Tuesday, December 28, 2010

சகியே.. இனியும் சகிக்கவோ...

பேச வேண்டியதை நானும் பேசுகிறேன்...
சகியே.. இனியும் சகிக்கவோ...
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தெப்பத்துப்பட்டிக்கு வத்தலக்குண்டிலிருந்தும், உசிலம்பட்டியிலிருநதும் தினசரி நான்கைந்து முறை பேருந்துகள் வந்து செல்கின்றன.  இப்பேருந்துகள் நிற்பது அந்த ஊர் கோவிலுக்கு முன்பு உள்ள பகுதியில்... ஊருக்குள் வருகின்ற பேருந்துகள் இங்கு குறைந்தபட்சம் பத்து நிமிடமாவது நிற்கும். ஆனால். இங்கு இரண்டு பேருந்து நிறுத்தம். முதல் பேருந்து நிறுத்தத்திற்கும் இரண்டாவது பேருந்து நிறுத்தத்திற்கும் இடையில் ஒரு பள்ளிக்கூடம் மற்றும் பொதுக் கழிப்பறைதான் உள்ளது.  பத்து நிமிடத்திற்கு மேல் பேருந்து நின்றிருந்தாலும் சில பெண்கள் அந்த பீ மந்தை பேருந்து நிறுத்தத்தில்தான் ஏறுகின்றனர்.  இந்த இடத்தில் நிழற்குடையோ, மர நிழலோ இல்லை.  பின் ஏன் அந்த இடத்தில் அந்தப் பெண்கள் ஏறுகின்றனர்....

நான் பணிபுரியும் மையத்தில் பயிற்சிக்கு வந்த பெண் தலைவர்களை மதுரை மீனாட்சியம்மனை பார்ப்பதற்காக அலுவலக வாகனத்தில் அழைத்துச் சென்றோம்.  வாகனம் மதுரை ஜான்சிராணி பூங்காவிற்கு அருகில் உள்ள இடத்தில் நிறுத்தப்பட்டது.  வந்திருந்தவர்களை ஒருவர் பின் ஒருவராக இறங்கச் சொன்ன போது இருவர் நாங்கள் வரவில்லை.  வண்டியிலேயே இருக்கிறோம் என்றனர். வாங்க வாங்க என்ற வற்புறுத்தியபோது நாங்க வரக்கூடாது என்றனர்.  நீங்கள் வேற மதத்தினரா என்றால், இல்லை...! நாங்கள் வரக்கூடாது, என்று சொன்னவர்கள் அக்கா... தம்பிக்கு புரியிற மாதிரி சொல்லுங்க என்றனர்.  அது என்ன புரியிற மாதிரி...!

மதுரையில் தென்னக ரயில்வேயில் உயர் பதவியில் பணிபுரிகிற அலுவலர் மாதத்தில் ஐந்து நாட்கள் அதிகாலையில் எழுந்து வீட்டிற்கு வாசல் தெளிப்பது, கோலம் போடுவது, சமைப்பது, வீட்டைச் சுத்தம் செய்வது என அனைத்து வேலைகளையும் மனைவிக்காகச் செய்கிறார். மனைவிக்குச் சாப்பாட்டைக் கூட எடுத்து வைத்துவிடுகிறார்.  ஆனால் மற்ற நாட்களில் இவ்வாறு அவர் செய்வதில்லை.  ஏன் அந்த ஐந்து நாட்கள் மட்டும் அவ்வளவு கரிசனம்....

வத்தலக்குண்டு ஒன்றியம் சந்தையூர் ஊராட்சி மன்றத்தின் தலைவர் தெற்கு வலையபட்டியில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்திற்குள் மாதத்தின் சில நாட்கள் போவதில்லை. மன்ற கூட்டம் நடந்தால் கூட சாலையின் வடதுபுறத்தில் நின்றுதான் பேசுகிறார். மற்ற நாட்களில் சாலையின் தென்புறத்தில் உள்ள அலுவலகத்திற்கு போக முடியும்.  முக்கியமான மன்றக் கூட்டம் நடக்கும் போது கூட சாலையின் வடப்புறத்தில் நின்று எறுமைமாடு மேய்ப்பவன் போல் சத்தம் போட வேண்டியிருக்கிறது... அப்படி சாலையின் தென்புறத்தில் என்ன இருக்கிறது....

சோழவந்தானுக்கருகில் உள்ள கீழமட்டையான் கிராமத்தில் பெண்கள் வெளியூருக்கு போய்வந்தால் (சந்தைக்கு, விழாக்களுக்கு, பள்ளிக்கு) குளித்துவிட்டுத்தான் வீட்டிற்குள் போக வேண்டும்.  மாதத்தின் ஒரு சில நாட்கள் வீட்டின் ஓரத்தில் அல்லது மாட்டுக் கொட்டத்தில் சணல் சாக்கில்தான் உறக்கம்.... மற்ற நாட்களில் அந்த வீட்டின் இராணி! அந்த நாட்களில் மாடு! அதனால் தான் பெண்களை மாட்டுப் பெண் என்கின்றனரோ....

தேனி மாவட்டம் மரிக்குண்டில் ஆண்களுக்கு சாவடி இருப்பது போல் பெண்களுக்கென பிரத்யேக ஒரு வீடு உள்ளது.  குறிப்பிட்ட நாட்களில் பெண்களுக்கு அதுதான் வீடு... பள்ளி செல்கின்ற மாணவிகள் கூட அங்கிருந்துதான் செல்கின்றனர். 

வருசநாட்டில் திருவிழா சமயம்... இந்த வருசம் ஏம்ப்பா ஒங்க வீட்டில இருந்து பொங்கள் வைக்க யாரும் வரலை... அதுவா எம் பொண்டாட்டி வீட்டுக்கு தூரம்ம்ப்பா... இந்த வருசம் கொடுத்து வைக்கல... வீட்டுக்கு தூரமுன்னா?

வீட்டுக்கு தூரம், வீட்டு விலக்கு, தலைக்குத்தீருக்காங்க போன்ற வார்த்தைகளால் சொல்லப்படுவது மாதவிலக்கு அல்லது மாதவிடாய் என்பதைத்தான். இதுதான் மேற்கண்ட இத்தனைக்கும் காரணம்.. இது தீட்டாம்...  

மாதவிடாய் என்பது பூப்படைந்த பெண்ணின் உடலில் மாதந்தோறும் சுழற்சிமுறையில் நிகழும் ஒரு மாற்றமாகும். இது பெண்ணின் கருப்ப¬யிலிருந்து, யோனியினூடாக மாதத்தில் மூன்று முதல் ஏழு நாட்கள் வரை குருதி வெளியேறுவதை குறிக்கும். மருத்துவப்படி ஒவ்வொரு மாதமும் கருப்பை மடிப்புகளில் போதிய இரத்தம் நிரம்பி இருக்கிறது. 

ஒரு பெண் கர்படைவாரேயானால், கருப்பையில் தங்கும் கருக்கட்டிய முட்டைக்கு போதிய ஊட்டச் சக்தியை வழங்குவதற்காகவே இந்த குருதி நிறைந்த மடிப்புகள் உருவாகியிருக்கும். பெண் கருத்தரிக்காத நேரங்களில் இம் மடிப்புகளில்  சேர்ந்த குருதியோடு மடிப்புகள் முறிவடையும் போது நுண்ணிய குருதிக் குழாய்களிலிருந்து குருதி வெளியே கழிவாக தள்ளப்படுகிறது. இந்நிகழ்வு மாதந்தோறும் சுமார் மூன்று முதல் ஏழு நாட்கள் இந்நிகழ்வு நடைபெறுகிறது. இதனையே மாதவிடாய் என்கிறார்கள்.  இந்த மாதவிடாய் வெளியேற்றம் மாதத்திற்கு ஒருமுறை யோனிமடல் ஊடக நடைபெறுகிறது.

நமது பிறப்பை உறுதி செய்யக் கூடியது இந்த மாதவிடாய் சுழற்சி.  நம் மனித இனத்தைப் போன்றே பரிணாம வளர்ச்சியில் அடுத்த நிலையில் இருக்கின்ற சிம்பன்சி போன்ற விலங்கினங்களிடையேயும் இந்த சுழற்சி நடைபெறுகிறது.  சிம்பன்சிகளிடம் தீட்டு பார்க்கின்ற பண்பு இருப்பதற்கு வாய்ப்பிள்ளை.  ஏன்? அது நம்மைப்போல ஆறு அறிவு உள்ள விலங்கு அல்லவே.

தொற்று வியாதி உள்ளவர்களைக் கூட தொட்டுப் புழங்குகின்ற மனிதன் இதனை மட்டும் தீட்டு என்று ஒதுக்குவதும், புறந்தள்ளுவதும் மிகப் பெரிய தீண்டாமை என்பதை நாம் அறிய வேண்டும்.  காட்டுக்குப் போய்... ஆய் போய்... அங்கு தண்ணீர் இல்லாமல், கல்லால் துடைத்துக் கொண்டு ஊருக்குள் கோவில் வழியாக  வருகிறவர்களை பார்த்திருக்கிறோம்.  மனித மலம் தீட்டு இல்லை... 

நோய்களின் பிறப்பிடம் மனித மலம். மனித மலத்தில் லட்சக்கனக்கான வைரஸ்களும் பாக்டிரியாக்களும் உள்ளன.  இருந்தாலும் பராவாயில்லை இது இயற்கை உபாதை என்கிறோம்.  நமது தாய், தங்கை, மனைவியின் உடலிலும் நிகழும் இயற்கையான நிகழ்வை தீட்டு எனச் சொல்லி அவர்கள் மீது கட்டுப்பாடு சுமத்துவது இன்னும் வேண்டுமா. காலில் ஒரு சின்னப் புன் சீல் வருகிறது. சின்ன கட்டுப்போட்டுக்கொண்டு கோவிலுக்குள் செல்ல அனுமதி.  ஆம் கட்டுப் போட்டுக்கொண்டு கோயிலுக்குள் போகலாம். கயிலி கட்டிக்கொண்டுதான் போகக் கூடாது.  இவைகளையெல்லாம் சரி எனச் சொல்கின்ற ஆகம விதிகள் எழுதாத விதிகளாய் மானிட சாதியில் பாதியானவளை இப்படி கூனிக் குறுக வைப்பதேனோ.

நமது தாயையும், தங்கையையும், மனைவியையும் நாமே ஏன் கேவலப்படுத்துகிறோம். எல்லா மதங்களும் இதில் ஒன்றுபட்டு நிற்பதுதான் நாகரீகத்தின் சொச்சம். 

மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களைப் பற்றி பைபிள்... சூதகஸரி தன் சரீரத்திலுள்ள உதிர ஊறலினிமித்தம் ஏழுநாள் தன் விலக்கத்தில் இருக்கக்டவள்.  அவளைத் தொடுகிற எவனும் சாயங்கால மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக... அவள் விலக்கலாயிருக்க¬யில் எதன்மேல் படுத்துக்கொள்கிறாளோ, எதன்மேல் உட்காருகிறாளோ அதெல்லாம் தீட்டாயிருக்கும்.  அவள் படுக்கையத் தொடுகிறவன் எவனும் தன் வஸதிரங்களைத் தோய்த்து, தண்ணரீல் முழுகி, சாயங்காலம் மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.. இப்படி நீள்கிறது.

திருமறை... அது தீட்டு ஆகும். ஆகவே மாதவிடாயின் போது பெண்களை விட்டு விலகியிருங்கள்.  அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை அணுகாதீர்கள். அவர்கள் தூய்மையடைந்தபின்... இப்படி.... நீள்கிறது. இந்து மதம்.... அது ஊர் அறிந்தது...

இந்து அறநிலையத்துறையின் செயல் அலுவலர்களாகப் பெண்களும் பணிபுரியலாம் என்று போராடிப் பெற்ற பின்பும் அந்த மூன்று நாட்கள் அவர்கள் வெளியில்தானே இருக்கிறார்கள்இது எழுதப்படாத விதி.  அரசு இயந்திரமும் இதற்கு ஆட்படுகிற கேவளத்தை என்னவென்று சொல்வது.

உலக ஏகாதிபத்தியம், பொதுவுடமை, அமெரிக்கச் சண்டியர், மேநாட்டுப் பண்பாடு எனப் பேசும் பண்பட்ட மனிதர்கள் தீட்டு மட்டுப்பட பேச வேண்டும்.  சாதீய தீண்டாமையின் இன்னொரு வடிவமும் கூட.  தீட்டிற்கும் தீண்டாமைக்கும் மிகப்பெரிய வித்தியாசமெல்லாம் இல்லை. இது வீட்டுக்குள்ளே தீண்டாமை. கொண்டவனைத் தொட்டால் தீட்டு. பெற்ற பிள்ளையைத் தொட்டால் தீட்டு. உழைத்து ஈட்டிய பொருளைத் தொட்டால் தீட்டு... இப்பெல்லாம் எங்கு இருக்கிறது என்று அப்பாவிபோல்  கேள்வி கேட்பவர்கள் உண்டு.  அவர்களுக்கான ஒரு சில உதாரணங்கள் தான் நாம் இக்கட்டுரையின் முதல் பக்கத்தில் பதிந்திருந்தவை.

ஒரு பெரிய தோப்பு வெளியில் தெரிகின்ற மரங்கள் காய்த்து கனி தருகின்றன. உள்ளே இருக்கின்ற பல பயன் மரங்கள், மரங்களாகவே நிற்கின்றன. வெளியில் தெரிகின்றவைகளை வைத்து நாம் ஒரு முடிவுக்கு வந்து விடுகிறோம்.  தோப்பு நன்றாக உள்ளது. யாவரும் நலம்... மேலோட்டமான பார்வை இதைத்தான் எல்லோருக்கும் தருகிறது.

பழம் தமிழன் பூங்குன்றன் யாவரும் கேளிர் என்றான்.  ஆண்கள் பெண்கள் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பேதமின்றி அனைவரும் சொந்தம் என்றவனின் வழிவந்தவர்கள் தீட்டு பார்க்கின்றோம். கோவில்களில், குளங்களில், காடுகளில் நமது குடும்பங்கைளத் காத்தவர்கள் பெண் தெய்வங்களாக இருக்கிறார்கள்... நமது குடும்ப தெய்வங்களிடையே கூட தூரம் பார்க்க வைக்கும் அநீதி இங்குதான் காண்கிறோம்.  

அனேகமான பெண்களுக்கு மாதவிடாயின் போது வயிற்றுப்பகுதியின் கீழ் பகுதியில் தசைப்பிடிப்பு, மார்பக வலி, மார்பக வீககம், தலைவலி, தோள்மூட்டு வலி, மனச்சோர்வு, எரிச்சல் போன்ற சில உபத்திரமான அறிகுறிகள் தோன்றுகின்றன.  உளச்சோர்வுக்கு உள்ளாகின்றனர். நமது குடும்பப் பெண்கள் இவ்வாறான உடல் பிரச்னையில் இருககும போது உளப்பிரச்னைக்கு உள்ளாவது தகுமோ.

மாதவிடாய் காலங்களில் சுகாதாரம் பேண கூடி இழுத்த தேர் இலக்கை எட்டிக் கொண்டிருக்கிறது.  இந்த நேரத்தில் ஊரகப் பகுதியிலும் நாப்கின் பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.   இயற்கை உபாதையெல்லாம் தீட்டு என்று பார்ப்பது மிகப் பெரிய மூடத்தனம்.  தெற்கு மலையில் கன்னிமார் சாமி இருக்கு, அதனால் ரோட்டுக்கு தெற்கே மாதவிடாய் காலங்களில் பெண்கள் ரோட்டுக்கு தெற்கே எந்தவொரு வேலைக்கும் செல்லக் கூடாது என்பது கடைந்தெடுத்த மூடத்தனம்.  இதனை கண்டிப்பதோடு நின்று விடாமல் மாற்றங்களை நோக்கி நகர வேண்டும்.  இந்த நகர்தலுக்கான பேச்சை நாம் பேசுவோம்.  நகர்தலை நம் வீட்டுப் பெண்கள்மேற்கொள்ளட்டும்.

இவள் புதியவள் மார்ச் 2011 இதழில் வெளிவந்துள்ளது.

Sunday, December 19, 2010

குடி ஆட்சி

பேச வேண்டியதை பேசுகிறேன்...


குடி ஆட்சி


மது போற்றுதும் மது போற்றுதும்
அது தரும் போதை போற்றுதும் போதை போற்றுதும்
டாஸ்மாக் போற்றுதும் டாஸ்மாக் போற்றுதும்
இதனோடு ஒட்டியிருக்கும்
பார் போற்றுதும் பார் போற்றுதும்
நியாய விலைக் கடையை புள்ளி விபரத்தில் புறந்தள்ளி
பச்சை வண்ணத்தில் பல ஆயிரம் கடைகள் தந்த
தமிழ்நாடு போற்றுதும் தமிழ்நாடு போற்றுதும்
மது வருவாயில் இலவசத் திட்டங்கள் தரும்
முதலமைச்சர் போற்றுதும் முதலமைச்சர் போற்றுதும்




தீபஒளி திருநாளுக்கு முதல் நாள் மாலை மதுரையிலிருந்து தேனிக்குச் செல்ல ஆரப்பளையம் பேருந்து நிலையத்தில் குடும்பத்தோடு இருந்தோம். எங்களைப் போல் குடும்பத்துடன் வந்துவர்கள் நிறைய பேர் இருந்தனர். தனியாக வந்தவர்களும் உண்டு. மக்கள் நெருக்கடியில் பேருந்தில் ஏறுவது சிரமமாக இருந்தது. ஒரு வழியாக தேனி செல்லும் அரசுப் பேருந்தில் இடம் பிடித்து குழந்தை மனைவியோடு உட்கார்ந்தாகிவிட்டது. அப்படா தேனி வரை நிம்மதி என பெருமூச்சு விட்டேன். பேருந்து நகர ஆரம்பிக்கும் போது பேருந்துக்குள் நிற்பவர்கள் கூட்டம் அதிகரித்தது.
எல்லோரும் ஆண்டுக்கணக்கில் மாதக்கணக்கில் வாரக் கணக்கில் பிழைப்புக்காக திருப்புர், கோயம்புத்தூர், தூத்துக்குடி மதுரை நகரங்களுக்கு வலசை வந்தவர்கள். இவர்களில் குடும்பம் குடும்பமாக வலசை போனவர்களும் உண்டு. தனியாட்களும் உண்டு. இவர்கள் உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, தேனி, சின்னமனூர் பாளையம் கம்பம் போடி என சிறு நகரங்களுக்குச் சென்று அங்கிருந்து தங்களது சொந்த ஊருக்கு பேருந்தை பிடிக்க வேண்டும். பேருந்தின் வேகத்தை விட பயனிகளின் படபடப்பு வேகமாக இருப்பதை உணர முடிந்தது. பேருந்து மதுரை நகரை தாண்டி கொஞ்சம் வேகம் அதிகரிக்க, ஒரு மது மகன் பேருந்துக்குள்ளேயே வாந்தி எடுத்தான். இவர்களை ன் விகுதி போட்டு அழைப்பதில் தவறில்லை.


வண்டியில் உட்கார முடியவில்லை... வேறு வழியுமில்லை... நடத்துநர் வந்தார்... கொச்சையான வார்த்தைகளில் திட்டினார். (குடும்பத்துடன் பயனிகள் பலர் இருக்கும் போது) மது மகனின் செயலுக்கும் இவரது செயலுக்கும் பெரிய வேறுபாடு இல்லை. பின் யாராவது ஒரு இடம் கொடுங்கப்பா... ஒட்கார்ந்து தொலையட்டும். மிகச் சுலபமாக மது மகனுக்கு இருக்கை கிடைத்தது. கொஞ்ச நேரம் மூக்கைப் (சூடு, சொரனை இப்படி எல்லாத்தையும்) பொத்திக் கொண்டு பயனித்தோம். மீண்டும் வாந்தி எடுத்தான். இப்போது பேருந்துக்குள் குரல்...
ஏண்டா அளவா குடிச்சு தொலைய வேண்டியது தான....
உனக்கே சேரலையே, அப்பறம் ஏன் இவ்வளவ குடிக்கனும்....
குடிச்சேன்னா தனியா கார் பிடிச்சுப் போ... ஏன் எங்களையெல்லாம் இப்படி கொல்லுற...
ஏம்ப்பா கண்டரக்டரு இந்தாளை வாலந்தூருல இறக்கிவிடு.... போதை தெளிஞ்சதுக்கப்புறம் வீட்டுக்குப் போகட்டும். கண்டக்டர் வந்தார். நீ யெல்லாம் மனுசன்தானா... ஒரு நல்லநா பொல்ல நாளுலயுமா இப்படி... கண்டக்டர் மூக்கை பொத்திக் கிட்டே பாபர் மசூதி தீர்ப்பு போல ஒரு தீர்ப்பை கொடுத்தார். ஓங் துண்ட எடுத்து வாந்தி எடுத்தத மூடி வை. இனிமே வாந்தி எடுத்தா எடுத்த இடத்துலேயே இறக்கி விட்டுறுவேன் ன்னு தீர்ப்பை சொல்லிட்டு டிக்கெட் எடுக்காதவங்க டிக்கட்ட கேட்டு வாங்குங்க, டிக்கெட்டைப் பத்திரமா வச்சுக்கங்க உசிலம்பட்டியில செக்கர் இருக்கார்... சொல்லிட்டு முன்னாடி போயிட்டார்.
மது மகனின் கூட வந்த இன்னொரு மது மகன் (நான் ஸ்டெடி மது மகன்) துண்ட எடுத்து வாந்தி மேல போட்டு மூடிக்கிட்டே... இங்க யாருப்பா குடிக்காதவக பெரிசா பேசுறீக? ன்னு எல்லரையும் பார்த்து கேள்வி கேக்குறான்.. நின்னுட்டு வந்த மது மகனுக்கு (குடிகாரனுக்கு) உசிலம்பட்டி வரைக்கும் ஒட்கார இடம் கிடைச்சிருச்சு. (வகுத்துப்பிள்ளத்தாச்சிக்கு இடம் கிடைக்கமாட்டிங்குது). குடிகாரர்களுக்கெல்லாம் நி£யம் கிடைச்சிருச்சு. என்னையும் சேர்த்து இரண்டு மூனு பேரு வாயுக்குள்ளேயே முனகினோம். சத்தம் போட்டு பேச முடியலை. ஏன் பேச முடியலை... இது தான் குடிகார நாடாச்சே...


தீப ஒளி திருநாள் அன்று மட்டும் மதுக் கடைகளின் மூலம் வருமானம் 100 கோடி. தலைநகரில் மட்டும் பத்து கோடி. தேனி மாவட்டத்தில் இரண்டு கோடி. இப்படி மாவட்ட வாரிய வருமானம். கருவாடு வித்த காசு வீசவா போகுது, வேப்ப எண்ணைய் வித்த காசு கசக்கவா போகுது என்ற வகையில் மதுவால் வருகிற வருமானம் அவமானம் இல்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டது தமிழக அரசு. இதனால் பைந்தமிழ் நாடு பாழாய்ப் போகிறது.
தீப ஒளி திருநாள் அன்று மட்டும் மாநிலம் தோறும் மது மகன்களால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இரண்டு மடங்கு வருவாய் அதிகரித்துள்ளது என்பதை செய்தியாக்கிய நாளிதழ்கள், மாநிலம் முழுவதும் இதனால் ஒழுங்கு தவறுதல் எவ்வளவு மிகுந்துள்ளது என்பதை கவனமாக வெளிக்கொண்டுவரவில்லை. வீடு, பொது இடம், சுற்றுலாத் தளம் என எங்கும் நீக்கமற நிறைந்திருக்கின்றனர் மது மகன்கள்.
மது அருந்துபவர்களின் பட்டியல் எடுப்பது மிகச் சுலபம். அந்தளவிற்கு மது மகன்களின் (மது மகள்கள்) எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. அரசாங்கமே கடை வச்சிருக்கு, நிறைய (நீதி நூல்கள்) படிச்சவங்க மது பாட்டில் விக்கிறாங்க குடிக்கிறதுல மட்டும் என்ன தப்பு இருக்குன்னு நியாயம் கற்பிப்பவர்கள் அதிகரித்துக்கொண்டிருக்கிறார்கள். முடியாட்சி போன்று இது குடி ஆட்சி. ஆகையால் குடிமக்கள் அதிகரிப்பதை தவிர்க்க முடியாது.
மது அருந்துபவர்கள் யார்? எல்லோரும்.... எல்லோரும் என்றால் இதில் விதி விலக்கில்லை. யார் அதிகமாக இருக்கிறார்களோ அவர்கள் அதிகமாகவே இருக்கிறார்கள். ஏழ்மையில் உள்ளோர் அதிகமாக மது அருந்துகிறார்கள். அதனாலேயே ஏழ்மையில் உள்ளார்கள் என்பது வேறு. மது மகன்கள் எது குறித்தும் கவலைப்படுவதில்லை என்பது தான் கவனிக்க வேண்டியது.
சரக்கு வச்சிருக்கேன்... நாட்டுச் சரக்கு... இப்படி சினிமா பாட்டெல்லாம் பாடுவதற்கான காலம் மலையேறிப் போச்சு. விளையாட்டுப் போட்டிகளில் கூட விலை உயர்ந்த மதுபானங்கள் விளம்பரமாக வருவதை சகித்துக்கொள்ளத்தான் வேண்டியதிருக்கிறது. நாலைஞ்சு குடும்பம் வாழ்றதுக்கு கோடிக்கணக்கான குடும்பங்கள் மோசமாவதை கண் கூடாகக் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
எதற்கெல்லாம் மது பார்ட்டி என்று கேட்டால், மோட்டார் பைக் வாங்கினால் பார்ட்டி, அதை ஓட்டினால் பார்ட்டி, விழுந்தாள் பார்ட்டி, எழுந்தால் பார்ட்டி, ஆஸ்பத்திரிக்குப் போன கூட பார்ட்டி... இப்படி பொறந்தா பார்ட்டி. இறந்தா பார்ட்டி, இன்னும் சில ஊர்களில் ரேடியோ கட்டினா பார்ட்டி, தேர்தல் திருமணம் என எல்லா இடங்களிலும் மது உள்ளது. சிலர் ஏங் வீட்டு விஷேசத்திற்கு தண்ணிக்குப் பதிலாக பிராந்தியைத்தான் ஊத்திக் கொடுப்பேன் என பெருமை பேசிக் கொள்(ல்)கின்றனர். பார்ட்டிகளே தினசரி இருக்கும் போது பாவம் மது மகன் என்ன செய்வான்கள்.
குழந்தைகள் பெண்கள் என எல்லோரையும் இந்த வியாதி தொற்றிக்கொண்டுள்ளது என்பதை வருத்தத்துடன் ஒத்துக் கொள்ள வேண்டியுள்ளது. ஒரு தலைவருக்காக நடந்த ஊர்வலத்தில் கலந்து கொண்ட ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் கூட மது அருந்தியாதாக தகவல் கேட்டு அமைதியாகத்தான் இருக்க முடிந்தது. நாம் எங்கு இருக்கிறோம். வள்ளுவனின் குறளை வாசித்து, அதற்கு உரை எழுதி, மனனம் செய்து பிழைக்கின்றோம். குறள் படி வாழ்வதற்கு மறுக்கின்றோம்.
ஒரு சில அரசியல் அமைப்புகள் மதுவிற்கு எதிராக மிகப் பெரிய பிரச்சாரம் செய்கின்றன. அவர்களை வரவேற்கின்றோம். அதே சமயத்தில் சமீபத்தில் மதுரையில் நடந்த மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்தவர்களின் பெரும்பான்மையான வாகனங்கள் பச்சை வண்ண பலகை கொண்ட கடைகளில் நின்றிருந்தை அன்றைக்கு மதுரையில் இருந்த அனைவரும் அறிவர். கோவை செம்மொழி மாநாட்டிற்கு மதுக்கடைகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கவில்லை என்பதிலிருந்து மதுக்கடைகள் மருந்துக்கடைகளுக்கு இணையாக இருப்பதை அரசாங்கம் உறுதிசெய்துள்ளது.
மிகக் குறைந்த விடுமுறை நாட்கள் கொண்ட அரசாங்கம் சார்ந்த நிறுவனம் டாஸ்மாக் மட்டும் என்பது நாம் அனைவரும் அறிந்தது. விடுமுறை விடாமல் அலுவல் நடைபெற அது என்ன அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்புக் கடைகளா!
மகிழ்ச்சியையும் துக்கத்தையும் வெளிப்படுத்தும் காரணியாக மட்டும் மது அமையவில்லை. அது அன்றாடம் தேநீர் பருகுவது போன்ற ஒரு பழக்கத்தை பலரிடையே ஏற்படுத்தி விட்டது. மதுவால் உடலுக்கு கேடு, குடி குடும்பத்தைக் கெடுக்கும் என்றெல்லாம் சொல்லி நாம் ஒன்றும் செய்துவிட முடியாது. நமது நாடு என்னும் கப்பல் மது என்னும் கடலில் மூழ்கிக் கொண்டிருக்கிறது. மீட்பதற்கு நல்ல தலைவன் வேண்டும்.
நாடு வளர்கிறது. ஆனால், நலிந்தோரின் வளர்ச்சி குறைவாக உள்ளது. ஒரு சில குடும்பங்கள் மட்டும் வளர்வதற்கான ஒரு அரசியல் சூழலை கட்டமைப்பதை கட்டாயம் உடைத்தெறிய வேண்டும். குடி ஆட்சியை மாற்றியமைக்க நாம் கதாநாயகன்களை எதிர்பார்த்து இருக்க வேண்டாம் என்பதோடு நிறுத்திக் கொள்கிறேன்.

Tuesday, November 16, 2010

நான்கு வழிச் சாலை

நான்கு வழிச் சாலை
நகரங்களை இணைக்கும் சாலை


நாள் கிழமை பார்த்து
நவ தானியங்கள் இட்டு
நான்கேழுதலைமுறைக்கு
நிலைத்து நிற்க நிலை வைத்து
பகல் இரவு பாராது உழைத்து
பார்த்து பார்த்து கட்டிய வீட்டை
பகலிலேயே கொள்ளை கொண்ட சாலை


வீட்டிற்கொரு மரம் வளர்ப்போம் என்ற
வீர கோஷத்திற்கு முன்னரே
சாலையெங்கும் சோலையாக நின்று
கத்தரி வெயிலை தான் வாங்கி
கரியமில வாயுவை உள் வாங்கி
நா ஊற சுவை கூட புளி தந்து
நல்லவன் கெட்டவன் பார்க்காம நிழல் தந்து
நட்டமா நின்ன நெட்டை மரங்களை
கட்டை கட்டையா வெட்ட வச்ச சாலை



துடியான கருமாரி
தூங்காத கருப்புச்சாமி
அரச மர பிள்ளையார்
ஆடிக் கூழ் அம்மன்
அத்தனை பேரையும்
இடம் மாத்தி தடமான சாலை


காட்டை கொடுத்தவனுக்கும்
மேட்டை கொடுத்தவனுக்கும்
உழுத நிலத்தை கொடுத்தவனுக்கும்
ஒண்டிக் கிடந்த வீட்ட கொடுத்தவனுக்கும்
காசு தந்த கடையை விட்டுக் கொடுத்தவனுக்கும்
நன்றி கெட்டு சுத்தி சுத்தி வரவச்ச சாலை


ஊரை ரெண்டாக்கி
ஊருக்குத் தண்ணி தரும்
ஊருணியை மேடாக்கி
ஏர் உழவனின்
ஏரியை துண்டாக்கி
வாய்க்காலை பாழாக்கி
நன்செய்யை நாசாமக்கி
பாதைகளை வீணாக்கி
பயன் தரும் மரங்களை பிணமாக்கி
அரளிச் செடி தாங்கி
அம்சமாய் படுத்த சாலை


அரச மரத்து நிறுத்தம்
ஆல மரத்து நிறுத்தம்
பத்துப் பனை மரம் நிறுத்தம்
ஒத்தப் புளிய மரம் நிறுத்தம்
புங்கை மர நிறுத்தம்
வேங்கை மர நிறுத்தம்
மா மர நிறுத்தம்
பூ மர நிறுத்தம்
அத்தனையும் அடையாளமில்லாம ஆக்கி
உலகத் தரத்தில் ஒய்யாரமா நின்ன சாலை


நான்கு வழிச் சாலை...
நகரங்களை இணைக்கும் சாலை

Saturday, November 13, 2010

யாருக்கும் நேரமில்லை.... வீரமில்லை....

அரசுப் பேருந்தில் அறிவிப்பே இல்லாம்
பேருந்து கட்டணம் உயரது
மாடுகள் மாதிரி
பேசமா டிக்கெட் வாங்கிட்டு போகுது



திருமங்கலம் தொடங்கி
பென்னாகரம் வரை
நோட்டுக்கு ஓட்டுகள் விலை போகுது
85 சதவிகிதததிற்கு மேல்
வாக்குகள் பதிவாகுது


ஒத்த ரூபாய்க்கு அரிசி விலை
பத்து ரூபாய்க்கு உப்பு விலை
சமைக்கிறதுக்கு வேணும் நூறு வில்லை
வயிறு இன்னும் நிறைய வில்லை


காயுது கரும்புக் காடு
தாகத்தால் நோகுது ஆடு மாடு
நீச்சல் குளத்தோடு சென்னையில் வீடு
நீ டாஸ்மார்க் தண்ணீயில் ஆடு


பொது நலமே தன் நலன் என்பவனுக்கு
பெட்டி பெட்டியா போகுது பணம்
முற்றும் துறந்த ஞானியின் ஆசிரமத்தில்
தோண்டத் தோண்ட வருது பிணம்


ஆதி முதல் அந்தம் வரை
அரசாங்க அலுவலகங்களில் லஞ்சம்தான்
அது கொடுக்காம தாராம
அங்க நடக்காது காரியம்தான்


கல்விக் கூடத்திலும் காவல் நிலையத்திலும்
காம வன்கொடுமை களியாட்டம் - அதை
கண்டுக்காம இருக்கிறோமே இல்லாத பேயாட்டம்
இன்னும் இருக்குதா மனுசப்பயக நடமாட்டம்