Wednesday, June 15, 2011

அணை பலமாகத்தான் இருக்கும்...


பிறந்த நாள் கொண்டாட்டம் என்றால் இன்றைக்கு சினிமாவை சார்ந்தவர்களுக்கு என்றாகிவிட்ட நிலையில்... சனவரி 15ம் தேதி மதுரையிலிருந்து குமுளி வரைக்கும் வண்ணச் சுவரொட்டியில் ஒருவருக்கு 170வது பிறந்த நாள் வாழ்த்து செய்தி. அத்தோடு அவரது பிறந்த நாள் விழாவில் பொங்கல் வைத்தல், பிள்ளைகளுக்கு பெயர் சூட்டுதல், விளையாட்டுப் போட்டிகள் நடத்துதல் என விமர்சையாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
170வது பிறந்தநாள் என்பதால் சினிமாவை சார்ந்தவர்களாக இருப்பதற்கு சாத்தியமில்லை.... விடுதலைப் போராட்ட வீரர்... இல்லைவாழ்த்துச் சொன்னவர்கள் உழவர்கள்.  அப்ப யாருக்கு... ஆம்... உங்கள் யூகம் சரியாக இருந்தால் அந்த அயல்நாட்டு மாமனிதர் பொறிஞர் கர்னல் ஜெ. பென்னிகுக்குத்தான்.  இந்தப் பெயர் மதுரை மண்வாசத்துடன் இணைந்து விட்ட பெயராகிவிட்டது. திருமண அழைப்பிதழ்களில் கூட மாயன், விருமாண்டி, கருப்பணணனோடு பென்னிகுக் ம் லோகன்துரையும் இடம் பெற்றிருக்கும். ஆங்கிலேயர்கள் விட்டுச் சென்ற குழாய் டவுசர் இல்லை இந்தப் பெயர்கள். எடுத்த பணியை தொடுத்து முடித்தவரின் பெயர் கர்னல். பென்னிகுக்.  அவருக்கு துணையாக இருந்தவர் லோகன் துரை.

கேரள மாநிலம்பண்டைய வேந்தன் சேரனின் பகுதி என்று சொன்னால் தப்பேதும் இல்லை. இன்று நமது பக்கத்து மாநிலம். நீண்ட மேற்கு தொடர்ச்சி மலையைக் கிழக்கு எல்லையாகவும், அரபிக் கடலை மேற்கு எல்லையாகவும் கொண்டு, நீண்ட வால் போன்ற சமவெளிபரப்பையும், மலைச்சரிவையும் கொண்ட பகுதி. தென்மேற்கு பருவமழை அதிகம் பெறும் பகுதி. மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகிற 44 நதிகள் குறுகிய பகுதிகளிலே பாசனம் செய்யப்பட்டு மிகுதியான தண்ணீர் அரபிக்கடலில் கலந்து வீணாகிறது.

மேற்குதொடர்சி மலையின் கீழ்புறம் அமைந்துள்ள தமிழ்நாட்டின் பழைய மதுரை மாவட்டம் இராமநாதபுர மாவட்டங்களில் போதிய மழையில்லை. பஞ்சம் பட்டினி. ஊர்களை விட்டு இடம் பெயர்தல்.  இத்தோடு குற்றச் செயல்களில் ஈடுபடுவது வேறு.  பஞ்சம் பட்டினியையும் குற்றச் செயல்களையும் குறைக்க அன்றைய ஆங்கிலேய அரசு மேற்கு நோக்கிப் பாய்கின்ற நதியில் அணை அமைத்து மலையைக் குடைந்து தண்ணீர் தந்தது. இந்த மாபெரும் பணியில் தன்னை அர்ப்பனித்தவரில் ஒருவர்தான் கர்னல் பென்னிகுக்.

பொறியியல் அற்புதம் என்று வர்ணிக்கப்படுகிற பெரியாறு அணை 2200 அடி உயரத்தில் பெரியாறு எனும் காட்டாறை தடுத்து கட்டப்பட்ட தடுப்பணை எட்டு (1887-1895) ஆண்டுகளில் முடிக்கப்பட்ட வரலாற்று சாதனை.  அணைக்கான இடத்தைப் பகிர்வு செய்ததிலும், தொழில்நுட்ப வடிவமைப்பை உருவாக்கியதிலும் மேஜர் வைரஸ எனும் பொறியாளரின் பங்கு முக்கியமானது. இந்த திட்டத்தை செயல்படுத்தியவர் கர்னல் பென்னிகுக்.

லட்சியம் புனிதமானது. பணி அதைவிடக் கடுமையானது.  அடந்த காடு. சாலை வசதி இல்லை. வாகன வசதி இல்லை. கொடிய வன விலங்குகள், விசப்பூச்சிகள், கொசுக்கள்... இப்படி எண்ணில் அடங்கா தடைகள்... போதக்குறைக்கு பெரும் மழை வேறு.  பணியில் ஈடுபட்டவர்கள் ஆயிரக்கணக்கில் இறந்தனர். அணைகட்டும் புனிதப் பணியில் ஈடுபட்டு மாண்டு போன பலரின் பெயர் வரலாற்றுத் தடங்களில் இல்லை.  ஆனைவிரட்டி ஆங்கத்தேவன், காடுவெட்டி கருப்பத்தேவன் போன்ற பெயர்கள் மட்டுமே நினைவில்...

ஆங்கிலேயப் பொறியாளர்களும் தங்களது உயிரைத் தந்துள்ளனர்.  ஆண், பெண், குழந்தை, அயல்நாட்டுக்காரர் என பலரின் ரத்தம் வாங்கப்பட்ட பெரியாறு அணை அவ்வளவு சுலபமாக சாய்ந்துவிடாது.  ஆறு குறுகலாகச் செல்லும் மலை இடுக்குப் பகுதியில், பெரும் நிலப்பாறையை அடித்தளமாகக் கொண்டு, இயற்கையான இரண்டு பாறைக் குன்றுகளை இணைத்து, தெற்கு, வடக்காக 1200 அடி நீளத்தில் கட்டப்பட்டுள்ளது அணை.  இதற்கு முன் 240 அடி நீளத்தில் பேபி டேம் எனும் குட்டி அணையும் கட்டப்பட்டுள்ளது.  அணையின் தரைமட்டத்திலிருந்து அணையின் மேல்மட்ட உயரம் 162 அடியாகும்.  அணையின் அடிப்பாக அகலம் சுமார் 200 அடியாகும்.  152 அடிவரை நீரைத் தேக்குவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.  அணையின் இருபுற கட்டுமானச் சுவர்கள் சோதனை செய்து தேர்வு செய்யப்பட்ட கடினக் கற்களால், அரைத்த சுண்ணாம்புக் காரைக் கொண்டு கட்டப்பட்டது.  கட்டுமானத்தின் உட்பகுதி கருங்கல் மற்றும் சுட்ட செங்கல், ஜல்லி கலந்த சுண்ணாம்புக் காரையால் நிரப்பப்பட்டுள்ளது.  இயற்கை பாறைக் குன்றுகளுடன் இணைத்து கட்டப்பட்டுள்ளதால் அணையின் பலம் அதிகம் என்றே வல்லுநர்கள் கருதுகின்றனர்.

வல்லுநர்களும் உழவர்களும் வரிந்துகட்டி கட்டிய அணை ஒரு “தடுப்பணை“.  மற்ற அணைகளைப் போல் நீரை விநியோகிக்கும் மதகு அமைப்பு கிடையாது.  அணையின் நீர்த்தேக்கம் 104 அடி உயரத்திற்கு வந்த பின்பு, நீர் தமிழ்நாடு நோக்கிப் பாயும் வகையில் தேக்கத்தின் வடபகுதியிலிருந்து வெட்டப்பட்ட வெட்டுக்கால்வாய் மற்றும் அதன் தொடர்ச்சியாக மலையைக் குடைந்து அமைக்கப்பட்ட சுரங்கக் கால்வாய் வழியாக கீழிறங்கி மலை அடிவாரத்தில்  தமிழ்நாட்டில் உள்ள வைரவனாற்றில் சேர்ந்து, அதன் பின் வைகை ஆற்றில் கலந்து பாசனத்திற்கு பயன்படுகிறது.  தமிழ்நாட்டில் சுமார் 1,32,000 ஏக்கர் பாசன வசதி பெறும் அளவிற்கு அரிய பணிகளை செய்திட்ட பொறியாளர்களை வணங்குதல் தான் சனவரி 15ம் தேதி பல்வேறு கிராமங்களில் நடைபெற்றது.

பொறியாளர் பென்னிகுக் அவ்வளவு எளிதாக இந்தப் பணியினை செய்திடவில்லை. முதலில் அணை கட்டி முடிக்கப்பட்டது.  ஆனால்  எதிர்பா£ராத வெள்ளப் பெருக்கால், சில நாட்களிலேயே அணை உடைந்து போனது. குற்றவாளி என அரசாங்கத்தால் தீர்மானிக்கப்பட்டு கடும் விசாரணைக்கு ஆளானார்.  தேர்ந்த ஆய்வுக்குப் பின் தடுப்பணைகள் கட்டப்படாததால்தான் உடைப்பு ஏற்பட்டது என நிருபித்து அதற்கான நிதியை அரசாங்கத்திடம் கோரினால்.  அரசாங்கம் எள்ளி நகையாடியது. வீண் முயற்சி என கண்டிக்கவும் செய்தது. இந்த அணை உருவாக வேண்டி தங்கள் உடல் பொருள் ஆவி என அத்தனையையும் இழந்த சாமானியர்களை பார்த்து மனம் கசிந்தார். இங்கிலாந்தில் தனக்கிருந்த சொத்துகளையெல்லாம் (கட்டிலைக் கூட) விற்று பணம் திரட்டிக் கொண்டு வந்து அணையை மீண்டும் உருவாக்கினார்.  பழைய மதுரை மாவட்டமே பாசன வசதி பெற்றது. இன்று குடிநீர்(உயிர் நீர்) இந்த அணையாலேயே பூர்த்தி செய்யப்படுகிறது. 

பலதரப்பட்டடோரை ஒருங்கிணைத்து இப்பாருக்கு முன்னுதாரணமாக அணையைக் கட்டி முடித்த பென்னிக்குக்கையும் லோகன் துரையும் உழவர்கள் யாரும் மறக்க மாட்டார்கள்.  சினிமா நடிக நடிகைகளின் பெயர், ராசிப்படி பெயர் வைக்கின்ற இந்த காலத்தில் மேற்கண்டவர்களின் பெயர்கள் தைத் திருநாளில்சூட்டி மகிழ்ந்ததை காணமுடிந்தது. குல தெய்வங்களுக்கு இணையாக பல்வேறு கிராமங்களில் பொங்கல் வைத்து வழிபடுகின்றனர்.  கல்லையும் மண்ணையும் காட்டையும் மாட்டையும் சாணியையும் இன்னும் கண்ணில் தட்டுப்பட்டதெல்லாம் வணங்கும் சமூகத்தில் இவர்களை வணங்குவது வாழ்த்த வேண்டிய ஒன்றுதான். 

இந்த பூமிப்பந்தில் எங்கோ பிறந்து கல்வி கற்றது வளர்ந்து, தான் வந்த இடத்தில் தேசம் மொழி இனம் பண்பாடு கடந்து அர்ப்பணித்து அவர் செய்த செயலுக்கு சனவரி 15ல் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் செய்த மரியாதைக்கு முதல் மரியாதை.

பொறியாளர் பென்னிகுக் அவர்களுக்கு பல இடங்களில் சிலை வைக்கப்பட்டுள்ளது.  அதில் அவர் அணை திறப்பின் போது உதிர்த் வார்த்தைகள்.. இடம்பெற்றுள்ளன.. அவை

நான் இப்புவிக்கு வந்து செல்வது ஒரு முறைதான்
ஆகையால்,
நான் ஒரு நற்செயல் புரிந்திட வேண்டும்
அதை தள்ளி வைப்பதற்கோ தவிர்ப்பதற்கோ
வாய்ப்பில்லை...
ஏனென்றால்
நான் மீண்டும் இப்புவிக்கு
வரப்போவதில்லை..

மறுபிறப்பின் மீது நம்பிக்கையில்லா நாத்திகன் இன்னும் ஏழு பிறப்பிலும் நினைக்கும் வண்ணம் தனது செயலால் நிற்கிறார்.  எங்கோ பிறந்தவர் நம் பஞ்சம் தீர்க்க பாடுபட்டார்.  ஆனால், கேரளத்துக்காரர்கள் புதிய அணை கட்ட வேண்டும் என்று ஆய்வு செய்கின்றனர். காரணம்... அணை 100 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது.  நில நடுக்கம் வந்தால் ஆபத்துக்குள்ளாகும்.  நில நடுக்கம் வந்தால் புதிதாக அணை கட்டினால் தாங்குமோ?

அகலமான அடிப்பாகத்தைக் கொண்ட இந்த தடுப்பணை சின்னச் சின்ன நிலநடுக்கத்தையும் கால வெள்ளத்தில் சந்தித்து சாதனையாக நின்றுள்ளது. மொகலாயர் காலத்தில் சுண்ணாம்புக்காரையால்  கட்டப்பட்ட  கட்டிடங்கள் கம்பீரமாக நிற்கின்றன. இன்றும் சுண்ணாம்புக்காரையால் கட்டப்பட்ட பாலங்கள் பயன்பாட்டில் உள்ளது.  அதற்குப் பின்பு சிமெண்டால் கட்டப்பட்ட பாலங்கள் பலவீணமடைந்துள்ளன. என்னை விட என் தந்தை வலுவான பணிகளை செய்கிறார்.

என் கேரளச் சகோதரனே என்ன வேண்டும்
அசலூர்க்காரன் காட்டிய பாசம் அண்டை வீட்டுக்காரன் உன்னிடம் இல்லையே!
நான் பகிரங்கமாகவே கேட்கிறேன்? 999 ஆண்டு ஒப்பந்தம் மாற்றியமைக்கப்பட வேண்டும் அது தானே உன் எண்ணம்

பங்காளிகளுக்குள் பகிர்ந்து கொள்ள வேண்டியதை பகிர்ந்து கொள்வோம்.   அதற்காக எதைஎதையோ சொல்ல வேண்டாம்.  எங்கள் முன்னோர்களின் உழைப்பும் உறுதியும் இந்த அணையில் இருக்கிறது. வேதனை வேலைப் பாய்ச்ச வேண்டாம்.

அணைக்கு ஆயுட்காலம் முடிந்துவிட்டது என்று மற்றவர்களின் ஆயுட்காலத்தை முடக்கின்ற செயல் எப்போதும் கண்டிக்கத்தக்கது.  அணை பலமாக உள்ளது. வந்தவர்கள் வல்லுநர்கள் பார்த்தவர்கள் பதிந்துள்ளனர். அணை பலமகாத்தான் இருக்கும்.  அணையை உருவாக்கியவர்கள் பணியாகச் செய்யவில்லை.  உள்ளார்த்தமாக உருவாக்கியிருக்கிறார்கள்.  காலம் கடந்து கட்டமைப்பில் ஈடுபட்டவர்களின் பெயரைச் சொல்லும்.  பிறருக்காக வாழ்ந்தவர்கள் எல்லோர் மனதிலும் இருப்பார்கள்.  பெரியாறு அணையின் பிதாமகன்கள் யாவரும் நெஞ்சங்களில் நிலைத்து நிற்பார்கள்.


பிப்ரவரி 2011 பசுமைத்தாயகம் சுற்றுச் சூழல் இதழில் வெளிவந்துள்ளது.

No comments: