Monday, September 10, 2012

நிறுத்தப்பட்டிருக்க வேண்டிய பயணம்...


கொத்து கொத்தாய் ஆயிரம் கிலோ மீட்டருக்கு மேல் நின்று கொண்டே இரயில் பயணத்தை தொடர்ந்தனர். இவர்கள் தங்களது ஊரில் திடீரென நடைபெறும் கோவில் திருவிழாவிற்காக செல்லவில்லை.  சொந்தபந்தங்களின் சுக துக்க காரியங்களுக்காக தூக்கத்தை துறந்து துணிந்து பயணிக்கவில்லை.  தலைவரின் தன்மான உரையை கேட்பதற்காக விரைந்து செல்லவில்லை. தனக்கு தமயன் பிறந்திருக்கிறான் என பார்ப்பதற்கு பறக்கவில்லை... 66ஆவது சுநதந்திர தினம் கொண்டாடுகிற வேளையில் சொந்த நாட்டுக்குள்ளேயே பயந்து பயணித்த அவலம் அஸ்ஸாம் மக்களுக்கு நடந்தேறியது.  தங்களை தமது தாய் மண்ணிலேயே தாக்குவார்கள் என அஞ்சி அடிபாடுகளுக்கும் இடுபாடுகளுக்கும் இடையே நீண்ட பயணம்.  அஸ்ஸாம் மக்கள் தங்களை அகதிகளாய் அறிந்து கொண்டது பெரும் துயரம்.

கர்நாடாக முதல்வர் ஷெட்டர் நேரிடையாக வந்து பாதுகாப்பு தருவதாக வாக்கு தருகிறார்.  காவல் உயர் அதிகாரிகள் அருகில் வந்து ஆதரவு தருகின்றனர். தமிழக முதல்வர் நீங்கள் யாரும் கவலைப்படத் தேவையில்லை, தக்க நடவடிக்கைகளை நான் எடுத்துள்ளேன் என்றார்.  இப்படி மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள், காவலர்கள் யார் சொல்லியும் செவிமடுக்காமல் தென்னிந்தியாவில் வடகிழக்கு மாநித்திற்கு பயணத்தை தொடர்ந்தனர்.  அரசு கடந்த காலங்களில் பாதுகாப்பில் எடுத்த முடிவுகளில் மீதே வடகிழக்கு மாநிலத்தவர் வைத்த மரியாதை அவ்வளவுதான் என்பதை நாம் அனைவரும் அறியும் நேரம்.  

ஆஸ்திரிலேயாவில் இந்தியர்கள் தாக்கப்பட்டனர், அமெரிக்காவில் இந்தியர்கள் தாக்கப்பட்டனர்... ஆனால், அவர்களது சொந்த நாட்டிலேயே தாக்கப்படுவார்கள் என்ற வதந்தி, தீ போல் நவீன ஊடகங்களிலின் மூலம் பரவி அஸ்ஸாம் மக்களை அஞ்ச வைத்ததை நாம் என்னவென்பது.  சமீபத்தில் அஸ்ஸாமில் உள்ள பழங்குடியின மக்களுக்கும், வங்க தேசத்திலிருந்து இடம்பெயர்ந்து வந்த சிறுபான்மையினருக்கும் இடையே நடைபெற்ற இன மோதலில் பலர் இறந்தனர், காயமுற்றனர்.  அந்தக் காயத்தின் வெளிப்பாடகவே இது நடைபெறவிருக்கிறது என்கிற குறுஞ்செய்தி, முக நூல் போன்ற இணைய செய்திகளின் வாயிலாக வாய்க்கப்பெற்றதால், வதந்தி வலுப்பெற்றது.

வடகிழக்கு மாநிலத்தவர்கள் தெற்கே கன்னியாகுமரிவரை தொழில், வேலை, காவல், கல்வி என பல்வேறு தேவைகளுக்காக இந்தியா முழுவதும் வியாபித்துள்ளனர்.  கன்னியாகுமரியும் கவுகாத்தியும் தொலைவில் தூரம்தான். இந்தியாவின் மிக நீளமான  தொடர்வண்டிச் சேவையின் மூலம் நெருங்கிதான் இருந்தது.  ஆனால், சமூக அக்கறையில்லாத விஷமிகள் இணையதளங்களில் ஜோடிக்கப்பட்ட காட்சிகளை கட்டவிழ்த்து விட்டு, அஸ்ஸாம் மக்களை அகதிகளாக்கிவிட்டனர்.

நேதாஜி தலைமையில் தேச விடுதலைக்கு ஆயுதம் ஏந்தியவர்கள் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள அடர்ந்த காடுகளில்தான் பயிற்சி மேற்கொண்டனர். தலைவர் போஸ் தலைமையில் தேச விடுதலையில் பங்கு கொண்ட நம் தென்னிந்திய இளைஞர்கள் பலர் அஸ்ஸாம் காடுகளில் தங்களது தடங்களை பதித்தவர்கள். வெள்ளையர்களை விரட்ட பாடுபட்ட பூமியில் இருந்து வந்தவர்கள், அவர்களாகவே மிரண்டு ஓடுவது நமக்கு முரணாக தெரிந்தாலும்.... உண்மையை உற்று நோக்கத்தான் வேண்டும்.   மகராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே நகரில் அஸ்ஸாம் இளைஞர்கள் தாக்கப்படுகின்றனர்... அதன் தொடர்ச்சியாக வதந்தி பரவுகிறது. பிற்பாடு பெங்களுருவிலும் ஒரு இளைஞன் தாக்கப்படுகிறான். நமது அரசு பதட்டப்பட வேண்டாம் பாதுகாப்பு தருகிறோம்.   வெறும் வார்த்தை பயன்தரா என்பதை அரசு இயந்திரம் அறிந்து கொள்(ல்ல)ள வேண்டும்.

வதந்திக்கு கால் முளைத்தால் நடந்து செல்லும். கொஞ்சம் நேரமாகும்.  ஆனால், வதந்திக்கு இறகு முளைக்குமாம்.  நடந்து, கடந்து செல்ல முடியாத இடத்திற்கெல்லாம் கூட சென்று சேரும்.  பொதுவாக நெஞ்சை கெடுக்கின்ற வதந்திகளை படித்தவர்கள்தான் பரப்புகிறார்கள் எனும் போது பாரதி சொன்னது போல் அய்யோ என்றுதான் போவான்.  ஆனால், இவர்களது அச்சம்...

அஸ்ஸாம் மக்களின் அச்சத்திற்கான அத்துனை வதந்திகளும் பாகிஸ்தானிலிருந்து பரந்து வந்தவைதான் என நமது நடுவனரசு முன்வைக்கிறது.  நம் அண்டை சண்டை நாடான பாகிஸ்தானை குறை கூறிக்கொண்டே இருக்கிற அதே வேளையில் நாம் நமது பாதுகாப்பை சரிபடுத்திக்கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம்.   சொந்த நாட்டில் பிழைப்பு தேடிவந்த ஒருவன், கல்வி கற்க வந்த இளைஞன் மனதில் காயம்படுவதை கண்டும் அயல் நாட்டுச் சதி, நீங்கள் சரியாக இருங்கள் என்று சொல்லிக்கொண்டிருப்பது சரியானது அல்ல. 

வலைதளங்கள் என்ன ஆண்டவனின் அடிச்சுவடில் பிறந்து அப்படியே பொத்தென்று அடியவர்களை வந்தடைகிறது.  பிரச்னையின் பின்புலமாக இருக்கின்ற சமூக வலைதளங்களை கட்டிப்போட அரசால் முடியாத? அந்த தேதியிலிருந்தே இது போன்ற காட்சிகள் இருந்தன என்று சொல்கிற இந்திய அரசு ஏன் இது நாள் வரை காத்திருக்க வேண்டும் என்று தெரியவில்லை.   முடக்கிப்போட முடியாத அரசு இயந்திரம் ம்... ம்... என்று வீரவசனம் பேசுவது வேடிக்கையாக உள்ளது.   எங்கள் அரசு அதை சாதித்து, இதை சாதித்து என நாளிதழ்களில் விளம்பரம் செய்து வீணடிக்கிற பணத்தில் இது போன்ற சந்தர்ப்பங்களில் அவை வதந்திகள் நம்ப வேண்டாம் என்பதை நம்பும்படியாக, மக்களின் நாடித்துடிப்பை அறிந்து செய்திடலாம் அல்லவா?

ஒன்றை இந்த நேரத்தில் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.  இங்கு தொழிற்சாலைகளில், தொழில்களில், கட்டிட வேலைகளில், உணவகங்களில் உழைத்து அனுப்புகிற பணத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரு குடும்பம் அங்கு பிழைத்துக்கொண்டிருந்தது.  இப்படி திடீரென திரும்பும் போது எதை எடுத்துச் சென்றிருப்பார்கள்... அவர்களது கடனை யார் அடைப்பார்... ஒரு நாட்டின் முன்னேற்றத்தில் அனைவரது பங்களிப்பும் அவசியமாகிறது.  அணிசேரமாட்டோம் என்று சொல்லிக்கொண்டு அணுகுண்டு தயாரிப்பது நல்ல செயல் அல்ல! நம்மவர்களுக்கு அரணாக இருப்பதுதான் சரியாகும்.  இந்திய நாட்டின் இறையாண்மை காக்கின்ற அதே வேளையில் இயற்கை வளங்களையும் காக்க வேண்டியதும் அவசியமாகும். கலவரங்கள், மோதல்கள் தொடங்கும் போதே தடுத்திட வேண்டும்.  தவறும்பட்சத்தில் மனிதவளங்கள் மாண்டு போகும் அதே வேளையில்  இந்தியாவின் இயற்கை வளங்களும் குறைந்து போகும்.  காக்கை குருவி எங்கள் சாதி என்றவன் வாழ்ந்த மண்ணில் எல்லோரையும் காத்திடுவோம். வடகிழக்கு மாநிலத்தவர்களின் பயணத்தை தடுத்து நிறுத்துவதில் நமக்கும் பங்கு இருக்கு என்பதை நாமும் மறந்து விட்டோம். உள்ளுக்குள் தாக்கப்படுகிற சம்பவம் இது முதல் முறையல்ல... மும்பை பம்பாயாக இருந்த காலத்தில் தமிழர்கள் மட்டும் தனியாக தாக்கப்பட்டனர், எப்படி அடையாளம் காணப்பட்டோம்! அதே இடத்தில் பீகாரிகள் தாக்கப்பட்டதும் அரங்கேறியது.  நமது எண்ணங்களும் செயலும் யாரும் தாக்கப்படக்கூடாது என்பதே!

செப்டம்பர் பசுமைத்தாயகம் சுற்றுச் சூழல் இதழில் வெளிவந்துள்ளது.

மனித மலம்


ஒரு துளிக்கே
மரனமென்றால்
எனக்கு மட்டும் ஏன்
இத்தனை கோப்பை விஷம்
-          இளவேனில்

சமீபத்தில் ஒரு ஆய்விற்காக மதுரைக்கு அருகில் உள்ள புதுப்பட்டி கிராமத்திற்கு சென்றிருந்தோம்.  இருபதுக்கு மேற்பட்டோரை கொண்டிருந்த அணி பல்வேறு விதமான தகவல்களை திரட்டியது.  விவசாயத்தை பிரதானமாகக் கொண்டிருந்த கிராமத்தில், அடுத்த தலைமுறை விவசாயத்தில் ஈடுபடுமா என்பது வினாக்குறி? 144 வீடுகள், ஏழு வீடுகளில் யாரும் குடியிருக்க வில்லை.  இரண்டு வீடுகளுக்கு மட்டுமே மின் இணைப்பு இல்லை.  (இப்போது மின் இணைப்பு இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன?) அனைத்து வீடுகளிலும் வண்ணத் தொலைக்காட்சி பெட்டி இருக்கிறது.  அனைவரிடமும் அலைபேசி இருக்கிறது.  சில வீடுகளில் இரண்டு மூன்று அலைபேசி இருப்பது வேறு விசயம். கலந்தாய்வில் கல்வி கற்போரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது தெரியவந்தது. 

ஊரை ஒட்டி இருந்த இரண்டு சாலையின் இரு புறமும் மனித மலம் வட்டமாக, வடிவமில்லாமல், இடைவிடாது இருந்தது.  ஆள் நடமாட்டம் உள்ள இந்தச் சாலைகளில் எப்போது இப்படி இருந்திருப்பார்கள் என்று தெரியவில்லை.  மறைமுகமாக விசாரித்த போது ஒரு சாலை ஆண்களுக்கும், இன்னொரு சாலை பெண்களுக்குமான திறந்த வெளி கழிப்பறையாம்.  இக்கிராமத்தில் பாதிக்கு மேற்பட்டோர் நிலவுடமையாளர்கள் (கால் ஏக்கரிலிருந்து பத்து ஏக்கர் வரை),  அனைவரும் சொந்த வீடு உடையவர்கள்.  ஊரும் அவர்களது சொந்த ஊர்.  பிறகு ஏன் ஊரைச் சுற்றி மலம் கழிக்கிறார்கள். 

ஊரில் இருபத்தி நான்கு வீடுகளில் கழிப்பறை உள்ளது.  இதில் சில வீடுகளில் அரசு திட்டத்தின் மூலம் கட்டப்பட்டதால், கட்டாயத்தின் பேரில் கட்டப்பட்டது.  இது இந்திய புள்ளி விபரத்தை விட குறைவு.  இருபத்தி நான்கு வீடுகளில் எத்தனை வீடுகளில் கழிப்பறை உபயோகத்தில் உள்ளது என்பதை ஆராய்ந்த போது இரண்டே வீடுகளில் மட்டுமே! மீதமுள்ள இருபத்தி இரண்டு வீடுகளில் உள்ள கழிப்பறை? ம்ம்... இருக்கு ஆனா, இல்லை... ஆனால், எல்லோரும் இருப்பது (மலம் கழிப்பது) திறந்த வெளியில்....
அலைபேசியை எல்லோரும் மிகச் சாதரனமாக இயக்குகிறார்கள்.  பாட்டி எந்த வித பதட்டமுமின்றி பேரனிடம் பேசுகிறது.  ஹலோ என்ற ஆங்கில வார்த்தை அவ்வளவு எளிதாக அனைவரிடமும் புழங்குகிறது.  அபத்தமான உரையாடல்தான் அதிகமாக இந்த அலைபேசிகளில் அரங்கேறுகிறது.  நேரத்தையும் பணத்தையும் விரையம் செய்து நலத்தை பாதிக்கும் அலைபேசி ஈசியாகிவிட்டது.  களையெடுக்க போகும் போது கூட கையில் வைத்திருப்பதாக பெருமிதம் கொள்கின்றனர்.  வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளில் தொடர் நாடகங்களை மெய்மறந்து பார்க்கின்றனர்.  விளம்பரம் வந்ததும் ரிமோட் எடுத்து மாற்றி அடுத்த தொடரை பார்க்கின்றனர்... என்னே வளர்ச்சி! இது புதுப்பட்டியில் மட்டுமில்லை... தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் தான்.  மின் சாதனப் பொருட்கள் வீடுகளை அலங்கரிக்கின்றன.  நுகர்வு கலாச்சாரம் பெருகிறவருகிறது.   அதே நேரம் பாதுகாப்பு?

உண்டவன் உரம்போடுவான் என்ற பழமொழி நமக்குச் சொல்கிற சேதி, மலம் உரமாகும் என்பது.  மலம் எப்போது உரமாகும்? மக்கிய பின்பு.  மக்குவதற்கு முன்பு மலம் மரனத்தின் வாயிலாகும். மனித மலம் எண்ணற்ற பாக்டிரியா, வைரஸ், கொக்கிப் புழுக்களின் கூடாரம்.  நீரினால் பரவக்கூடிய பல்வேறு வியாதிகளுக்கு மனித மலமே மூலம்.  அதனால் தான் என்னவோ  பூனை தனது மலத்தை மூடி வைக்கும்.  பாருங்கள் பூனை எந்தளவிற்கு வளர்ந்திருக்கிறது.  நாம் எந்தளவிற்கு வளர்ந்திருக்கிறோம்.  அலைபேசி வசதியை எளிதாக ஏற்றுக் கொண்ட நம்மால் ஏன் கழிப்பறை வசதியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 

உடலுக்கு தீங்கு விளைவிக்கின்ற, மரணத்தை தருகிற மதுவை ஏராளமாக பணம் கொடுத்து தாரளமாக குடிக்கிறவர்களால் , நான்கு ரூபாய் ஐந்து ரூபாய் கொடுத்து பஞ்சு வைத்த உயிர்க் கொல்லி சிகெரெட் இழுக்கிறவர்களால், தினசரி அலைபேசிக்கு தீனி போடுகிறவர்களால்,  ஒரு ரூபாய், இரண்டு ரூபாய்  கொடுத்து கட்டண கழிப்பிடங்களில் சிறு நீர், மலம் கழிக்காமல், பலரும் பார்க்க பேருந்து நிறுத்தத்தின் ஏதாவது ஒரு ஓரேத்தில் சிறு நீர் கழிப்பது, மலம் கழிப்பது அசிங்கமாகத் தெரியவில்லை.  விலையில்லாமல் அரிசியில் தொடங்கி மடிக் கணிணி வரை தருகிற அரசாங்கம் கூட பேருந்து நிறுத்தங்களில் (நவீன) கழிப்பறை வசதியை செய்து தரமுடியாததை எண்ணி அவர்களும் அசிங்கப்பட்டதாகத் தெரியவில்லை.  உயிர் விலை மதிக்க முடியாத ஒன்று.  இவ்வளவு எளிதாக அதை எடுத்துக் கொள்ளக் கூடாது.  அரசு மருத்துவ மனைகளில் உள்ள கழிப்பறையைப் பார்த்தால் புரியும்! நமது சுகாதாரம் எந்தளவிற்கு வளர்ந்துள்ளது என்று.

பொதுவாக கிராமப் புறங்களில் கழிப்பறையைப் பயன்படுத்துவது மிகக் குறைவாக உள்ளது.  கிராமப் பின்னணியில் உருவான திரைப்படங்களில் கூட மலம் கழிப்பதை திறந்த வெளியிலேயே படம் பிடித்திருப்பார்கள்.  மேலை நாடுகளில் மலம் கழிக்க தனியாக போவார்கள். உணவு உண்பதற்கு அனைவரும் கூடி உண்பார்கள்.  ஆனால், நமது கிராமங்களில் மலம் கழிக்க போவது என்றால் கூட்டம் கூட்டமாக போவது.  அங்கே ஒரு மாநடே நடத்துவது.  இதை வெண்ணிலா கபடி குழு படத்தில் அந்த இளைஞர்கள் கல் மறைவில் இருந்து பேசிக்கொண்டிருப்தை காண்பித்திருந்தார்கள்.  இன்னும் கிராமங்களில் கழிப்பறையில் மலம் கழிப்பதை அவசியமின்மையாகவே கருதுகிறார்கள். அலைபேசி அவசியமானது என்பதை வலியுறுத்திய நுகர்வு சமுதாயம் கழிப்பறை அவசியம் என்பதை ஏன் வலியுறுத்த வில்லை.

கம்மாயில போயி ஆயி போறதுதான் சுகம் என்று சொல்பவர்கள் இன்னும் இருக்கிறார்கள்.  ஆயிலிருந்து வருகிற கொக்கிப் புழு நம் கால் பாதத்தின் வழியாக உள் சென்று சுக வீணமாக்கும் என்ற செய்தியை உணர வைக்க வேண்டுமல்லவா? வெளியில் செல்லும்போதும், கழிப்பறை செல்லும் போதும் அவசியம் செருப்பு போடுங்கள் என்று சொன்னால், என்ன பாகுமானம் பாரு என்கிறாள் பாட்டி.  எது பகுமானம், எது பாதுகாப்பு என்பதை உணர வைக்க முடியாதா நமது அரசாங்கமும், ஊடகமும், சமுதாயமும் பாவப்பட்டதல்லவா!

நீரில் ஒரு துளி மலம் கலந்தாலும், பலவீணமானவர்கள் பாதிக்கப்படுவார்கள்.  காலரா, வாந்தி போன்றவை துரித்த்தில் ஒட்டிக்கொண்டு, மருத்துவச் செலவை ஏற்படுத்தி முன்னேற்றத்தை பாதிக்கும்.  தமிழகத்தில் உள்ள மருத்துவர்களுக்கு எல்லாம் வேலையில்லாம் செய்ய கழிப்பறை பயன்பாடுடன் தன்சுத்தம் அவசியம்.   ஒரு வீட்டிற்கு கழிப்பறை தேவையில்லை என்ற எண்ணம் நம் மக்களிடம் அதிகமாக இருக்கிறது.  நவீன உலகின் போக்கிற்கு ஏற்ப பல்வேறு விசயங்களில் தங்களை மாற்றிக் கொண்டவர்களால், இந்த விசயத்தில் மாற்றிக் கொள்ள இவ்வளவு தயக்கம் ஏன்?

வேறு வழியின்றி பொது கழிப்பறையை பயன்படுத்துவோர், மிக அருவருப்பாக  வைத்திருக்கின்றனர்.  தொலைக்காட்சியை இயக்கத் தெரிகிறது.  அலைபேசியில் அத்தனையும் தெரிகிறது.  ஆனால் கழிப்பறையில் மட்டும் உட்கார்ந்து ஆய் போகத் தெரியாது என்றால்?  காரியக்காரன் கடைக்குப் போய் சூத்த கத்தரிக்கா வாங்கின கதையாகத்தான் இருக்கிறது. பொதுக்கழிப்பறை ஏலத்திற்கு எடுத்திருப்பவர்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதில் குறியாய் இருக்கிறார்களே ஒழிய, சுத்தமாக வைத்திருப்பதில்.. சே...

காந்தி கழிப்பறை சுத்தம் செய்த பணியை எல்லோரும் நினைவு கூறுகிறார்கள்.  காந்தியின் சீடர் வினோபாவிற்கு முதலில் வழங்கப்பட்ட பணி கழிப்பறையை சுத்தம் செய்வது.  இப்படி மேடைகளிலும் வகுப்பிலும் பேசிக்கொண்டு... தெருவில் கழிப்பது... வேதனை. இனி மேல் காந்தி எந்த வொரு சூழலிலும் திறந்த வெளியில் மலம் கழித்தில்லை என்று பாடம் கற்பியுங்கள்.  ஏதாவது நிகழ்கிறதா என்று பார்ப்பபோம்.  வீட்டில் சமையல் அறை எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் கழிப்பறை.  சமையல் அறையில் பேணுகிற சுத்தம், கழிப்பறையில் இருக்க வேண்டும்.  இவை இரண்டும் சரியாக இருக்கும் போது நாம் கடவுளிடம் வேண்டுகிற கை கால் சுகத்த கொடு சாத்தியப்படும்.  வீட்டிற்கு ஒரு கழிப்பறை, வீதிக்கு ஒரு பொதுக் கழிப்பறை வேண்டும்.


கழிப்பறை திட்டத்தை செயல்படுத்துவதில் அரசு ஏன் இன்னும் கூடுதல் அக்கறை காட்டவில்லை என்று தெரியவில்லை.  அரசு மானியத்துடன் வழங்கிய திட்டங்கள் ஏன் முழுமையாக சென்று சேரவில்லை என்பதை பார்க்கத் தவறியது ஏன்? உள்ளாட்சி அமைப்புகளுக்கு அரசு கூடுதல் நிதி ஒதுக்கி, கல்வி புகட்டி ஏன் இத்திட்டத்தை எடுத்துச் செல்லவில்லை? இப்படி ஏன் என்ற கேள்வியை கேட்டுக்கொண்டே இருப்போம்.  மக்கள் மத்தியில் மாற்றம் வராமைக்கு யார் காரணம்.  மக்கள் ஏன் மாற்றத்தை விரும்பவில்லை.  மக்கள் மாறதவர்களா? எந்த நம்பிக்கை அவர்களை கட்டிப்போட்டுள்ளது.  அதை உடைத்தெறிய எழுத்தாணி எடுப்போம்.

வாங்க வடம்பிடிப்போம்...



மதுரை பகுதியில் மாசி மாத அமாவாசை நாளில் குல தெய்வ வழிபாடு வெகு விமர்சியாக நடைபெறும். ஏழை பணக்காரன் என்ற பேதமில்லாமல் அவரவர் குல தெய்வ கோவிலுக்குச் சென்று, தேங்காய், பழம் வைத்து கும்பிடுவது, முடி காணிக்கை செலுத்துவது, காது குத்துவது, ஆட்டம் பாட்டம் என இரவு, பகல் முழுவதும் சந்தோச வெள்ளத்தில் மக்கள் வெள்ளமிருக்கும்.

இது போக பத்து வருடம், இருபது வருடத்திற்கு ஒரு முறை 'பெரிய கும்பிடு' என தடபுடலாக விழா நடத்துவார்கள். குறிப்பிட்ட குல தெய்வத்தை வழிபடுவோர் தங்களது ஊர்களிலிருந்து, மாமன் மச்சான் உறவினர்களை எல்லாம் அழைத்து வந்து, அனைவருக்கும் புத்தாடை எடுத்து தந்து கிடா வெட்டி, பொங்கல் வைத்து அன்னதானம் வழங்குவது என அமர்க்களமாக இருக்கம். 

இந்த இரண்டு விழாக்களின் போதும் வள்ளி திருமணம், அல்லி தர்பார், நாடகங்களும், ராஜா ராணி ஆட்டம் கரகாட்டம், தப்பாட்டம், சினிமா ஆட்டம் என இரவு முழுக்க கண்களுக்கு விருந்து நடக்கும். இவையெல்லாம் பக்தர்களின் நேத்திக் கடனாக இருக்கும். சாமி கும்பிடும் நிகழ்வில் பாட்டில் புழக்கம் இல்லாமல் இருக்காது.

திருவிழா முடிந்து ஒருவாரம் கழித்து மறுபுஜை பொங்கல் நடை பெறும். இன்று சிறிய அளவில் பூஜையும், சினிமா திரைப்பட வேடிக்கையோடு மறுவார பூஜை முடிவுக்கு வரும். அதற்கு அடுத்த வாரம் கோவிலுக்கு விளக்கு போட பூசாரியும், பூசாரியின் கடைசி மகனும் தான் இருப்பார்கள். காலப்போக்கில் பூசாரி வீட்டில் உள்ள கடைக்குட்டிதான்  வெள்ளி, செவ்வாய்க்கு விளக்கு போடுவான். அப்புறம் சாமி அடுத்த நல்லநாளுக்குத்தான். இடைப்பட்ட வேளையில் திசை நோக்கி கும்பிட்டு கொள்வது தான் வழக்கம்.

மதுரை நாட்டார் தெய்வங்களின் பெரிய கும்பிடு போல்தான்  உலகத் தமிழ் செம்மொழி மாநாடு, மாசித்திருவிழா போல் ஆங்காங்கு ஆய்வரங்குகள், கருத்தரங்குகள், கவிதை மன்றங்கள். நாட்டார் தெய்வங்களின் நிலைதான் நம் தாய் மொழிக்கும். மீனாட்சிக்கு ஆறுகால பூஜை. எல்லா வேளை பூஜைகளிலும் வரிசையில நிற்கும் பக்தர்கள். குறையேதுமில்லை.

தொடர்ச்சியான முயற்சிகள் என்ன? வெறும் அறிவிப்புகள் மட்டும், தமிழை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லுமா? ஒரு தோழரின் அனுபவம் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் இந்தி வார்த்தைகளை தார் பூசி அழிக்கச் சென்றவன், இங்க மூனு தினுசா எழுத்து இருக்கு, எதை அழிக்க என்று கேட்டானாம். இதில் எது இந்தி வார்த்தை, ஆங்கில வார்த்தை என அறிந்த கொள்ள முடியாத தமிழன், நேற்று கோவையில் கூடி தமிழை ஆய்ந்து வளர்த்ததில் மட்டற்ற மகிழ்ச்சி தான்.

தமிழ் வார்த்தைகள் எது என்று கண்டுபிடிக்கும் அளவிற்கு வளர்ந்து விட்டோம். தவறின்றி எழுத வளர்ந்த விட்டோமா என்றால் வேதனைதான். தமிழ் வழியில் பட்டப்படிப்பு முடித்த என் தமிழனுக்கு குறைந்தபட்சம் லகரம், னகரம், ஒற்று இவைகளில் தேர்ச்சி இல்லை. யாரை குற்றம் சொல்ல, அக்கறையில்லாத தமிழ் ஆசானையா? அரைகுறையாய் கற்ற என் சொந்தங்களையா?

திருவிழா வரவேற்பு சுவரொட்டியில் 'கலந்து கொள்ள' என்ற அழைப்பு வாசகத்தில் 'களந்து' என்று அச்சிடப்பட்டிந்தது. அங்கிருந்தவர்களிடம் சொல்லி மாற்றச் சொன்னேன். பணி நிமித்தமாக அரக்கோணத்திலிருந்த திருத்தணிக்கு பயணிக்கும்போது, சாலையோர தூரம் காண்பிக்கும் கல்லில் ஒரு இடத்தில் 'திருத்தனி' என்று எழுதப்பட்டிருந்தது. முருகன் கோபம் தணிந்த தணிகை, இங்க தனியாக இருக்கிறது. திருப்பெரும்புதூர் பேருந்து நிலையத்தில் சாலையோர கடைகளின் முகவரியில்... 'திருப்பெரும்பூதூர்' ஸ்ரீபெரும்புதூர், ஸ்ரீபெரும்பூதூர், திருபெரும்புதூர் என்ற ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொன்றாக.  எனக்கு எது சரி என்று அறிவதில் ஆர்வம் வர, “திருப்பெரும்புதூர்“ தான் சரி என பேருந்தில் என் அருகில் அமர்ந்திருந்த நண்பர் சொன்னார். இதில் வேடிக்கை என்னவென்றால், சுற்றியிருந்த அனைத்து ஆங்கிலப் பலகையிலும் ஒரே மாதிரியாக பெயர் எழுதப்பட்டிருந்தது. யோசித்த ஒரு கணம் கண்ணீர் மல்கியது. பெற்ற தாய்க்கு ஒழுங்காகக் கஞ்சி ஊத்தாமல் இப்படி விட்டு விட்டார்களே! என்ற ஏக்கம் செங்கற்பட்டு வரும் வரை.... நீண்டிருந்தது.

குஜராத்தில் உள்ள வல்சாத் நகரத்திற்கு சென்றிருந்தேன். எங்கு பார்த்தாலும் குஜராத்தி மொழிகளிலேயே பெயர்ப்பலகைகள். இவ்வளவு ஏன் எண்கள் கூட குஜராத்தி எண்கள். நாம் வெறும் பேச்சு ஆள்கள்தான். நமது நகரங்களில் விளம்பரப் பலகை, பெயர்ப் பலகை பெரும்பாலும் ஆங்கில ஆதிக்கத்தில்தான் உள்ளது. தமிழில் இருக்கின்ற பலகைகள் தகராறோடு தொங்குகிறது. 

கண்ணீர் அஞ்சலி சுவரொட்டி தொடங்கி விளம்பர சுவரொட்டிகள் வரை தமிழ்த்தாய் குறைப் பிரசவத்தில் இருக்கிறாள். நமது நண்பர்கள் இது குறித்து வருந்துவதாகத் தெரியவில்லை. ஆங்கிலத்தை சரியாக எழுத வேண்டுமென்ற அக்கறை, எடுத்துக் கொள்கிற முயற்சி தமிழுக்குத் தராமல் போனது குறித்து நாம் வருந்தியே ஆக வேண்டும்.

தமிழகத்தில் தமிழை பிழையின்றி எழுதுபவர்களை விட ஆங்கிலத்தை அழகாக எழுதுபவர்களே அதிகமாக இருப்பார்கள் என்ற எனது கணக்கு சரியாகத்தான் இருக்கும் என்று நம்புகிறேன். எண்கணிதம் (பெயர் ஜோதிடம்) பார்த்து, ஒற்று, குறில், நெடில் போன்றவையை எடுக்கின்ற அபாக்கியமும் சில இடங்களில் நடந்தேறுகிறது.

செம்மொழி மாநாட்டுப் பாடலில் 'கேளிர்' என்ற பதம் 'கேளீர்' என ஒலித்தது. இன்றும் அவ்வாறே ஒலித்துக்கொண்டுள்ளது. தவறுதலாக நடந்த ஒன்றா? என் காதில் தான் ஏதாவது கோளாறா?  தமிழ் ஆய்ந்த வல்லுநர்களின் படைப்பே இப்படி இருந்தால் மற்றவர்களை நாம் என்ன சொல்வது.

இது ஒரு அரசு ஆணையால் செய்து முடிக்கக் கூடிய காரியமில்லை என்பதை நான் நன்கு அறிவேன். இதனை நமது அரசு செய்யும் என்ற நம்பிக்கையும் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. ஆனால், நிச்சயம் மாற்ற முடியும் ...  மராட்டிய அரசுக்கு குஜாரத்திய அரசுக்கு இருக்கின்ற நெஞ்சுரம் இருப்புச் சாலையில் தலை வைத்துவர்களுக்கு வரவில்லை என்பதுதான் வருத்தம்.  
நூல்களை புடவையாக்குகின்ற நெசவாளன் போல், நம் மொழியை வெளியில் தருபவர்கள் தட்டச்சு, மின் அச்சு செய்பவர்கள் மற்றும் ஓவியர்கள். இவர்களிடம் மொழித்திறன் மேம்பட்டிருக்கும்பட்சத்தில் 50 சதவிகிதம் நல்ல மாற்றத்தை பார்க்க முடியும். 'திருநிறைச் செல்வன்' என திருமணப் பத்திரிக்கையில் அச்சிடப்பட்டிருக்கும். இவ்விடத்தில் “ச்“ஒற்று வராது. இங்கு ஒற்று மிகும்போது மாறும்.  பெரும்பாலும் ச் ஒற்று இடம் பெற்றிருக்கும்.  ஏன்? பழையதையே வெட்டி ஒட்டுவதால் மீண்டும், மீண்டும் அரங்கேறும்.

சுவர் விளம்பரம் எழுதுவோரும், கணிப்பொறியில் தமிழில் மின்னச்சு செய்பவர்களும் தமிழை வளர்ப்பதில் முக்கியமானவர்கள். இவர்கள் தங்களின் பொறுப்புணர்ந்து தமிழ் கற்க வேண்டும். நம் தாய்மொழியின் சிறப்பை அறிந்து போற்றுதல் வேண்டும். இனிமையான நம் மொழி ஒரு சின்ன மாற்றத்தால் கூட பொருளையே மாற்றிவிடும் தன்மை உள்ளது.


மொழிமீது அக்கறையுள்ள தமிழ் அறிஞர்கள் இளைஞர்களுக்கு  தேடிச் சென்று கற்றுக் கொடுங்கள். தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவாவிட்டாலும் பராவாயில்லை.  நமது மண்ணில் நலமுடன் இருக்கட்டும்.  தனித்தமிழ் எல்லாம் மொழியை மையப்படுத்தி அரசியலுக்கு வந்தவர்கள் வைத்துக்கொள்ளட்டும்.  நாம் விரும்புவது...  பிழையில்லாத் தமிழ்.... நம் பிள்ளைகளுக்கு தமிழ்... பிள்ளைத் தழிழ்....