Saturday, November 10, 2012

குஞ்சுகளை கோழி காக்கும் பிஞ்சுகளை பெற்றவர்கள் காப்போம்


அன்பும் பண்பும் பாசமும் நிறைந்த வகுப்பாசிரியர் அவர்களுக்கு, வணக்கம்.  உங்களை முதலில் பார்த்த போது கொஞ்சம் பயமாக இருந்தது.  இப்போது அப்படி இல்லை. நான் முன்பு படித்த திருமயம் பள்ளியில் அடிக்கடி பாராட்டுவார்கள்.  நீங்கள் இப்பொழுது கொஞ்சம் கொஞ்சம் பாராட்டுகிறீர்கள்...  நான் முன்பு படித்த பள்ளியில் நாங்கள் ஆங்கிலத்திலேயே பேசுவோம்.  ஆனால் இங்கு முடியவில்லை.  அங்கு என் தந்தையால் பணம் (fees) கட்ட முடியவில்லை. இங்கு முடிகிறது.... இப்படி ஒரு வசனம் பசங்க திரைப்படத்தில் வரும்.  இந்த வசனத்திலிருந்து ஒரு செய்தி ஆங்கிலத்தில் பேசுவது பெற்றோர்கள் மத்தியிலும் மாணவர்கள் மத்தியிலும் ஒரு மோகமாகவே பார்க்கப்படுகிறது.  இன்னொன்று ஏன் அந்த அரசுப் பள்ளி தனியார் பள்ளிக்கு ஈடுகொடுக்க இயலவில்லை....

ஆங்கில மோகம், தனியார் பள்ளிகளின் தரத்தின் மீது மோகம் பல சிறார்களை காவு வாங்கியது, வாங்குகிறது, வாங்கும்.... தாம்பரம் அருகே உள்ள சேலையூர் இந்திரா நகரில் சீயோன் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ருதி, பள்ளிக்கூட பஸ்சில் இருந்த ஓட்டை வழியே விழுந்து பலியானாள். பாதுகாப்பின்றி ஓட்டை விழுந்த பஸ்சில் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற பஸ்சுக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்புதான் போக்குவரத்து அதிகாரிகள் தகுதிச் சான்றிதழ் (பிட்னஸ் சர்ட்டிபிகேட்) வழங்கினர் என்பது வேறு விசயம்.  அடுத்த இரண்டாவது நாளில் ஆம்பூர் அருகே தனியார் பள்ளி பஸ்சில் சிக்கி அதே பள்ளியை சேர்ந்த 3 வயது சுஜிதா எல்கேஜி பயிலும் சிறுமி தலை நசுங்கி பலியானார். சிதம்பரத்தில் பேருந்தில் கீழே இறங்கும் போது பின்பக்க டயர் ஏறி பலி,  பிற்பாடு குழந்தைகள் விபத்தில் இறந்த செய்திகள் தினந்தோறும் ஊடகங்களில்....

நடுத்தர குடும்பத்தில் கீழ்நிலையில் இருக்கும் ஸ்ருதியின் தந்தை என் மகள் மறைந்துவிட்டாள் என்பதை என்னாலும் என் குடும்பத்தினராலும் நம்பவே முடியவில்லை. எனது நினைவில் தொடர்ந்து வலம் வந்து கொண்டு இருக்கிறாள். காலையில் அவளை பள்ளிக்கு அழைத்துச் சென்று முடிச்சூரில் இறக்கிவிட்டுச் செல்லும் நான், இரவில் வீடு திரும்பும்போது சமயங்களில் விழித்திருப்பாள். பெரும்பாலும் தூங்கி விடுவாள். இப்போது நிரந்தரமாகத் தூங்கச் சென்று விட்டாள்.

அவளது இழப்பு ஒருபுறம் எங்களை தாங்கமுடியாத துயரத்தில் ஆழ்த்தினாலும், சமூகத்திற்கு மிகப்பெரிய பாடத்தை தனது மரணம் மூலம் உணர்த்திவிட்டுச் சென்று விட்டாள். அவள் மூலம் தமிழ்நாட்டில், இந்தியாவில் பஸ்கள் மூலம் கலவி பயிலச் செல்லும் பள்ளிக் குழந்தைகளுக்கு சட்ட ரீதியான தார்மிகப் பாதுகாப்பு வளையம் கிடைக்க வழி ஏற்பட்டுள்ளது. 

குழந்தைகளை ஆசையோடு பெற்று, வளர்த்து மிகப்பெரிய கனவுகளுடன் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கும் பெற்றோர்களுக்கும், பள்ளிகளுக்குக் குழந்தைகளை அழைத்துச் செல்லும் வாகனங்கள் ஓட்டுபவர்களுக்கும் மறக்கமுடியாத பாடத்தை உணர்த்தி விட்டாள்.  வேறு எந்த ஒரு பள்ளிக் குழந்தைக்கும் இனி இதுபோன்றதொரு மரணம் நிகழாவண்ணம் தடுக்கும் பாதுகாப்பு கேடயமாக என் மகள் ஸ்ருதி அமைந்து விட்டாள் என்பது தாங்கமுடியாத துயரத்திலும் ஆறுதலான விஷயம் என்று கண்ணீர் பெருகி வழிந்தோடியபடி கூறினார் ஸ்ருதியின் தந்தை சேதுமாதவன்.  சம்பவம் நடந்த இரண்டு மூன்று நாள்கள் ஸ்ருதியின் தந்தை ஊடகங்களில் காட்சிப் பொருளாய் இருந்தார்.

சிட்டாய் பறக்கின்ற சிறார்களின் சிறகுகள் முறிந்தமைக்கு பள்ளி நிர்வாகமும், வாகன ஓட்டுநர்கள் மட்டும் தான் காரணமா? பறிகொடுத்த பெற்றோர்கள் இல்லையா? பள்ளி நிர்வாகமும், வாகன ஓட்டுநர்களும் அம்புகள்... எய்தவர்கள் பெற்றோர்கள்...  மூன்று வயது சிறுமியும், ஏழுவயது சிறுமியும் வாகனத்தில் சென்று படிக்க தகுயானவர்களா? இந்தக் கேள்வி குறுகிய மனதுள்ளவர்களின் கேள்வி என்று நீங்கள் நினைக்கலாம்... ஆனால், உண்மை அதுவல்ல...

இந்திய சுதந்திரத்திற்குப் பின் கல்வி குறித்த விழிப்புணர்வு ஆள்வோர்களால் வாழ்வோர்களுக்கு கிடைக்கப் பெற்றது.  இதன் தொடர்ச்சியாக ஆள்வோர்கள் ஆங்காங்கே ஆரம்பப் பள்ளிகளை ஆரம்பித்தனர்.  இதன் ஆழம் இன்றைய அனைவருக்கும் கல்வி இயக்கம் வரை விழுதுவிட்டுள்ளது. தொடக்க காலத்தில்  தொடக்கக்கல்வியை சொந்த ஊரில் படித்தவர்கள் மேற்கொண்டு படிப்பதற்கு அண்டை ஊர்களை நாடினர்.  “ஐந்து கிலோ மீட்டர் வரை உள்ள தூரம் அண்டை ஊர்களுக்கான வரையறை  ஐந்து கிலோ மீட்டர் நடந்தும், இதற்கு மேல் உள்ள தூரத்தை மிதி வண்டிகளில் சென்று கல்வியைத் தொடர்ந்தவர்கள் பலர் ஆசிரியராகவும், சிலர் காவல் துறையிலும், இன்னும் சிலர் விவசாயப் பணிகளையும் பார்க்கின்றனர். அடுத்த தலைமுறை கல்விக்கு ஆங்காங்கு பள்ளிகள் தொடங்கப்பட்டன.

இந்தி எதிர்ப்புக்கு பின் இங்கிலிஸ் ஏற்றுக்கொள்ளப்பட்ட வேளையில் ஆங்கில வழி பள்ளிகள் ஆங்காங்கு முளைக்கத் தொடங்கின.  இந்தச் சேவையை தனியார் நிறுவனங்கள் கையில் எடுத்தன.  உலகத்தரம் உங்கள் ஊரிலும் கோசத்தோடு பெரும் நகரங்களில் தொடங்கிய தனியார் ஆங்கில வழி கல்விச் சேவை இன்று குக்கிராமம் வரை வேர் விட்டுள்ளது.  இருந்தும் அண்டைப் பள்ளிகளில் மூன்று வயது பாலகர்களை படிக்க அனுப்புவதில் தயக்கம் காட்டி, வாகனங்களில் சென்று திரும்புவதையே சமுக மதிப்பாக கருதுகின்றனர்.  

இந்தப் பள்ளி வாகனங்கள் மஞ்சள் நிறத்துடன் இருக்க வேண்டும். வாகனத்தின் முன்புறமும் பின்புறமும் பள்ளி வாகனம் என எழுத வேண்டும்.  பள்ளி வாகனமல்லாத பிற தனியார் வாகனம் என்றால் பள்ளிப் பயன்பாட்டுக்கு என்று எழுத வேண்டும்.  மாணவர்கள் பயணிக்கும் வாகனத்தில் முதலுதவிப் பெட்டி இருக்க வேண்டும். வேகக் கட்டுப்பாட்டுக் கருவி... ன்னல்களில் படுக்கை வாக்கில் கம்பிகள்... விபத்து ஏற்பட்டால் எளிதாக வெளியேறுவதற்கு அவசர வழி... வாகனத்தின் மீது பள்ளியின் பெயர் மற்றும் தொலைபேசி எண்... குழந்தைகளுக்கு உதவ உதவியாளர்... இத்தனையோடு ஆசிரியர் ஒருவர் உடன் செல்வது.... இன்னொன்று கனரக வாகனத்தை இயக்கும் அனுபவம் வாய்ந்த ஓட்டுனர்.... இவ்வளவு வழிகாட்டுதல் இருந்தாலும் இதனை கடைபிடிப்பார் யாரும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.  முறையாக இருந்திருந்தால் பச்சிளம் குழந்தைகள் இறந்திருக்கமாட்டார்கள்... என்ன செய்யவது?

தனியார் இப்படி என்றால் அரசு அண்டை பள்ளிகளில் படிப்பதை ஊக்குவிப்பதாக தெரியவில்லை.  அதை விடுத்து விலையில்லா பேருந்து பயணத்தை அரசு அறிவித்தது.  ஆரம்பக் கல்விக்கே அயலூருக்கு செல்கின்ற நிலை ஏற்பட்டுவிட்டது. அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் இந்த பேருந்துகளில் ஏறுவதற்கு அவர்கள் படுகின்ற அவதி கொஞ்சம் நஞ்சமல்ல... மாணவர்களை பார்த்ததும் பேருந்து பத்து மீட்டர் தள்ளி நிற்கும்.  நமது குழந்தைகள் ஓடுவார்கள்... இடறி விழுந்தால் என்னாவார்கள் என்பது குழந்தைகளை பெற்றெடுத்து அந்த அரசு ஓட்டுநருக்கும் நடத்துநருக்கும் தெரியும்... இருந்தும் இதைச் செய்ய அவர்கள் தயங்குவதில்லை, தவறுவதில்லை.  பேருந்தில் பயணிக்கிற நாமும் தட்டிக்கேட்பதில்லை. 

பள்ளி சிறார்களை ஆட்டோ போன்ற சிறிய வாகனங்களில் பொருள்களை அள்ளிப் போட்டு போவது போல் ஏற்றிச் செல்கின்ற அவலத்தைப் பார்த்தும், பயமின்றியே பெற்றோர்கள் அனுப்புகிறார்கள் என்பதற்கான காரணம்? “நான் பட்ட சிரமத்தை என் குழந்தை படக்கூடாது  “ஆங்கிலம் தெரியாமல் நான் பல நேரங்களில் ஊமையாக இருந்திருக்கிறேன்.  எனது பதவி உயர்வு அதனாலலேயே பாதிக்கப்பட்டது என்ற சில பத்தாம் பசலிகளின் கூப்பாட்டால், மூடை தூக்கும் முருகனும், அன்றாடம் சம்பளம் பெறும் அத்தக்கூலி பணியாளரும், குறைந்த ஊதியத்தில் நிறைந்த பணியை செய்து கோடிக் கனவில் இருக்கும் குபேரனும், ஆங்கில வழி பள்ளிகளுக்கு ஆயிரமாயிரமாய் கொட்டுகின்றனர். இவர்கள் மட்டுமில்லை... அரசு ஆரம்பப்பள்ளியின் ஆசிரியை தனது குழந்தை தான் பணி செய்யும் பள்ளியில் சேர்ப்பதில்லை. மாறாக தரம் பார்த்து வேறு தனியார் பள்ளியிலேயே சேர்த்துவிட்டு, தான் பணியாற்றுகிற பள்ளியில் சேர்க்கை குறைவு என்கிற கூப்பாடு வேறு.  இதோடு நின்றுவிடாமல், தன் குழந்தைக்காக நகரத்தில் தங்கி, தாமதாமாக பள்ளிக்கு வந்து அரசு பள்ளியின் தரத்தை கேள்விக்குறியாக்கி? குழந்தைகளின் பாதுகாப்பை   பலவீணப்படுத்துவதுதான் துயரம்.

ஆறாம் வகுப்பு படிப்பதற்காக என் அப்பா ஐந்து கிலோமீட்டர் நடந்தார், அடுத்த ஊர் பள்ளிக்கு நடந்து சென்று படிக்க வேண்டும் என்பதற்காகவே என் அத்தை ஐந்தாம் வகுப்போடு நின்றார்.  (ஆனால், காடு மேடெல்லாம் நடந்து ஆடு மேய்த்தார் என்பது வேறு விசயம்) இன்றைக்கு அந்தந்த சிற்றூர்களில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் பயிலாமல் அடுத்த ஊர்களுக்கு செல்வதாகவே அறிந்தவர்கள் சொல்கிறார்கள்.  சிறு நகரங்கள் தொடங்கி பெரும் நகரங்கள் வரை சாலைகளில் நெரிசலுக்கு காரணம் பள்ளி வேளை என்பதை நாம் அறிவோம்.   குறைந்தபட்சம் ஐந்தாம் வகுப்பு வரை அந்தக் குழந்தை நடந்து சென்று படிக்கட்டும்.  குழந்தைகள் நடந்து சென்று படிக்கும் போது வாகன நெரிசல் வெகுவாக குறையும்.  வாகன எரிபொருள் பயன்பாடு குறையும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கான பாதுகாப்பும் நம் கைக்குள் இருக்கும் என்பதையும் நாம் அறிந்திட வேண்டும்.

அதே நேரம் கல்வித் தரம் வீட்டிற்கு அருகிலேயே கிட்டச் செய்வதும் அவசியமாகும்.  சமூக மதிப்பீடுகள் மாற வேண்டிய நேரமிது. தரத்தில் தனியார் பள்ளிகளை தூக்கி விழுங்கிட அரசு முன்னெடுக்க வேண்டும்.   வங்கிகளை பொதுவுடமையாக்கிய பெரும் பேறு இந்திராவைச் சாரும்.  இந்த நேரத்தில் பள்ளிகள் பொதுவுடமையாக்கிட வேண்டும்.   அனைவருக்கும் சமமான கல்வி கிடைத்திட ஆள்வோர்கள் வழிவகை செய்ய வெண்டும்.   பெற்றோர்கள் குழந்தைகளுக்கு கல்வி கிடைக்க ஆர்வமிருக்கிற அதே வேளையில்.... குழந்தைகள் பாதுகாப்பையும் உன்னிப்பாக கவனிப்போம். 

No comments: