Saturday, November 10, 2012

மதுவை விரட்ட... தேவை மன மாற்றம்


இரண்டு மாதங்களுக்கு முன் சிறுநீரகக் கற்கள் உருவானதால் மருத்துவரிடம் சிகிச்சை மேற்கொண்டு வந்தேன். எனக்கு மாமா உறவுக்காரர் “என்ன மாப்ளே, அப்பப்ப நம்ம மருந்தை சாப்பிட்டா இப்படி வருமா? ஆஸ்பத்திரிக்கெல்லாம் போக வேணாம், பீரையையும், பிராந்தியையும் கலந்து குடிங்க, இரண்டும் உள்ள போயி முட்டி மோதி, கல்லை கரைச்சு வெளியேத்திறும்“. இது இவரு சொன்ன வைத்தியம். இதைக் கேட்டுக்கொண்டு நடக்கும் போது வழியில் இருவர் தண்ணியடிக்க வேணாம், வெட்டியா சீரழிஞ்சு போகணும் அதற்கு மற்றொருவர், இந்த மதுரையில உனக்கு எத்தன பஸ் ஓடுது! எனக்கு எத்தன பஸ் ஓடுது! ... ஒன்னுமில்ல மூ...டு போ....என்ற ஏளனப் பேச்சு, அடுத்து பேசாமல் நடந்தார். இவனெல்லாம் 1000 வருசம் வாழப்போறவன்! எங்க பங்காளி பாண்டி வருசமெல்லாம் தண்ணியடிப்பாரு, சும்மா இரும்பு மாதிரியிருக்காரு, அவ தம்பி ஒன்னுமே அனுபவிக்காதவன் நூறு வியாதியை வச்சிருக்கான்.... நீ இருடா விதைக்கு,’ இவைகள் மதுமகன்களின்

எனக்குத் தெரிந்த இரண்டு திருமண விழாவின் செலவுகளை விசாரிக்கும் போது கிடைத்த தகவல்... நன்கு படித்து பட்டம் பெற்று, பணியில் உள்ளவரின் திருமண விழாவிற்கு ரூ.40,000 மதுபானச் செலவு. அன்றாடம் சுமை தூக்கும் தொழிலாளியின் திருமண விழாவிற்கு மதுபாணச் செலவு ரூ. 25000 (இது குறைவு).  திருமணச் செலவில் 30 முதல் 40 சதவீதம் மதுவிற்கே செலவு செய்திருக்கிறார்கள். வயது வித்தியாசம் உறவு வித்தியாசம் பாராமல் குடிக்கின்றனர். மது அருந்துவது கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் வழக்கமாகிவிட்டது. பாவம் அவர்கள் என்ன செய்வார்கள். டீ கடை எண்ணிக்கைக்கு தகுந்தாற்போல் டாஸ்மார்க் கடையும் உள்ளது. டீ குடிப்பது போல் மது குடித்து மகிழ்கின்றனர்.

மருத்துவமனை போய்ச் சேராத கிராமத்தில் கூட மதுக்கடைகள் போய்ச் சேர்ந்தது நமது அரசின் சாதனை என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது! மது அருந்தாதவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். மதுக்கடைகளையும், மதுமூலம் வரும் வருமானத்தையும் எண்ணுவதற்கு, தனியாக ஒரு வாரியம் நியமிக்க வேண்டும். ஏழுமலையானைக் காட்டிலும் அதிகம் பேர் வந்து கொட்டுகின்ற ஒரே இடம் மதுக்கடைதான்.

பாண்டிச்சேரியில் முற்பகல் முழுக்க மது ஒழிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டுவிட்டு, மாலை வீடு திரும்பும்போது கணவனுக்கு பிடித்தமான பிராண்ட் பிராந்தி வாங்கி வந்த மனைவி ஒருத்தியை நண்பர் ஒருவர் மூலம் அடையாளம் கண்டபோது, நாம் எந்த அளவிற்கு ஏற்றுக் கொண்டோம் என்பது உறுத்தலாகத்தான் இருக்கின்றது. டாஸ்மார்க் மதுக்கடைகளின் வருமானத்தைக் கொண்டு அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் நடைபெறுவது ஊரறிந்த ரகசியம். மதுவை விற்பவர்களுக்கே இவ்வளவு வருவாய் என்றால் உற்பத்தி செய்பவர்களுக்கு எவ்வளவு இருக்கும் என்பது நாம் அறிந்து கொள்ள வேண்டியது தான்.
சரக்கு வச்சிருக்கேன்... நாட்டுச் சரக்கு... இப்படி சினிமா பாட்டெல்லாம் பாடுவதற்கான காலம் மலையேறிப் போச்சு. விளையாட்டுப் போட்டிகளில் கூட விலை உயர்ந்த மதுபானங்கள் விளம்பரமாக வருவதை சகித்துக்கொள்ளத்தான் வேண்டியதிருக்கிறது. நாலைஞ்சு குடும்பம் வாழ்றதுக்கு கோடிக்கணக்கான குடும்பங்கள் மோசமாவதை கண் கூடாகக் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். 

மது அருந்துபவர்களின் பட்டியல் எடுப்பது மிகச் சுலபம்.  அந்தளவிற்கு மது மகன்களின் (மது மகள்கள்) எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. அரசாங்கமே கடை வச்சிருக்கு, நிறைய (நீதி நூல்கள்) படிச்சவங்க மது புட்டிகள் விக்கிறாங்க குடிக்கிறதுல மட்டும் என்ன தப்பு இருக்குன்னு நியாயம் கற்பிப்பவர்கள் அதிகரித்துக்கொண்டிருக்கிறார்கள்.  முடியாட்சி போன்று இது குடி ஆட்சி.  ஆகையால் குடிமக்கள் அதிகரிப்பதை தவிர்க்க முடியாது.

மது அருந்துபவர்கள் யார்? எல்லோரும்.... எல்லோரும் என்றால் இதில் விதி விலக்கில்லை. அவர்கள் அதிகமாகவே இருக்கிறார்கள்.  ஏழ்மையில் உள்ளோர் அதிகமாக மது அருந்துகிறார்கள்.  அதனாலேயே ஏழ்மையில் உள்ளார்கள் என்பது வேறு.  மது மகன்கள் எது குறித்தும் கவலைப்படுவதில்லை என்பது தான் கவனிக்க வேண்டியது.

எதற்கெல்லாம் மது பார்ட்டி என்று கேட்டால், மோட்டார் பைக் வாங்கினால் பார்ட்டி, அதை ஓட்டினால் பார்ட்டி, விழுந்தாள் பார்ட்டி, எழுந்தால் பார்ட்டி, ஆஸ்பத்திரிக்குப் போன கூட பார்ட்டி... இப்படி பொறந்தா பார்ட்டி. இறந்தா பார்ட்டி, இன்னும் சில ஊர்களில் ரேடியோ கட்டினா பார்ட்டி, தேர்தல் திருமணம் என எல்லா இடங்களிலும் மது உள்ளது.   சிலர் ஏங் வீட்டு விஷேசத்திற்கு தண்ணிக்குப் பதிலாக பிராந்தியைத்தான் ஊத்திக் கொடுப்பேன் என பெருமை பேசிக் கொள்(ல்)கின்றனர்.  பார்ட்டிகளே தினசரி இருக்கும் போது பாவம் மது மகன் என்ன செய்வான்கள். 

குழந்தைகள் பெண்கள் என எல்லோரையும் இந்த வியாதி தொற்றிக்கொண்டுள்ளது என்பதை வருத்தத்துடன் ஒத்துக் கொள்ள வேண்டியுள்ளது.  ஒரு தலைவருக்காக நடந்த ஊர்வலத்தில் கலந்து கொண்ட ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் கூட மது அருந்தியாதாக தகவல் கேட்டு அமைதியாகத்தான் இருக்க முடிந்தது.  நாம் எங்கு இருக்கிறோம். வள்ளுவனின் குறளை வாசித்து, அதற்கு உரை எழுதி, மனனம் செய்து பிழைக்கின்றோம். குறள் படி வாழ்வதற்கு மறுக்கின்றோம். 

ஒரு சில அரசியல் அமைப்புகள் மதுவிற்கு எதிராக மிகப் பெரிய பிரச்சாரம் செய்கின்றன. அவர்களை வரவேற்கின்றோம். அதே சமயத்தில் சமீபத்தில் மதுரையில் நடந்த மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்தவர்களின் பெரும்பான்மையான வாகனங்கள் பச்சை வண்ண பலகை கொண்ட கடைகளில் நின்றிருந்தை அன்றைக்கு மதுரையில் இருந்த அனைவரும் அறிவர்.  கோவை செம்மொழி மாநாட்டிற்கு மதுக்கடைகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கவில்லை என்பதிலிருந்து மதுக்கடைகள் மருந்துக்கடைகளுக்கு இணையாக இருப்பதை அரசாங்கம் உறுதிசெய்துள்ளது.

மிகக் குறைந்த விடுமுறை நாட்கள் கொண்ட அரசாங்கம் சார்ந்த நிறுவனம் டாஸ்மார்க் மட்டும் என்பது நாம் அனைவரும் அறிந்தது.  விடுமுறை விடாமல் அலுவல் நடைபெற அது என்ன அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்புக் கடைகளா!

மகிழ்ச்சியையும் துக்கத்தையும் வெளிப்படுத்தும் காரணியாக மட்டும் மது அமையவில்லை.  அது அன்றாடம் தேநீர் பருகுவது போன்ற ஒரு பழக்கத்தை பலரிடையே ஏற்படுத்தி விட்டது.  மதுவால் உடலுக்கு கேடு, குடி குடும்பத்தைக் கெடுக்கும் என்றெல்லாம் சொல்லி நாம் ஒன்றும் செய்துவிட முடியாது.  நமது நாடு என்னும் கப்பல் மது என்னும் கடலில் மூழ்கிக் கொண்டிருக்கிறது.  மீட்பதற்கு நல்ல தலைவன் வேண்டும். 

நாடு வளர்கிறது. ஆனால், நலிந்தோரின் வளர்ச்சி குறைவாக உள்ளது. ஒரு சில குடும்பங்கள் மட்டும் வளர்வதற்கான ஒரு அரசியல் சூழலை கட்டமைப்பதை கட்டாயம் உடைத்தெறிய வேண்டும்.  இவர்களை எப்படி மாற்றுவது? மாற்றம் என்ற வார்த்தையை தவிர எல்லாமே மாறக் கூடியதுதான். இதனை நம்புவோம்.  குடி ஆட்சியை மாற்றியமைக்க நாம் கதாநாயகன்களை எதிர்பார்த்து இருக்க வேண்டாம் என்பதோடு நிறுத்திக் கொள்கிறேன்.  

பசுமைத்தாயகம் சுற்றுச்சூழல் இதழில் வெளிவந்தது

No comments: