Monday, September 10, 2012

வாங்க வடம்பிடிப்போம்...



மதுரை பகுதியில் மாசி மாத அமாவாசை நாளில் குல தெய்வ வழிபாடு வெகு விமர்சியாக நடைபெறும். ஏழை பணக்காரன் என்ற பேதமில்லாமல் அவரவர் குல தெய்வ கோவிலுக்குச் சென்று, தேங்காய், பழம் வைத்து கும்பிடுவது, முடி காணிக்கை செலுத்துவது, காது குத்துவது, ஆட்டம் பாட்டம் என இரவு, பகல் முழுவதும் சந்தோச வெள்ளத்தில் மக்கள் வெள்ளமிருக்கும்.

இது போக பத்து வருடம், இருபது வருடத்திற்கு ஒரு முறை 'பெரிய கும்பிடு' என தடபுடலாக விழா நடத்துவார்கள். குறிப்பிட்ட குல தெய்வத்தை வழிபடுவோர் தங்களது ஊர்களிலிருந்து, மாமன் மச்சான் உறவினர்களை எல்லாம் அழைத்து வந்து, அனைவருக்கும் புத்தாடை எடுத்து தந்து கிடா வெட்டி, பொங்கல் வைத்து அன்னதானம் வழங்குவது என அமர்க்களமாக இருக்கம். 

இந்த இரண்டு விழாக்களின் போதும் வள்ளி திருமணம், அல்லி தர்பார், நாடகங்களும், ராஜா ராணி ஆட்டம் கரகாட்டம், தப்பாட்டம், சினிமா ஆட்டம் என இரவு முழுக்க கண்களுக்கு விருந்து நடக்கும். இவையெல்லாம் பக்தர்களின் நேத்திக் கடனாக இருக்கும். சாமி கும்பிடும் நிகழ்வில் பாட்டில் புழக்கம் இல்லாமல் இருக்காது.

திருவிழா முடிந்து ஒருவாரம் கழித்து மறுபுஜை பொங்கல் நடை பெறும். இன்று சிறிய அளவில் பூஜையும், சினிமா திரைப்பட வேடிக்கையோடு மறுவார பூஜை முடிவுக்கு வரும். அதற்கு அடுத்த வாரம் கோவிலுக்கு விளக்கு போட பூசாரியும், பூசாரியின் கடைசி மகனும் தான் இருப்பார்கள். காலப்போக்கில் பூசாரி வீட்டில் உள்ள கடைக்குட்டிதான்  வெள்ளி, செவ்வாய்க்கு விளக்கு போடுவான். அப்புறம் சாமி அடுத்த நல்லநாளுக்குத்தான். இடைப்பட்ட வேளையில் திசை நோக்கி கும்பிட்டு கொள்வது தான் வழக்கம்.

மதுரை நாட்டார் தெய்வங்களின் பெரிய கும்பிடு போல்தான்  உலகத் தமிழ் செம்மொழி மாநாடு, மாசித்திருவிழா போல் ஆங்காங்கு ஆய்வரங்குகள், கருத்தரங்குகள், கவிதை மன்றங்கள். நாட்டார் தெய்வங்களின் நிலைதான் நம் தாய் மொழிக்கும். மீனாட்சிக்கு ஆறுகால பூஜை. எல்லா வேளை பூஜைகளிலும் வரிசையில நிற்கும் பக்தர்கள். குறையேதுமில்லை.

தொடர்ச்சியான முயற்சிகள் என்ன? வெறும் அறிவிப்புகள் மட்டும், தமிழை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லுமா? ஒரு தோழரின் அனுபவம் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் இந்தி வார்த்தைகளை தார் பூசி அழிக்கச் சென்றவன், இங்க மூனு தினுசா எழுத்து இருக்கு, எதை அழிக்க என்று கேட்டானாம். இதில் எது இந்தி வார்த்தை, ஆங்கில வார்த்தை என அறிந்த கொள்ள முடியாத தமிழன், நேற்று கோவையில் கூடி தமிழை ஆய்ந்து வளர்த்ததில் மட்டற்ற மகிழ்ச்சி தான்.

தமிழ் வார்த்தைகள் எது என்று கண்டுபிடிக்கும் அளவிற்கு வளர்ந்து விட்டோம். தவறின்றி எழுத வளர்ந்த விட்டோமா என்றால் வேதனைதான். தமிழ் வழியில் பட்டப்படிப்பு முடித்த என் தமிழனுக்கு குறைந்தபட்சம் லகரம், னகரம், ஒற்று இவைகளில் தேர்ச்சி இல்லை. யாரை குற்றம் சொல்ல, அக்கறையில்லாத தமிழ் ஆசானையா? அரைகுறையாய் கற்ற என் சொந்தங்களையா?

திருவிழா வரவேற்பு சுவரொட்டியில் 'கலந்து கொள்ள' என்ற அழைப்பு வாசகத்தில் 'களந்து' என்று அச்சிடப்பட்டிந்தது. அங்கிருந்தவர்களிடம் சொல்லி மாற்றச் சொன்னேன். பணி நிமித்தமாக அரக்கோணத்திலிருந்த திருத்தணிக்கு பயணிக்கும்போது, சாலையோர தூரம் காண்பிக்கும் கல்லில் ஒரு இடத்தில் 'திருத்தனி' என்று எழுதப்பட்டிருந்தது. முருகன் கோபம் தணிந்த தணிகை, இங்க தனியாக இருக்கிறது. திருப்பெரும்புதூர் பேருந்து நிலையத்தில் சாலையோர கடைகளின் முகவரியில்... 'திருப்பெரும்பூதூர்' ஸ்ரீபெரும்புதூர், ஸ்ரீபெரும்பூதூர், திருபெரும்புதூர் என்ற ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொன்றாக.  எனக்கு எது சரி என்று அறிவதில் ஆர்வம் வர, “திருப்பெரும்புதூர்“ தான் சரி என பேருந்தில் என் அருகில் அமர்ந்திருந்த நண்பர் சொன்னார். இதில் வேடிக்கை என்னவென்றால், சுற்றியிருந்த அனைத்து ஆங்கிலப் பலகையிலும் ஒரே மாதிரியாக பெயர் எழுதப்பட்டிருந்தது. யோசித்த ஒரு கணம் கண்ணீர் மல்கியது. பெற்ற தாய்க்கு ஒழுங்காகக் கஞ்சி ஊத்தாமல் இப்படி விட்டு விட்டார்களே! என்ற ஏக்கம் செங்கற்பட்டு வரும் வரை.... நீண்டிருந்தது.

குஜராத்தில் உள்ள வல்சாத் நகரத்திற்கு சென்றிருந்தேன். எங்கு பார்த்தாலும் குஜராத்தி மொழிகளிலேயே பெயர்ப்பலகைகள். இவ்வளவு ஏன் எண்கள் கூட குஜராத்தி எண்கள். நாம் வெறும் பேச்சு ஆள்கள்தான். நமது நகரங்களில் விளம்பரப் பலகை, பெயர்ப் பலகை பெரும்பாலும் ஆங்கில ஆதிக்கத்தில்தான் உள்ளது. தமிழில் இருக்கின்ற பலகைகள் தகராறோடு தொங்குகிறது. 

கண்ணீர் அஞ்சலி சுவரொட்டி தொடங்கி விளம்பர சுவரொட்டிகள் வரை தமிழ்த்தாய் குறைப் பிரசவத்தில் இருக்கிறாள். நமது நண்பர்கள் இது குறித்து வருந்துவதாகத் தெரியவில்லை. ஆங்கிலத்தை சரியாக எழுத வேண்டுமென்ற அக்கறை, எடுத்துக் கொள்கிற முயற்சி தமிழுக்குத் தராமல் போனது குறித்து நாம் வருந்தியே ஆக வேண்டும்.

தமிழகத்தில் தமிழை பிழையின்றி எழுதுபவர்களை விட ஆங்கிலத்தை அழகாக எழுதுபவர்களே அதிகமாக இருப்பார்கள் என்ற எனது கணக்கு சரியாகத்தான் இருக்கும் என்று நம்புகிறேன். எண்கணிதம் (பெயர் ஜோதிடம்) பார்த்து, ஒற்று, குறில், நெடில் போன்றவையை எடுக்கின்ற அபாக்கியமும் சில இடங்களில் நடந்தேறுகிறது.

செம்மொழி மாநாட்டுப் பாடலில் 'கேளிர்' என்ற பதம் 'கேளீர்' என ஒலித்தது. இன்றும் அவ்வாறே ஒலித்துக்கொண்டுள்ளது. தவறுதலாக நடந்த ஒன்றா? என் காதில் தான் ஏதாவது கோளாறா?  தமிழ் ஆய்ந்த வல்லுநர்களின் படைப்பே இப்படி இருந்தால் மற்றவர்களை நாம் என்ன சொல்வது.

இது ஒரு அரசு ஆணையால் செய்து முடிக்கக் கூடிய காரியமில்லை என்பதை நான் நன்கு அறிவேன். இதனை நமது அரசு செய்யும் என்ற நம்பிக்கையும் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. ஆனால், நிச்சயம் மாற்ற முடியும் ...  மராட்டிய அரசுக்கு குஜாரத்திய அரசுக்கு இருக்கின்ற நெஞ்சுரம் இருப்புச் சாலையில் தலை வைத்துவர்களுக்கு வரவில்லை என்பதுதான் வருத்தம்.  
நூல்களை புடவையாக்குகின்ற நெசவாளன் போல், நம் மொழியை வெளியில் தருபவர்கள் தட்டச்சு, மின் அச்சு செய்பவர்கள் மற்றும் ஓவியர்கள். இவர்களிடம் மொழித்திறன் மேம்பட்டிருக்கும்பட்சத்தில் 50 சதவிகிதம் நல்ல மாற்றத்தை பார்க்க முடியும். 'திருநிறைச் செல்வன்' என திருமணப் பத்திரிக்கையில் அச்சிடப்பட்டிருக்கும். இவ்விடத்தில் “ச்“ஒற்று வராது. இங்கு ஒற்று மிகும்போது மாறும்.  பெரும்பாலும் ச் ஒற்று இடம் பெற்றிருக்கும்.  ஏன்? பழையதையே வெட்டி ஒட்டுவதால் மீண்டும், மீண்டும் அரங்கேறும்.

சுவர் விளம்பரம் எழுதுவோரும், கணிப்பொறியில் தமிழில் மின்னச்சு செய்பவர்களும் தமிழை வளர்ப்பதில் முக்கியமானவர்கள். இவர்கள் தங்களின் பொறுப்புணர்ந்து தமிழ் கற்க வேண்டும். நம் தாய்மொழியின் சிறப்பை அறிந்து போற்றுதல் வேண்டும். இனிமையான நம் மொழி ஒரு சின்ன மாற்றத்தால் கூட பொருளையே மாற்றிவிடும் தன்மை உள்ளது.


மொழிமீது அக்கறையுள்ள தமிழ் அறிஞர்கள் இளைஞர்களுக்கு  தேடிச் சென்று கற்றுக் கொடுங்கள். தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவாவிட்டாலும் பராவாயில்லை.  நமது மண்ணில் நலமுடன் இருக்கட்டும்.  தனித்தமிழ் எல்லாம் மொழியை மையப்படுத்தி அரசியலுக்கு வந்தவர்கள் வைத்துக்கொள்ளட்டும்.  நாம் விரும்புவது...  பிழையில்லாத் தமிழ்.... நம் பிள்ளைகளுக்கு தமிழ்... பிள்ளைத் தழிழ்....

No comments: