையான அச்சத்துடன் ஒதுங்குவது ஏன்?

அய்ம்பது ஆண்டுகளுக்கு முன் மழைகாலத்தில் வயதானவர்களுக்கு வந்த டயரியாவால் கொத்து கொத்தாய் செத்துள்ளார்கள்.  இதில் குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.  ஆஸ்பத்திரிக்கு வண்டி கட்டிப் போன அந்தக் காலத்தில் இறப்பு கூடுகட்டி கூடவே இருந்துள்ளது.   இறந்தவர்களை அடக்கம் செய்ய புதைப்பதற்கு தோண்டினால் தண்ணீர் ஊற்றெடுக்கும், எரிப்பதற்கு விறகு, எரு ஓடு கிடைக்காமல் அல்லல்பட்டுள்ளனர். ஒவ்வொரு மழைக்கால இறப்பின்போதும் அனுபவமுள்ள அய்ம்பதை தாண்டியவர்கள் தாங்கள் அனுபவித்த துயரத்தை  கதைகதையாகச் சொல்வார்கள்.  ஆனால், இன்று மருத்துவம் வளர்ந்துள்ளது. மருத்துவமனைகள் ஊரில், ஊருக்கு அருகில் வந்துவிட்டது. வசதியுள்ளவர்களுக்கு மருத்துவர் வாசலுக்கு வருகிற வளர்ச்சி கண்டுவிட்டோம்.  இருந்தும் மழை அச்சம் மறைந்தபாடில்லை.  உண்மைதான்...

மழை தண்ணீரை மட்டும் மண்ணுக்கு கொண்டு வருவதில்லை.  கூடவே வான்வெளியில் உள்ள சுகாதரக் கேட்டையும், வீதிகளில் கழிவுகளையும் சேர்த்தே கொண்டு வருகிறது.  தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காத தமிழ் சமூகத்தில் சூழல் கேடு சுதந்திரமாக உலவுகிறது. எனவே, மழை குறித்த பயம் இருக்க வேண்டியது அவசியமாகிறது.  மழையில் நனைந்தவுடன் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு முதலில் முந்திக் கொண்டு வருவது ஜலதோசம். மூக்கடைப்பு. மூக்கில் நீர் ஒழுகுதல்.  இதற்கு காரணம் மழையோடு வந்த கிருமி மூச்சுக்குழாயில் தொற்றிக்கொள்வதுதான்.  மூச்சுக்குழாயில் உள்ள கிருமி நுரையீரலுக்கு பரவினால் நிமோனியா காய்ச்சலுக்கு கொண்டுபோய்விடும் என்கிறார்கள் மருத்துவர்கள். 

மழைநீரும் கழிவு நீரும் இணைந்து  தெருவோரகங்களில் தேங்குகின்ற நாள்கள் எல்லாம் கொசுக்களுக்கு தீபாவளிதான்.  கொசு அசுரன் அரசாங்கம் அடிக்கிற பூச்சிக் கொல்லிகளுக்கெல்லாம் கட்டுப்படுவதில்லை.  ஆயுளைக் குறைவாகக் கொண்ட கொசு, மனிதனின் ஆயுளைக் குறைக்கின்ற நோய்களை உருவாக்குவதில் அசுரபலம் கொண்டு கடிக்கிறான்.  இந்தக் கொசுக் கடியால் மலேரியா, யானைக்கால் நோய் எனும் பைலேரியா நோய் மனிதனிடம் குடிகொள்கிறது.  மனிதன் குடியிருக்கின்றபகுதியில் குடிக்கின்ற நீர், குளிக்கின்ற நீர் திறந்து இருந்தாலும் இங்கு கொசு உற்பத்தியாகும்.  இந்த நீரில் உருவாகின்ற கொசு கடிப்பதால் டெங்குக் காய்ச்சல், குளிரும் காய்ச்சல், உடல்வலி போன்றவை வருகின்றன. மழைக் காலங்களில் பாதுகாப்பில்லாத தண்ணீரைக் குடிப்பது வலியை வலிய வாங்குவதற்குச் சமம் ஆகும்.  குடிநீரில் கழிவு நீரோ, எலியின் சிறு நீரோ உட்புகுந்து நம் உடலுக்குள் புகுந்துவிட்டால் அது தரும் எதிரிவினை டைபாய்டு காய்ச்சல், காலரா, மஞ்சள்காமாலை, டயரியா.கெப்டிடிஸ் ஏ வகை வைரஸ் கிருமி முதலில் ஈரலைத் தாக்கி, மஞ்சள் காமாலை வருவதற்கு வழி செய்யும்.  இந்த வைரஸ் கிருமி மல ஜலத்திலிருந்து பரவும். கெப்படிஸ் ஈ வகை வைரஸ் கிருமி எலி மூலமாக பரவுகிறது.  இதனை எலி காய்ச்சல் என்றும் கூறுவதுண்டு. பாக்டிரியாவால் தாக்கப்பட்ட எலிகளின் சிறுநீர் தண்ணீரில் கலந்து விடுகிறது.  அந்தத் தண்ணீரின் வாயிலாகவே எலி காய்ச்சல் வருகிறது.  இந்தக் காய்ச்சல் உயிரைக் கூட பலிவாங்கி விடும்.  காய்ச்சல், மூட்டவலி, மஞ்சல் காமலை ஆகியவை எலி காய்ச்சலின் முன்னோடிகள்.     இந்ந வலிகளிலிருந்து விடுபட வழிகளே இல்லையா.... இருக்கிறது. 

தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து, பின் ஆற வைத்து, பிறகு வடிகட்டிக் குடிக்க வேண்டும்.  பாட்டில் தண்ணீர் குடிக்கிறேன் பாதுகாப்புதானே என்று நினைத்துக்கொண்டு இருக்க வேண்டாம்.  பாட்டில் தண்ணீரின் பாதுகாப்பு எந்தளவிற்கு என்பதை உறுதியிட முடியாது.  எனவே அந்தத் தண்ணீரையும் காய்ச்சிக் குடிப்பது சாலச் சிறந்தது.  அதே போல கோலா பானங்களையும் தவிர்ப்பது நல்லது.  பாதுகாப்பான தண்ணீரை உட்கொள்வதோடு தன்சுத்தமும் அவசியம் ஆகும்.   சாப்பிடுவதற்கு முன் கைகளை நன்றாக கழுவ வேண்டும்.  கழிவறைக்கு சென்று திரும்பியதும் கைகளை நன்றாக கழுவது அவசியம். சோப்புப் போட்டு கழுவலாம்.  இல்லை நமது பாரம்பரிய முறையான சாம்பளை போட்டு கை கழுவதும் சரியான முறையாகும்.  ஈ, கொசு மொய்த்த பண்டங்களை சாப்பிடுவதை தவிர்த்துவிடவும்.

மழைக்காலங்களில் பலரும் அவதிப்படுவது மெட்ராஸ் ஐ என்று சொல்லக்கூடிய கண் சார்ந்த நோயால்.  இது பாக்டிரியாவால் வரக்கூடியது.  இந்த பாக்டிரியாவின் வளர்ச்சிக்கு மழைக்காலத்தில் இருக்கக் கூடிய குளிர்ந்த ஈரப்பதமான சூழல் வழி வகுக்கிறது.  தொட்டவுடன் பற்றிக்கொள்ளும்  ஒரு தொற்று வியாதி மெட்ராஸ் ஐ. பாதிப்புக்குள்ளான கண்ணைத் தொட்டு அதே கையால் பிறரைத் தொட்டால் கையிலிருந்த பாக்டிரியா சட்டென ஒட்டிக்கொள்ளும்.   பார்த்தால் வரும் என்பது பழங்கதை.  ஒருவர் பாதிக்கப்பட்டால் மற்றவர்களுக்கு வேகமாகப் பரவும்.  எதிர்ப்புசக்தி குறைந்தவர்களிடம் எளிதாகத் தொற்றிக்கொள்ளும்.  கண் சிவத்தல், வீங்குதல், அரிப்பு இவை ஆரம்ப நிலை அறிகுறிகள்.  அதனைத் தொடர்ந்து வெள்ளை நிரவ திரவம் கண்களின் ஓரத்தில் வெளியேறும்.  அரிப்பு இருக்கிறதே என்று கண்களை தேய்க்க கூடாது.  இதற்கு பாட்டி வைத்தியம் எல்லாம் பார்க்க வேண்டாம்.  ஊரில் சொல்கிறார்கள் என்று எண்ணெய் விடுவது நல்லதல்ல.

மெட்ராஸ் ஐ சுத்தமாக இருந்தால் கட்டுப்படும்.  வெள்ளை திரவம் வரும் வரை வெளியிடங்களுக்கு செல்லாமல் வீட்டில் இருப்பது, நன்றாக கைகளை கழுவுவது சிறந்தது.  நோய் வந்தவர் பயன்படுத்திய துண்டு, கைக்குட்டை சோப் போன்றவற்றை பயன்படுத்த வேண்டாம்.  ஓரே அறையில் தங்குபவர்கள் தனித் தனியாக உடைமைகளை பயன்படுத்த வேண்டும். ஒரு கண்ணிலிருந்து அடுத்த கண்ணிற்கு பரவ நிறைய வாய்ப்புள்ளது.  கிருமி பாதித்த கண்ணைத் தொட்டு அதே கைகளால் அடுத்த கண்ணைத் தொடும்போதுதான் பரவுகிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.  மருந்து, சுத்தம், கட்டுப்பாடு என்ற மூன்று முறையைப் முறையாக கடைப்பிடிக்கும் போது மற்றவர்களுக்கு பராவமல் மட்டுப்படுத்த முடியம்.

மழைக்காலங்களில் செருப்புப் போடாமல் வெளியே செல்ல வேண்டும்.  செருப்புப் போடாமல் போகும் போது பல்வேறு வினைகளை நாம் சம்பாதிக்க வேண்டிவரும்.  கால் விரல் இடுக்குகளை நன்றாக சுத்தம் செய்வது சிறந்தது. 
மழைக்காலங்களில் குழந்தைகளை சரியாக கவனிப்பது பெற்றோர்களின் கடமையாகும்.  கோடைகாலத்தில் விடுமுறை விட்டுவிட்டு, மழைக்காலங்களில் பள்ளிகள் நடத்தப்படுகிறது நமது நாட்டில். எனவே, குழந்தைகளின் கல்வி நலனை கருத்தில் கொண்டு ஆரோக்கியமாக வைத்திருக்க நாம் பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள வேண்டும்.  உடலில் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் வைட்டமின் நிறைந்த காய்கறி பழங்களை உண்ணக் கொடுங்கள்.  ஆகாத, மேற்கத்திய உணவு முறைகளை விட்டுவிடுங்கள்.  சேகதி சேருமிடங்களில் விளையாட விடாதீர்கள்.  வீட்டையும், நாம் வாழும் தெருக்களையும் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். 

மேகம் கருக்குது மின்னல் அடிக்குது என ஜோதிகா போல மழையில் ஆடுவதற்கு விருப்பம் தான்.  ஆனால், நம் உடலின் எதிர்ப்பு சக்தியையும் தெரிந்து கொண்டு மழையில் அடடா மழைடா அடை மழைடா என ஆட்டம் போடுவது நல்லது.  குறிப்பாக முதல் மழையில் நனைவதை அறவே தவிர்த்திடுங்கள்.  அந்த மழை வான்வெளியில் உள்ள அனைத்தையும் தயவு தாட்சன்யமின்றி தரைக்கு கொண்டு வரும்.  நாம் வளர்ந்திருக்கிறோம் என்பதின் வெளிப்பாடு நமது சுகாதரத்திலும் ஆரோக்கியத்திலும்தான் வெளிப்படும்.  வளர்ச்சியைப் பார்ப்போம்.

மழைக்காலம் கால்நடைகளையும் விட்டுவைப்பதில்லை  இக்காலங்களில் கோமாரி, தொண்டை அடைப்பான், சப்பை நோய் போன்ற நோய்கள் தாக்க வாய்ப்புள்ளது.  கோமாரி நோயுள்ள மாடுகளின் வாயில் அதிகளவில் நீர் கசியும், சரியாக தீவனம் திங்காது. தொண்டை அடைப்பான் நோய் தாக்கியிருந்தால் உடல் சூடு, தொண்டை வீக்கம், மூச்சு விடுவதில் சிரமம் உள்ளிட்ட அறிகுறிகள் இருக்கும்.  நோய்கள் தாக்கியிருப்பது தெரிந்தவடன் கால்நடை மருத்துவர்களை பார்த்து கால்நடைச் செல்வங்களை காக்கலாம்.
 பசுமைத்தாயகம் சுற்றுச் சூழல் இதழில் வெளிவந்துள்ளது.