Monday, September 10, 2012

நிறுத்தப்பட்டிருக்க வேண்டிய பயணம்...


கொத்து கொத்தாய் ஆயிரம் கிலோ மீட்டருக்கு மேல் நின்று கொண்டே இரயில் பயணத்தை தொடர்ந்தனர். இவர்கள் தங்களது ஊரில் திடீரென நடைபெறும் கோவில் திருவிழாவிற்காக செல்லவில்லை.  சொந்தபந்தங்களின் சுக துக்க காரியங்களுக்காக தூக்கத்தை துறந்து துணிந்து பயணிக்கவில்லை.  தலைவரின் தன்மான உரையை கேட்பதற்காக விரைந்து செல்லவில்லை. தனக்கு தமயன் பிறந்திருக்கிறான் என பார்ப்பதற்கு பறக்கவில்லை... 66ஆவது சுநதந்திர தினம் கொண்டாடுகிற வேளையில் சொந்த நாட்டுக்குள்ளேயே பயந்து பயணித்த அவலம் அஸ்ஸாம் மக்களுக்கு நடந்தேறியது.  தங்களை தமது தாய் மண்ணிலேயே தாக்குவார்கள் என அஞ்சி அடிபாடுகளுக்கும் இடுபாடுகளுக்கும் இடையே நீண்ட பயணம்.  அஸ்ஸாம் மக்கள் தங்களை அகதிகளாய் அறிந்து கொண்டது பெரும் துயரம்.

கர்நாடாக முதல்வர் ஷெட்டர் நேரிடையாக வந்து பாதுகாப்பு தருவதாக வாக்கு தருகிறார்.  காவல் உயர் அதிகாரிகள் அருகில் வந்து ஆதரவு தருகின்றனர். தமிழக முதல்வர் நீங்கள் யாரும் கவலைப்படத் தேவையில்லை, தக்க நடவடிக்கைகளை நான் எடுத்துள்ளேன் என்றார்.  இப்படி மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள், காவலர்கள் யார் சொல்லியும் செவிமடுக்காமல் தென்னிந்தியாவில் வடகிழக்கு மாநித்திற்கு பயணத்தை தொடர்ந்தனர்.  அரசு கடந்த காலங்களில் பாதுகாப்பில் எடுத்த முடிவுகளில் மீதே வடகிழக்கு மாநிலத்தவர் வைத்த மரியாதை அவ்வளவுதான் என்பதை நாம் அனைவரும் அறியும் நேரம்.  

ஆஸ்திரிலேயாவில் இந்தியர்கள் தாக்கப்பட்டனர், அமெரிக்காவில் இந்தியர்கள் தாக்கப்பட்டனர்... ஆனால், அவர்களது சொந்த நாட்டிலேயே தாக்கப்படுவார்கள் என்ற வதந்தி, தீ போல் நவீன ஊடகங்களிலின் மூலம் பரவி அஸ்ஸாம் மக்களை அஞ்ச வைத்ததை நாம் என்னவென்பது.  சமீபத்தில் அஸ்ஸாமில் உள்ள பழங்குடியின மக்களுக்கும், வங்க தேசத்திலிருந்து இடம்பெயர்ந்து வந்த சிறுபான்மையினருக்கும் இடையே நடைபெற்ற இன மோதலில் பலர் இறந்தனர், காயமுற்றனர்.  அந்தக் காயத்தின் வெளிப்பாடகவே இது நடைபெறவிருக்கிறது என்கிற குறுஞ்செய்தி, முக நூல் போன்ற இணைய செய்திகளின் வாயிலாக வாய்க்கப்பெற்றதால், வதந்தி வலுப்பெற்றது.

வடகிழக்கு மாநிலத்தவர்கள் தெற்கே கன்னியாகுமரிவரை தொழில், வேலை, காவல், கல்வி என பல்வேறு தேவைகளுக்காக இந்தியா முழுவதும் வியாபித்துள்ளனர்.  கன்னியாகுமரியும் கவுகாத்தியும் தொலைவில் தூரம்தான். இந்தியாவின் மிக நீளமான  தொடர்வண்டிச் சேவையின் மூலம் நெருங்கிதான் இருந்தது.  ஆனால், சமூக அக்கறையில்லாத விஷமிகள் இணையதளங்களில் ஜோடிக்கப்பட்ட காட்சிகளை கட்டவிழ்த்து விட்டு, அஸ்ஸாம் மக்களை அகதிகளாக்கிவிட்டனர்.

நேதாஜி தலைமையில் தேச விடுதலைக்கு ஆயுதம் ஏந்தியவர்கள் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள அடர்ந்த காடுகளில்தான் பயிற்சி மேற்கொண்டனர். தலைவர் போஸ் தலைமையில் தேச விடுதலையில் பங்கு கொண்ட நம் தென்னிந்திய இளைஞர்கள் பலர் அஸ்ஸாம் காடுகளில் தங்களது தடங்களை பதித்தவர்கள். வெள்ளையர்களை விரட்ட பாடுபட்ட பூமியில் இருந்து வந்தவர்கள், அவர்களாகவே மிரண்டு ஓடுவது நமக்கு முரணாக தெரிந்தாலும்.... உண்மையை உற்று நோக்கத்தான் வேண்டும்.   மகராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே நகரில் அஸ்ஸாம் இளைஞர்கள் தாக்கப்படுகின்றனர்... அதன் தொடர்ச்சியாக வதந்தி பரவுகிறது. பிற்பாடு பெங்களுருவிலும் ஒரு இளைஞன் தாக்கப்படுகிறான். நமது அரசு பதட்டப்பட வேண்டாம் பாதுகாப்பு தருகிறோம்.   வெறும் வார்த்தை பயன்தரா என்பதை அரசு இயந்திரம் அறிந்து கொள்(ல்ல)ள வேண்டும்.

வதந்திக்கு கால் முளைத்தால் நடந்து செல்லும். கொஞ்சம் நேரமாகும்.  ஆனால், வதந்திக்கு இறகு முளைக்குமாம்.  நடந்து, கடந்து செல்ல முடியாத இடத்திற்கெல்லாம் கூட சென்று சேரும்.  பொதுவாக நெஞ்சை கெடுக்கின்ற வதந்திகளை படித்தவர்கள்தான் பரப்புகிறார்கள் எனும் போது பாரதி சொன்னது போல் அய்யோ என்றுதான் போவான்.  ஆனால், இவர்களது அச்சம்...

அஸ்ஸாம் மக்களின் அச்சத்திற்கான அத்துனை வதந்திகளும் பாகிஸ்தானிலிருந்து பரந்து வந்தவைதான் என நமது நடுவனரசு முன்வைக்கிறது.  நம் அண்டை சண்டை நாடான பாகிஸ்தானை குறை கூறிக்கொண்டே இருக்கிற அதே வேளையில் நாம் நமது பாதுகாப்பை சரிபடுத்திக்கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம்.   சொந்த நாட்டில் பிழைப்பு தேடிவந்த ஒருவன், கல்வி கற்க வந்த இளைஞன் மனதில் காயம்படுவதை கண்டும் அயல் நாட்டுச் சதி, நீங்கள் சரியாக இருங்கள் என்று சொல்லிக்கொண்டிருப்பது சரியானது அல்ல. 

வலைதளங்கள் என்ன ஆண்டவனின் அடிச்சுவடில் பிறந்து அப்படியே பொத்தென்று அடியவர்களை வந்தடைகிறது.  பிரச்னையின் பின்புலமாக இருக்கின்ற சமூக வலைதளங்களை கட்டிப்போட அரசால் முடியாத? அந்த தேதியிலிருந்தே இது போன்ற காட்சிகள் இருந்தன என்று சொல்கிற இந்திய அரசு ஏன் இது நாள் வரை காத்திருக்க வேண்டும் என்று தெரியவில்லை.   முடக்கிப்போட முடியாத அரசு இயந்திரம் ம்... ம்... என்று வீரவசனம் பேசுவது வேடிக்கையாக உள்ளது.   எங்கள் அரசு அதை சாதித்து, இதை சாதித்து என நாளிதழ்களில் விளம்பரம் செய்து வீணடிக்கிற பணத்தில் இது போன்ற சந்தர்ப்பங்களில் அவை வதந்திகள் நம்ப வேண்டாம் என்பதை நம்பும்படியாக, மக்களின் நாடித்துடிப்பை அறிந்து செய்திடலாம் அல்லவா?

ஒன்றை இந்த நேரத்தில் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.  இங்கு தொழிற்சாலைகளில், தொழில்களில், கட்டிட வேலைகளில், உணவகங்களில் உழைத்து அனுப்புகிற பணத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரு குடும்பம் அங்கு பிழைத்துக்கொண்டிருந்தது.  இப்படி திடீரென திரும்பும் போது எதை எடுத்துச் சென்றிருப்பார்கள்... அவர்களது கடனை யார் அடைப்பார்... ஒரு நாட்டின் முன்னேற்றத்தில் அனைவரது பங்களிப்பும் அவசியமாகிறது.  அணிசேரமாட்டோம் என்று சொல்லிக்கொண்டு அணுகுண்டு தயாரிப்பது நல்ல செயல் அல்ல! நம்மவர்களுக்கு அரணாக இருப்பதுதான் சரியாகும்.  இந்திய நாட்டின் இறையாண்மை காக்கின்ற அதே வேளையில் இயற்கை வளங்களையும் காக்க வேண்டியதும் அவசியமாகும். கலவரங்கள், மோதல்கள் தொடங்கும் போதே தடுத்திட வேண்டும்.  தவறும்பட்சத்தில் மனிதவளங்கள் மாண்டு போகும் அதே வேளையில்  இந்தியாவின் இயற்கை வளங்களும் குறைந்து போகும்.  காக்கை குருவி எங்கள் சாதி என்றவன் வாழ்ந்த மண்ணில் எல்லோரையும் காத்திடுவோம். வடகிழக்கு மாநிலத்தவர்களின் பயணத்தை தடுத்து நிறுத்துவதில் நமக்கும் பங்கு இருக்கு என்பதை நாமும் மறந்து விட்டோம். உள்ளுக்குள் தாக்கப்படுகிற சம்பவம் இது முதல் முறையல்ல... மும்பை பம்பாயாக இருந்த காலத்தில் தமிழர்கள் மட்டும் தனியாக தாக்கப்பட்டனர், எப்படி அடையாளம் காணப்பட்டோம்! அதே இடத்தில் பீகாரிகள் தாக்கப்பட்டதும் அரங்கேறியது.  நமது எண்ணங்களும் செயலும் யாரும் தாக்கப்படக்கூடாது என்பதே!

செப்டம்பர் பசுமைத்தாயகம் சுற்றுச் சூழல் இதழில் வெளிவந்துள்ளது.

No comments: