Wednesday, June 15, 2011

அரிசி அரசியல்



"மீனை தானமாக தருவதைவிட, மீன் பிடிக்க கற்றுத் தருவதே மேல்" என்று ஒரு முதுமொழி உண்டு. இதே போல் இன்னொன்றும் சொல்வதுண்டு "தண்ணிக்குள் தத்தளித்துக் கொண்டிருப்பவனுக்கு உணவுப் பொட்டலங்களை தருவதை விட அவனை கரையேற்றுவதுதான் சிறந்தது" என்று. ஆனால் கடந்த கால தமிழக அரசாங்கம் மீனை தானமாக தருவதிலேயே குறியாக இருந்தது.  காரணம்... "வாக்குகள்". வாக்குகளை மனதில் வைத்து மட்டுமே இலவச திட்டங்கள் தீட்டப்பட்டு மக்களின் மனநிலையில் எதிர்மறையான மாற்றத்தை கொண்டுவந்து விட்டது. பல இலவசங்கள் பிச்சை மனோபவத்தை, சோப்பேறித்தனத்தை வளர்க்க கூடியவை என்பதில் உள்ளபடி சந்தேகமில்லை.

"நெல்லா படியளந்தா நெடுநேரமாகுமின்னு
அரிசியா படியளந்தா ஆக்க நேரமாகுமின்று
சோறா படியளந்த சோழ நாடு". சோழ நாட்டின் பெருமை சொல்லும் ஒரு கிராமிய பாடலின் சிலவரிகள். இங்கு படியளத்தல் என்பது செய்யும் வேலைக்கு கொடுக்கும் ஊதியம். சோறா யாருக்கு படியளப்பார்கள்? வீட்டில் இருக்கும் பண்ணையாள்களுக்கு, பரதேசிகளுக்கு, இப்படி... வீடு குடும்பம் உள்ளவர்களுக்கு சோறாக படியளக்க வேண்டிய அவசியமில்லை. பணமாகவோ அல்லது பொருளாகவோ தான் படியளக்க வேண்டும்.  ஆனால் சோறாக படியளந்த என்று கொஞ்சம் மிகைப்படுத்தி சொன்ன சோழ நாட்டில் பிறந்தவர் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்ற திட்டத்தை தனது ஆட்சியில் நடைமுறைப்படுத்தினார்.  மேலோட்டமாக பார்க்கும் போது இது நல்ல திட்டம் என்றுதான் தோன்றும். ஏழை எளியவர்களுக்கு இது ஏற்ற திட்டம் என்று பரப்புரையாற்ற தோன்றும். இது குறித்து தேர்தலுக்கு முன்பாவது கொஞ்சம் ஆழமாக யோசித்தாகவேண்டும்.

ஐந்து நபர்கள் உள்ள ஒரு ஏழைக்குடும்பத்திற்கு நாற்பதிலிருந்து நாற்பத்தைந்து கிலோ அரிசி வேண்டும். தற்போது நியாய விலைக் கடையில் எடையில் நியாயம் குறைந்து இருபது கிலோ கிடைக்கிறது. இருபது கிலோ இருபது ரூபாய்க்கு. நல்லது. மீதமுள்ள இருபது முதல் இருபத்தைந்து கிலோ அரிசிக்கு எங்கே போய் நிற்பது? பலசரக்கு கடைகளில் (வெளிச்சந்தையில்)  தான்.  இங்கு அரிசிக்கு தகுந்தாற்போல் இருபத்தைந்திலிருந்து முப்பதைந்து வரை. சுமார் ஐநூறு ரூபாய் அரிசிக்கு செலவு செய்ய வேண்டியுள்ளது. ஒரு ரூபாய்க்கு அரிசி தந்தும் பெரிய பலன் ஏதுமில்லை.  அதில் அரிசியின் தரம் நேரம் இடம் நாளுக்குத் தகுந்தாற் போல்மாறுபடும்.

எடை குறைவைப் பற்றி பேசினால் ரேசன் கடைகளில் உள்ள ஊழியர்கள் "ஒத்த ரூபாய்க்கு அரிசி வாங்கிட்டு அதுல சட்டம் வேற பேசுவீங்களாக்கும்" என எகத்தாளம் பேசுகின்றனர்.  ஒத்த ரூபாய் அரிசிக்கு மத்திய அரசு பத்துபன்னிரெண்டு ரூபாய் மானியம் தருகிறது. மாநில அரசும் பங்கெடுக்கிறது. யாரும் அவங்க 'அப்பன் வீட்டுல இருந்து கொடுக்கலை' என திருப்பி பேசி மூவாயிரம் ரூபாய்க்கு சம்பள்த்தில் இருப்போரிடம் சண்டை போடுகின்றனர். ஒத்த ரூபாய் அரிசியால் ஏளனப் பேச்சுக்கும் ஆளாக வேண்டிய நிலையில் உழைக்கும் வர்க்கம்.

அட பெரியவூட்டு ஐயா நிக்காரே!
என்னைய்யா ரேஷன்கடையில...

"வீட்டுல புதுசா ரெண்டு நாய்ங்க
வாங்கி இருக்கேன்ல"

வரிசையில் அரிசி வாங்க
நின்றவர்களுடன் சேர்ந்து
ரேஷன் தின்னும்
நானும் ஒரு நாயாகிப் போனேன்...
என்ற வினோத்தின் கவிதையின் உண்மை தன்மையினை உற்றுப்பார்க்கும் போது ஒரு வர்க்கம் ரேசன் அரிசியை வாங்கி நாய்க்குப் போடுவதும், கோழிக்குப் போடுவதும் பசு மாட்டிற்குப் போடுவதும்.... தொடர்ந்து மனிதனையே கேவலப்படுத்தும் நிலைக்கு தள்ளிவிட்டது. எதிர்த்த வீட்டுக்காரன் பொண்டாட்டி அரிசியை வாங்கி கோழிக்குப் போட ஏ வீட்டுக்காரி இராத்திரிக்கு சமைக்க முரத்தில் போட்டு கருப்பார்த்துக்கொண்டிருந்தால்... என்கின்ற நிலையை உருவாக்கித் தந்தது இந்த ஒத்த ரூபாய் அரிசி.  நல்ல திட்டங்களை தள்ளி வைத்துவிட்டு ஒத்த ரூபாய்க்கு தந்த மானியங்கள் மண்ணில் சிதறிக் கிடக்கின்றன.

அண்டை மாநிலங்கள் தண்ணீருக்கு சண்டை போட்டுக்கொட்டிருந்தாலும் இங்குள்ள ஒரு கூட்டம் அரிசியை கடத்துகிறது.  மக்களுக்கு சென்றடையவேண்டிய மானியம் கொள்ளைபோகிறது. அரசும் ஒன்றும் பெரிதாக செய்ததாக தெரியவில்லை.  ஒரு வேளை அரசுக்கு தெரிந்தே கூட நடக்கிறதோ!  ரேசன் கடைகளிலிருந்து மூடை மூடையாக லோடு லோடாக போவதைப் பார்க்கும்போது இது கடத்தலாக தெரியவில்லை.  இப்படி ஒரு நிலைமையை உருவாக்கியது ஒத்த ரூபாய் அரிசி.... விநியோக முறையில் உள்ள பிரச்சனை குறித்து சிந்திதால் சில நாட்டகள் அரிசியின் தரம் வெண்மையாக இருக்கும். அப்புறம் கொஞ்ச நாள் புழுத்துப் போன அரிசி நான் வந்துட்டேன் என்பதை நாலு தெரு தாண்டி வரும்போது சொல்லும்.  இதற்கு காரணம் அறுவடை காலத்தில் கொள்முதல் நெல்லை அப்படியே அரிசியாக்கி தருவது. தரம் கொஞ்சம் சரியாக இருக்கும்.  நாள்பட்ட இருப்பு வாடையடிக்கும்.  பாவம் அது என்ன செய்யும் மழையும் வெயிலும் வந்து போக வசதியுள்ள குடோன்களும், வளைந்து கொடுக்காத நிர்வாகமும் வண்டு உருவாக வைத்து விடுகிறது.  நல்ல அரிசி கள்ளச் சந்தைக்கு சீக்கிரமும், புழுத்த அரிசி இன்னொரு அரவையில் மெதுவாகவும் போய்க்கொண்டுதான் இருக்கிறது.

அரிசி அரசியல் செய்திட்ட மிகப்பெரிய சாபம் சிறு தானியங்களை மறக்கடிக்கச் செய்தது.  ஆரோக்கியம் நிறைந்த சிறு தானியங்கள் மருத்துவர் தரும் மருந்துச் சீட்டுக்கு வந்துவிட்டது. வரகு, கேழ்வரகு, திணை, குதிரைவாலி, இருங்குச்சோளம் என பல சிறு தானியங்களை பயிரட மறக்க வைத்ததும், உணவில் வெறுக்க வைத்ததும் அரிசி.

சில தமிழர்களிடம் நான் ஏன் உழைக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி விட விவசாய வேலைக்கு ஆள் கிடைக்காமல் அவதிப்படுகின்ற நிலையையும் அரிசி அரசியல் ஏற்படுத்திவிட்டது.

ரோட்டோர கடையில டீ அஞ்சு ரூபாய்க்கு மேல
பஸ்ஏறி போகனுன்னாலும் டிக்கெட் அஞ்சு ரூபாய்க்கு மேல
கோழிக்கறி நூத்தியம்மதுக்கு மேல
ஆட்டுக்கறி முன்னுத்தியம்பதுக்கு மேல
உப்பு பத்து ரூபாய்க்கு மேல
பருப்பு நூறு ரூபாய்க்கு மேல
வெங்காயம் நாலஞ்சுமாசாம அய்ம்பது ரூபாய்க்கு மேல
இவ்வளவு ஏன்?
அய்யா
நகரம் மாநகரங்களில் கட்டணக் கழிப்பறைக்கு போகக்கூட ஐந்து ரூபாய்... வேணும். அப்புறம் எதுக்கு இந்த ஒத்த ரூபாய் அரிசி.

மலிவு விலை அரிசித் திட்டம் மக்களுக்கு உதவும் என்று ஆட்சியாளர்கள் நினைத்தாலும் ஒரு மட்டத்திற்கு மேல் அதன் விலையைக் குறைப்பதில் எந்தவிதத்திலும் அர்த்தமில்லை.  அப்போது ஒரு ரூபாய்க்கு அரிசி, இப்போது இலவசமாக அரிசி. இலவசத்தை பொருளாகத் தருவதும், பெறுவதும் அரசுக்கும் மக்களுக்கும் நல்லதல்ல.

தமிழகத்தில் ரேசன் கடைகளின் எண்ணிக்கையை விட கூடுதலான எண்ணிக்கையில் உள்ள மதுபானக் கடைகளில் ஒரு மாதத்திற்கு வாங்குகின்ற அரிசி விலையை விட ஒரே நாளில் கூடுதலான தொகைக்கு மது அருந்தும் தமிழனால் அரிசி வாங்க முடியாதா? மது வருமானத்தில் அவனுக்கே இலவசங்கள் தருவதும், அதிலும் கொள்ளை போவதும் தகுமோ!

அரசின் திட்டங்கள் உழைக்கும் இனத்தினை உயர்த்துவதாக இருக்க வேண்டும். உழைப்பே உயர்வு என்ற தாரக மந்திரத்தை உச்சரித்த தமிழனை இலவச மாயை பிடித்திடலாகது.  கை கால்களில் எல்லாம் விலங்கு போட்டு ஒரு ரூபாய்க்கு அரிசு கொடுத்து உட்கார வைக்க ஆட்சியாளர்கள் நினைக்கின்றனர். நமது எதிர்பார்ப்பு எங்களது விலங்குகளை அவிழ்த்துவிட உதவுங்கள். நாங்கள் ஓடி உழைக்கிறோம் என்பதே.
.
ஜீன் 2011 பயணம் இதழில் வெளிவந்துள்ளது.


No comments: