Sunday, February 20, 2011

138 ஆண்டுகள் பழமையான சங்கம்

என் பெயர் சங்கம்

வயது 138

குணம் ஒற்றுமை

ஒரு தாய் வயிற்றில் ஒட்டிப்பிறந்தவர்கள் வெட்டிக் கொண்டதை நம் அண்டை வீடுகளிலேயே பார்க்கிறோம். ஆனால், ஒரு சங்கம் 138 ஆண்டுகாலம் கம்பீரமாய் செயல்படுகிறது. இச்சங்கம் ஆரம்பித்த காலத்தில் முளைத்த எத்தனையோ அரசியல் கட்சிகள் இருந்த தடம் இல்லாமல் போய்விட்டது. குறுநில மன்னர்களாய் இருந்த ஜமீன்கள் இருக்க வீடு கூட இல்லாமல் போய்விட்டனர். இவை இப்படி இருக்க இச் சங்கம் எதற்காக உருவானது, எப்படிச் செயல்படுகிறது என்பதை தெரிந்து கொள்ள ஆவல் எழும்.

இது ஆண்டிகள் கூடி மடம் கட்டிய கதை இல்லை. உழவர்கள் கூடி ஒற்றுமை சமைத்து இப் பாருக்கே முன்மாதிரியாய் அமைந்த நிஜம். இதன் பெயர் பேய்க்குளம் நிலச்சுவான்தார்கள் விவசாயிகள் அபிவிருத்தி சங்கம் . அட... இந்தச் சங்கம் இருப்பது நம்ம தமிழ்நாட்டுல தூத்துக்குடி மாவட்டம் காயர்புரத்திற்கு அருகில்தான். இங்கு தூத்துக்குடியிலிருந்து ஸ்ரீவைகுண்டம் செல்லும் பேருந்துகளில் செல்லலாம். இப்பேருந்துகள் செல்லும் சாலை பேய்க்குளத்தின் மீதே அமைந்துள்ளது.

ம் அமைப்பது தமிழனுக்குத் தெரியாத ஒன்று இல்லை. மதுரையில் தமிழுக்குகாக முதற் சங்கம் 4440 ஆண்டுகளும் இடைச் சங்கம் 3700 ஆண்டுகளும் கடைச் சங்கம் 1850 ஆண்டுகளும் இருந்துள்ளது. ஆக 12000 ஆண்டுகளுக்கு முன்பே சங்கம் அமைத்து சாதித்தவன் தமிழன் என்பதை நாம் அறிவோம். கண்மாய் - ஏரிகளுக்கு பரந்தாகச் சோழன் காலத்தில் ஆயிரத்து அறுபது ஆண்டுகளுக்கு முன்னரே வாரியம் அமைத்து செயல்பட்டதை உத்திரமேரூர் கல்வெட்டுகள் நமக்கு உணர்த்துகின்றன. தமிழன் அல்லாத அந்நியன் நம்மை ஆட்சி செய்ய ஆரம்பித்ததும் நம்மிடம் இருந்த ஒற்றுமையை பிரித்தான். நமது சொத்துகளுக்கு நாமே வரி செலுத்துவோர் ஆனோம்... திட்டமிட்ட பிரிவினைகளுக்குள்ளும் ஒரு விருட்சம் 1872ல் உதயமானது. ஆம்... 20 கிராமம், 2400 ஏக்கர் பாசனப்பரப்பு, 1400 குடும்பங்கள் பயன்பெறும் பேய்க்குளம் கண்மாய்க்கு சங்கம் என்ற பெயரில் முளைத்ததுதான் அந்த விருட்சம்.

தமிழ்நாட்டில் உற்பத்தியாகி, தமிழ்நாட்டு நிலங்களுக்கு நீர் வளம் தந்து தமிழ்நாட்டு கடலில் சங்கமிக்கும் தாமிரபரணி ஆற்றிலிருந்து சுதேசி தண்ணீரைப் பெற்றுகிறது பேய்க்குளம் கண்மாய். தாமிரபரணி ஆற்றிலிருந்து தண்ணீர்த் தட்டுப்பாடு, குறைவான மழையளவு பெரும்பாலான நேரங்களில் விவசாயிகளை சிரமத்திற்குள்ளாக்கும். கண்மாயையும் கண்மாய் சார்ந்த விவசாயத்தையும் நம்பி வாழ்ந்துகொண்டிருக்கும் மக்கள் எல்லோருக்கும் பாரபட்சமின்றி தண்ணீர் கிடைக்கச் செய்யவும் தங்களுக்குள் எழும் பிரச்னைகளைத் தீர்த்துக்கொள்ளும் நோக்கில் இவ்வமைப்பு தொடங்கப்பட்டது. தொடங்கிய நாளிலிருந்து நாங்கள் அனைவரும் விவசாய குடும்பத்தைச் சார்ந்தவர்க, எங்கள் நலனுக்காக ஒன்றுபட்டுச் செயல்படுகிறோம் என்று உரக்கச் சொல்வதுடன் செயலிலும் காட்டுகின்றனர்.

இத்தனை ஆண்டுகாலம் இந்தச் சங்கம் என்னதான் செய்கின்றது என்று பார்க்கும் போது ஆண்டுதோறும் வரத்துக்கால்வாய் சீரமைக்கும் பணியை புரட்டாசி மாதம் செய்கின்றது... ஆறு மடையுள்ள இக்கண்மாயில் தண்ணீரைச் சிக்கனமாக பயன்படுத்த சிறந்த முறைகளை முறைப்படுத்தியுள்ளது. தண்ணீர் தட்டுப்பாடு உள்ள காலங்களில் பொதுப்பணித்துறையினரிடம் எடுத்துரைத்து தாமிரபரணி ஆற்றிலிருந்து தண்ணீரை விரையமின்றி கொண்டு வருவதில் முனைப்புடன் செயல்படுகிறது.

பேய்க்குளம் கண்மாய் பாசனப் பகுதியில் உள்ள பிரச்னைகள் காவல் நிலையத்திற்குச் செல்லாமல் இங்கேயே தீர்க்கப்படுகிறது. காவல் நிலையத்தில் கொடுப்பது போன்றே சங்கத்திற்கு புகார் மனு கொடுக்கின்றனர். பிரச்னையை விசாரித்து நல்ல தீர்ப்பை நல்குவது இச் சங்கத்தின் சிறப்பம்சம். புகார் மனுக்கள் முறையாக கோப்பில் இடப்பட்டுள்ளது. மனுவின் பின்புறம் வழங்கிய தீர்ப்பை எழுதி வாதியிடமும் பிரதிவாதியிடமும் கையொப்பம் பெற்று பதிவாக்கியுள்ளதை காணும் போது ஆச்சரியமாகத்தான் உள்ளது. கண்மாய் பாசனப் பரப்பில் பெரும்பாலும் நெல் மற்றும் வாழை பயிரிடப்படுகிறது. நெல்கொள்முதல் அரசாங்கத்தின் மூலம் நேரிடையாக செய்யப்படுகிறது. இடைத்தரகர் இன்றி செய்யப்படும் நெல்கொள்முதலால் குவிண்டாலுக்கு ரூபாய் 350 கூடுதாலக விவசாயிகள் பெறுகின்றனர்.

வேளாண்மைத் துறையுடன் இணைந்து தரமான விதை விநியோகம், வேளாண் பயிற்சி போன்றவை மேற்கொள்ளப்படுகிறது. விவசாய ரோடு பணிகள், சில ஊர்ப் பொதுப் பணிகளையும் இச்சங்கம் சிறப்பாக செயல்படுத்தியை அவர்களது ஆவணங்கள் மூலம் அறிய முடிகிறது. இத்தனையும் எப்படி செய்ய முடிகிறது என்று பார்க்கும் போது இச் சங்கத்தின் நிர்வாகிகள் தினசரி காலை 08.30 மணி முதல் 09.30 மணி வரை வந்து அன்றாட அலுவல்களை பார்க்கின்றனர். செயற்குழு உறுப்பினர்கள் 64 நபர்கள் உள்ளனர்.

நிர்வாகிகள் ஏழு பேர் ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் ஏழு பேர். இது இவர்களுக்கு கௌரவப் பொறுப்பு. இவர்கள் தவிர ஊதியம் பெறுகின்ற பணியாளர்களும் உள்ளனர். இச் சங்கத்திற்கு மேலாளர், காவல்கார்கள் என ஐந்து ஆறு பணியாளர்கள் ஊதியம் பெற்று பணியாற்றுகின்றனர்.

 மாதம் தோறும் செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. வருடத்திற்கு ஒரு முறை பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. 1949ல் பதிவு செய்யப்பட்ட இச்சங்கத்தின் சட்ட விதிகள் தான் பொதுப்பணித் துறை மூலம் உருவாக்கப்படுகின்ற விவசாயிகள் சங்கத்திற்கு மாதிரியாக எடுத்துக் கொள்ளப்பட்டது. கண்மாய் ஏரி விவசாயிகள் சங்கத்திற்கு இந்த அமைப்பு முன்னோடியாக உள்ளது. இங்கு 100 ஆண்டுகால ஆவணங்களை பார்க்க முடியும். அச்சு கோர்க்கப்பட்ட கணக்குப் புத்தகங்களும், முறையாக தணிக்கை செய்யப்படுவதும் இந்த அமைப்பின் வெளிப்படைத் தன்மைக்குச் சான்றுகள்.

தேவையான வசதிகளுடன் அமைந்துள்ள வெள்ளி விழா கண்ட அலுவலகம் நான்கு தலைமுறையினரை சந்தித்துள்ளது. இந்த அமைப்பிற்கு வருமானம் ஒரு ஏக்கர் வாழை பயிரிடும் விவசாயி ரூபாய் 600ம் நெல் பயிரிடும் விவசாயி 12 மரக்கா நெல்லும் சந்தாவாக தருகின்றனர். இந்த வருமானத்தைக் கொண்டு பணியாளர்களுக்கு ஊதியம் தருவது முதற்கொண்டு அனைத்துப் பணிகளையும் செய்துவிடுகின்றனர். சங்கத்திற்கென்று நிறைய சொத்துக்கள் எதுவும் இல்லை. சங்கத்தின் சொத்து என்று பார்த்தோமானல் அலுவலகமும் விவசாயிகள் நலன் கருதிவாங்கப்பட்ட கொஞ்சம் நிலம் மட்டும் தான். சொந்த வருமானம் குறைவாக உள்ள கோவில்கள் நிலை எப்படி இருக்கும் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால், சங்கம் உறுப்பினர்களின் முழுமையான பங்களிப்புடன் நூறு ஆண்டுகளுக்கு மேல் செயல்படுகிறது என எண்ணும் போது வியப்பாக உள்ளது.

நண்பர்களுக்குள் கருத்து வேறுபாடு, உட்கட்சிப் பூசல், கூட்டுக் குடும்பத்தில் மறைமுக எதிர்ப்பு என்று குதறிக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் இச்ங்கத்தில் உறுப்பினர்களாக இருந்த... இருக்கின்ற... அனைவரும் போற்றப்பட வேண்டியவர்கள். சங்கத்தின் தலைமைப் பொறுப்புக்கு எத்தனையோ பேர் வந்து மாறிச் சென்றுவிட்டனர். ஆனாலும் சங்கத்தின் கொள்கை குறிக்கோள் எதுவும் மாற வில்லை. கல்யாண வீட்டில் கூட அரசியல் பேசும் நாட்டில் அரசியல் சார்பே இல்லாமல் நாங்கள் விவசாயிகள் என்று ஒற்றுமையாக இருக்கும் இவர்களை பாரட்டித்தான் ஆக வேண்டும்.

சொந்தக் கட்டிடத்தில்... சுய நிர்வாகத்தில்... அமைதியாய் அரசாட்சி நடத்திக் கொண்டிருக்கும் இச்சங்கம், நிறைய ஆட்சிப் பணி அதிகாரிகளின் பாரட்டைப் பெற்றது. அவர்கள் பாராட்டி எழுதிய வார்த்தைகள் அனைத்தும் பேய்க்குளம் நிலச்சுவான்தார்கள் விவசாயிகள் அபிவிருத்த்தி சங்கத்திற்கு இன்றும் கட்டியம் கூறிக் கொண்டிருக்கிறது. இச்சங்கத்திற்கு விவசாயிகளின் மீதும் விவசாயத்தின் மீதும் பிடிப்புள்ளவர்கள் போய்வர வேண்டும்.

(2011 சனவரி பசுமைத் தாயகம் சுற்றுச் சூழல் இதழில் வெளிவந்தது)