Saturday, November 10, 2012

ஒலி மாசை ஒழிப்போம்


அந்திமாலையும், முன்னிரவும் சந்தித்துக்கொள்கிற வேளையில், வெளியூருக்கு வினை நிமித்தமாய் சென்ற நம் சங்ககால தலைவன் (கதாநாயகன்) வினை முடிந்து வீடு திரும்பும் வேளையில், தேரின் மணியினை ஒலி எழுப்பாதவாறு தேரோடு இணைத்து நன்கு கட்டுகிறான்.  மணி இருப்பதே ஒலி எழுப்பத்தானே! பிறகு ஏன் இப்படிச் செய்கிறான்.  நாயகன் நாயகியை காணச் செல்கிற வழியில் வண்டுகள் தன் இணையோடு கூடி மகிழும்.  தேர் மணி ஓசை அவைகளுக்கு அச்சத்தைக் கொடுத்து பிரிந்துவிடக்கூடும் என்று   நாயகியை பிரிந்திருந்த நம் நாயகன் நினைத்தான்.  அதனாலேயே தேர்மணியை இறுக்கக் கட்டினான்.  அவன் இதயத்தில் எவ்வளவு காதல்... இல்லாள் மீதும், இவணுக்கு எந்தவகையிலும் தொடர்பில்லாத வண்டுகள் மீதும்... அன்பு மிகுந்தவர்களிடம் அக்கறை அதிகமாக இருந்ததை அகநானூறு சொன்னது.  ஆனால்,

இன்று... காதலியை காண இரண்டு சக்கர வாகனத்தில் போகிறவர்கள் எழுப்பும் ஒலி செவிப்பறையைக் கிழிக்கிறது.  பேருந்துகளின் ஒலி எழுப்பானில் இருந்து வருகிற இரைச்சல் காதை அதிர வைக்கிறது. அதிலும் சில தனியார் பேருந்துகள் விதவிதமான வடிவில் ஒலி எழுப்பானில் இருந்து ஒலியை எழுப்பி முன்னே செல்பருக்கு பயத்தை உண்டாக்குகிறார்கள். நமது முன்னேற்றத்தின் மைல்கல்லாய் அமைந்த ஒவ்வொரு வாகனமும் தருகிற இரைச்சல் ஒலி மாசை ஏற்படுத்துகின்றன. இந்த ஒலி மாசு மனதிற்கு ஒவ்வாத இரைச்சலை ஒலித்து உயிரினங்களின் வாழ்க்கை முறைகளையே மாற்றியமைக்கின்றன. 

ஒலி மாசால் உடல் நலத்தில் பாதிப்பு, மனஉளைச்சல், உடல் சோர்வு, கோபம், மன அழுத்தம், கேட்கும் திறனில் குறைபாடு, தூக்கமின்மை இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.... இவை நாம் தேடித் தேடி பிடித்து பழக்கிக்கொண்டதுதான்.....
நம்மைச் சுற்றி ஏதேனும் ஒலித்துக் கொண்டிருப்பதை மனித மனம் எப்போதும் விரும்புகிறது. அந்த அளவிற்கு சத்தங்களோடு பிறந்து வளர்ந்து வாழ்ந்து கொண்டிருக் கிறோம். அதே நேரம் அளவுக்கு மீறிய ஒலியையும் நம்மால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை.
இசையின் ஒலியில் மயங்கிப் போகின்ற நமது மனம் அதே இசை பெரும் இரைச்சலோடு வெளிப்படும்போது முகம் சுழித்துக் கொள்கிறது. ஆயுதபூஜை வந்தால் போதும்... வீதிகள் தோறும் ஒலி பெருக்கி.... வீதிக்குள் 100 மீட்டர் இடைவெளியில் ஒலி பெருக்கி... ஆயுத பூஜையை நம் தொழிலுக்கு உதவுகிற ஆயுதங்களுக்கு செய்யாமல், நமக்கு ஆப்பு வைத்துக்கொள்வது தகுதியான செயலாகுமா?  அரசியல் தலைவர்கள், சினிமா நடிகர்களுக்கு பிறந்த நாள் வந்துவிடக் கூடாது, கூடாதா ஒலி பெருக்கிகள் மனிதர்கள் கூடுகின்ற இடங்களில் எல்லாம் கூடி பாதகம் செய்யாதவர்களையெல்லாம் பாதிப்புள்ளாக்கும்.... இவர்களை நெறிபடுத்த நிர்வாகத்தால் இயலவில்லை.... ஏன்? இவர்களை ஆட்சியாளர்கள்  அல்லவா நிர்வகிக்கிறார்கள்..... கைக்கெட்டும் தூரத்தில் ஒலி பெருக்கி அமைப்பதை ஏன் அனுமதிக்க வேண்டும்? காது கேட்கும் தூரம் வரை என அளவு வைத்துக்கொள்ளலாமே!  அறியாமாலா செய்கிறார்கள்.... ஆணவத்தில்.... அதிகாரத்தில்....
வெடிவெடிப்பது.... காசை கரியாக்கி, ஓசையை நோயாக்கும் உபத்திர செயல்.  கோவில் திருவிழா, தலைவர்கள் வருகை, தாய்மாமன் சீர் இப்படி காதுகுத்துவதில் தொடங்கி, பெண் பார்க்கப் போகிற படலம் வரை வெடி வெடித்து, அதிலும் சத்தம் அதிகம் வரக்கூடிய வெடிகளை வெடித்து, சந்ததியை சாகடிக்கின்றனர்.  உசிலம்பட்டிக்கு அருகில் சமீபத்தில் நடந்த கோவில் திருவிழாவில் வெடி வெடித்த இளைஞர் இறந்த செய்தி கேட்டபோது இதயம் வலித்தது.  யாருடைய சந்தோசத்திற்கு இந்த வெடி... பறவைகளுக்காக தீபாவளியன்று கூட வெடிப்பதை மறந்த கிராமங்கள் இருக்குற நமது மண்ணில் மனிதர்களின் உயிர் மீது இவ்வளவு அக்கறையின்மை அவமானப்படவைக்கிறது.  வெடி, ஒலி மாசுபாடோடு  மட்டும் நின்றுவிடுவதில்லை, அது காற்று நிலம் என நீளும்.... வாழ்வின் சந்தோசம் பிழைப்பு நோக்கி இருக்க வேண்டுமேயொலிய இறப்பை நோக்கியல்ல....
ஒலிகளின் காலம் எனப்பேசுமளவிற்கு தற்போது நம்மைச் சுற்றி ஒலிகளின் அத்துமீறல் மிகக் கடுமையாக நடந்து கொண்டிருக்கிறது. அதிலும் தொலைக்காட்சி, வானொலி, அலைபேசி ஆகியவை பல்வேறு புதிய வடிவங்களில் நமக்குள் ஊடுருவிக் கொண்டேயிருக்கின்றன. ஒலி அத்துமீறல் நிகழ்கின்ற களங்களின் எண்ணிக்கையும், சராசரியான ஒலி அளவும் தற்போது மிகவும் அதிகரித்துவிட்டது.
ஒலியளவு அதிகரித்துள்ள வாழ்விடங்களில் பெரும்பாலோனருக்கு நரம்புத்தளர்ச்சி, இதய நோய் பாதிப்புகள் பரவியுள்ளதாக கண்டறிந்துள்ளனர்.  தொடர்ச்சியான இரைச்சல் மனித இறப்புக்கு வித்திடும் என்ற எச்சரிக்கை இரைச்சலின் ஆபத்தை நமக்கு உணர்த்துகிறது.
அலைபேசியில் அதிகம் நேரம் பேசினால் காதுகளின் திரைகளுக்கும், நரம்புகளுக்கும் பாதிப்பு ஏற்படும் என்று  அறிஞர்கள் வலியுறுத்துகின்றனர்.  அலைபேசி பயன்படுத்துவோர்களே இதனை உணர முடியும்.  அடுத்தவர் சொல்லி அறிந்து கொள்ள வேண்டியதில்லை. அலைபேசிகளில் பேசுவோர் சிக்னல் கிடைக்கவில்லையென சில சமயங்களில் அவருக்கு கேட்குமளவிற்கு சத்தம் போடுவர்.  அதிக சப்தம் காது சவ்வை கிழித்து ரத்த போக்கை கூட ஏற்படுத்தும்.  ஒரு மனிதன் 30 முதல் 50 டெசிபல் அளவு சப்பத்தை கேட்களாலம்.  அதற்கு அதிமாக கேட்கும் போது உடல், உள்ள அளவில் பாதிப்பு ஏற்படும். 

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள பள்ளிகளில் ஆய்வு செய்ததில் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் செவித்திறன் குறைபாடு அதிகமாக இருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது.  பஞ்சாலைகளில் பணியாற்றுகிற பணியாளர்களுக்கும் இது போன்ற குறைபாடு உள்ளதை காண முடிகிறது.  இவைகளெல்லாம் அதிக அளவிளான சத்தத்தை கேட்பதால் ஏற்பட்ட குறைபாடு ஆகும்.
வாகனங்களில் பயன்படுத்தப்படுகிற மின்னனு காற்று ஒலிப்பான்கள் அதிக டெசிபல் அளவுள்ள ஒலியைக் கொடுத்து சூழலைக் கெடுக்கின்றன. இது போன்ற காற்று ஒலிப்பான்களை தடைசெய்வதில் ஆளும் அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும்.  இச் செயல் வாழும் குடிகளின் வசந்தத்திற்கு வழிவகுக்கும்.
இயற்கை வளங்கள் பொதுச்சொத்து.  இயற்கையை பேணுகின்ற சூழல் மேம்பாட்டில் ஒவ்வொரு தனிமனிதனும் பங்கெடுத்து சூழலை மேம்படுத்துவது அவசியமாகும்.  துறைசார் வல்லுநர்கள் சாலையோரங்களில் மரங்கள் வைப்பது மேம்பாட்டிற்கான வழிகளில் ஒன்று என்கின்றனர். ஒலி மாசுக்கும் சூழலுக்கும் என்ன தொடர்பு என்ற கேள்வி எழுவது நியாமானதுதான். 
ஒலி மாசு மனிதனோடு நின்றுவிடுவதில்லை.  இப்புவியில் வாழும் இயற்கையைப் பேணும் உயிரினங்களின் மீதும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.  குறிப்பாக பறவை இனங்களை பெரிதும் பாதிக்கிறது.  இயற்கை இன்னும் இருக்கிற இடங்களுக்கு சுற்றுலா செல்கிறேன், எனது சுதந்திரம் எனும் பேர்வழிகள் அங்கும் ஒலி மாசை ஏற்படுத்துகிறார்கள். விளைவு  அங்குள்ள காட்டு விலங்குகள் பெருமளவு பாதிப்பிற்குள்ளாகின்றன. அமைதியான சூழலில் வாழ விரும்பும் அனைத்து காட்டுயிர்களின் நிம்மதி மனிதர் நடமாட்டத்தால் குலைக்கப்படுகிறது. இதனால் பல்லுயிர்ச் சூழலுக்கு பெரும் கேடு ஏற்படுகிறது. மனிதன் தனது சுயநலத்தால் பிற உயிர்களை மட்டுமன்றி, தன்னையும் அழித்துக் கொள்கின்ற பேரவலம் ஒலி மாசின் காரணமாக நிகழ்ந்துகொண்டேயிருக்கிறது.
ஒலி மாசை குறைக்க என்னதான் செய்வது?  நம் வீடுகளில் காகம் கரைந்தால் வீட்டிற்கு உறவினர்கள் வருவார்கள் என்றும், கதவை ஆட்டினால் வீட்டில் சண்டை வரும் என்றும் பெரியவர்கள் குழந்தைகளிடம் சொல்வதை கேட்டதுண்டு. கதவை ஆட்டுகின்ற குழந்தைகளை பெரியவர்கள் திட்டுவதுமுண்டு. கதவை ஆட்டினால் சண்டை வருமா? வரும். கதவுகளை அசைக்கும் போது அதிலிருந்து ஒலி எழும்.  அந்த ஒலி மனதில் எரிச்சலை ஏற்படுத்தும்.  எரிச்சல் சண்டையில் கொண்டு வந்துவிடும்.  எனவே, நம் முன்னோர்கள் மிகை ஒலிகைளை தவிர்க்க அவர்கள் கெட்டியாக பிடிக்கக் கூடிய காரணங்களைச் சொல்லி தடைசெய்து வைத்திருந்தனர்.   மனிதன் கெட்டியாகப் பிடித்து பின்பற்றக் கூடிய வழிகளை கற்றுத் தருவது காலத்தின் கட்டாயம்.  நாம் வாழும் புவியை நமதாக்கிக் கொள்ள சூழல் மேம்பாட்டில் கவனம் செலுத்துவது தனிமனிதக் கடமை.  ஒலி மாசை குறைக்க உள்ளுக்குள் இருக்கும் போலி கதாநாயகத்தன்மையை குறைத்திடுவோம்.
பசுமைத்தாயகம் சுற்றுச் சூழல் இதழில் வெளிவந்தது...

No comments: