Saturday, April 28, 2012

உவர்த்தன்மை ஒழிந்திட....


செடியோரம் கெணறு வெட்டி
செவலைக் காளை ரெண்டு கட்டி
அத்தை மகன் ஓட்டும் தண்ணி
அத்தனையும் சர்க்கரையே
- நாட்டுப்புற பாடல்
சர்க்கரையாய் சுவை தந்த தண்ணீர் இன்று சவர் (உவர்) தண்ணியாய் மாறிவிட்டது.  ரெண்டு கமலைத் தோட்டத்துல தண்ணி எடுத்து, பயறு அவிச்சு, கட்டு ரசம் வச்சா, அமிர்தம் தோத்துப் போகும்“ இப்படி தேவாமிர்தமாக இருந்த நம்மூர் கிணத்துத் தண்ணியெல்லாம் குடிக்க உகந்ததாக இல்லை. 

கரட்டுக்கு வெறகு எடுக்கப் போனவுக எல்லாருடைய தாகத்தையும் தணித்த தர்மலிங்கம் தாத்தா கிணறு வறண்டு போச்சு, அவங்க பேரன் பிளாஸ்டிக் கேனில் தண்ணீ எடுத்துட்டுப் போயி தட்டப்பயறுக்கு களையெடுக்கிறார்.  மல்லாசாரி குளத்துத் தண்ணிய ஆடு மாடுகளோடு சேர்ந்து குடிச்சவக எல்லாம் மாண்டு போகலை.  ஆனால், இன்று.... அசுத்தமான நீர் கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா.  உலகில் 130 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை.  குடிநீர் கிடைக்காததாலும், அசுத்த நீரை குடிப்பதாலும் ஆண்டு தோறும் 22 இலட்சம் பேர் இறக்கின்றனர். தண்ணீர் பற்றாக்குறை காரணமாக பரவும் நோயின் மூலம் விநாடிக்கு எட்டு குழந்தை வீதம் இறப்பதாக அய்க்கிய நாடுகள் சபை அறிவிக்கிறது. தற்போது உலகின் பாதி நீர் காலியாகி, மீதி நீர் அசுத்தமடைந்து வருகிறது.

மக்கள் தொகையின் அதீத வளர்ச்சியின் காரணமாகவும், மேநாட்டு நாகரீகத்தின் மோகத்திலும் இன்று தண்ணீர் அரியதொரு பொருளாகிவிட்டது.  தண்ணீரின் தேவை அதிகரித்து வருகின்ற அதே நேரத்தில் தண்ணீரின் வளம் குறைந்து வருகிறது.  பதினைந்து ஆண்டுகளில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருவதை புள்ளிவிபரங்களும், நாமும் மறுப்பதற்கில்லை.  தண்ணீர் பன்னாட்டு நிறுவனங்களால் விலை பொருளாகி, விளைவித்தலை நிறுத்திவிடுகிற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இயந்திரமயமாதல், தொழில்மயமாதல், நகர்மயமாதல் என மாற்றம் நடந்து கொண்டே இருக்க தண்ணீர் எடுப்பும் மாசுபாடும் அதிகரித்தே வருகிறது.  வருணன் கொடையான நீர், இன்று வலுத்தவர்கள் கையில் சிக்கிக்கொண்டு, இளைத்தவர்களை வலுவிழக்கச் செய்கிறது.  உலகத்தரத்தில் நமது குடிநீர் இல்லை என்ற ஆய்வுகளின் வெளிப்பாடு, மினரல் வாட்டர் பக்கம் நம்மை இழுக்கின்ற பரிதாபம் நிகழ்ந்து வருகிறது.  பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் பயணத்தில் தண்ணீர் பாட்டிலுடன் வந்தால் அதை ஆச்சரியமாக பார்த்ததுண்டு.  இன்று எல்லா பேருந்து நிலையங்களிலும்,  ஏழைகள் இரண்டு ரூபாய்க்கும் அடுத்த நிலையில் இருப்பவர்கள் இருபது ரூபாய்க்கும் வாங்கிக் குடிக்கின்றனர்.  தொடர்வண்டி நிறுத்தங்களில் உள்ள குழாய்களில் தண்ணீர் பிடித்து குடித்த காலம் மலையேறிவிட்டது. 

ஒரு லிட்டர் பிரேக் ஆயில், நீர்நிலையில் கலந்தால்.... ஒரு இலட்சத்து அய்ம்பத்தெட்டாயிரம் லிட்டர் தண்ணீரை அது மாசுபடுத்திவிடும் என்கின்றனர். ஒரு லிட்டருக்கே இந்த நிலை என்றால், நமது ஆறுகளிலும் குளங்களிலும் அன்றாடம் கலக்கின்ற மாசுபாட்டை சொல்லி மாளது. 

புவி மூன்று பங்கு நீராலும் ஒரு பங்கு நிலத்தாலும் சூழப்பட்டது என்பதை பள்ளியில் படித்திருப்போம்.  மூன்று பங்கு நீர் இருந்தாலும், மொத்த நீரில்  நன்னீர் என்னவோ வெறும் மூன்று சதவிகிதம்தான்.  இந்த மூன்று சதவிகிதத்திலும் இரண்டு சதவிகிதம் பனிக்கட்டியாக இருக்கிறது. கைக்கெட்டும் தூரத்தில் இருந்த நீராதாரங்கள் எல்லாம் சேதாரப்பட்டு, ஊதாரித்தனத்தால் ஊனமாகிவிட்டது. 

நீர் வளம் குறைவதும், மாசுபாடடைவதும் புவி சாவை நோக்கிச் செல்வதற்கு சமம் ஆகும். புறநானூறுப் புலவன் உணவெனப்படுவது நிலத்தொடு நீரே என்று சங்க காலத்திலேய சொன்னான். புலவன் மன்னனும் மக்களும் நீர் நிலைகளை பேணிக் காக்க வேண்டும் என்றான்.  அடுத்து வந்த அரசர்களும், குளம் வெட்டினார்கள், மரம் நட்டார்கள் என்றே வரலாற்றிலும் படித்தோம்.  அடுத்த தலைமுறை வரலாறை “மனதில் ஈரமில்லாமல் மரத்தை வெட்டினார்கள், குணமில்லாமல் குளத்தை மூடினார்கள், கண்மாயில் கான்கிரிட் வீடு கட்டினார்கள், ஏரியில் ஏரோபிளேன் இறங்க வழி செய்தார்கள்... நாங்க வாழும் வழியை அடைத்தார்கள்“ என்றே படிப்பார்கள்.  நீரைப் பேணுவதில் இவ்வளவு அக்கறையில்லமால் இருப்பது எப்படிச் சரியாகும்.

பண்பாட்டில் பண்பட்டும், விருந்தோம்பலில் சிறந்த பாரம்பரியம் கொண்ட நம் தாய்மண்ணில் பெருவாரியான நிலங்கள் மனைகளாக மாறிவருகின்றன.  ஒவ்வொரு மனையிலும் ஒரு ஆழ்துழை கிணறு என புவியை சல்லடையாக்குகின்ற சண்டாலத்தனம் தினமும் அரங்கேறுகிறது.  ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்ட அணைகள் எல்லாம் இன்று குடிநீருக்கு என்றாகிவிட்ட போதும், கோடையில் அணைகள் காய்கிற போது குடிநீருக்கு எங்கு போவது.  உள்ளுர் கிணறுகள் உவர்த்தன்மை அடைந்தது எதனால்? கூட்டு குடிநீர் திட்டங்கள் எல்லாருக்கும் எல்லா நாளும் கிட்டமால் போனது அதனால்?

ஆடைக்கும் கோடைக்கும் வற்றாத கிணறுகளில் இப்போது குனிந்து பார்த்தும் கிணற்றின் ஆழத்தைப் பார்க்க முடியவில்லை.  தேனி மாவட்டத்தில் ஒவ்வொரு கிணற்றுக்குப் பக்கத்திலும் மலை இருக்கும். இது மீண்டும் மீண்டும் கிணறுகளை ஆழப்படுத்தியதன் சாதனைச் சுவடு.  ஆழக்கிணறு வெட்டிய பின்பும் போதிய தண்ணீர் இல்லை, பின் கிணறுக்குள் ஆழ்துளைகிணறு அமைக்கப்பட்டுள்ளது.  பெருமழை பெய்து தண்ணீர் மட்டம் உயர்ந்த போதும் தண்ணீரின் தன்மையில் மாற்றம் காணவில்லை.

தமிழ்நாட்டில் தாமிரபரணி நதியைத் தவிர மற்ற பெரிய நதிகள் யாவும் அ(ச)ண்டை மாநிலத்தை சார்ந்தே இருக்க வேண்டியிருக்கிறது.  இந்த நதியிலும், நதியோரங்களிலும் ஆயிரத்திற்கு மேற்பட்ட மினரல் வாட்டர் கம்பெனிகள்.  இந்த மினரல் வாட்டர்கள் சுத்தமானது, சுகாதரமானது என்றும் மட்டும் நீங்கள் நம்பிவிட வேண்டாம்? இவைகளிலும் நோய்த்தொற்று இருப்பதாக ஆய்வுகள் சொல்கிறது. இது ஒரு புறம், பாலித்தின் பைகளும், பிளாஸ்டிக் பாட்டில்களும் நிலத்தை பாழ்படுத்தவும் செய்கின்றன. 

ஆத்துக்குள்ள ஊத்து தோண்டி அவளும் நானும்இப்படியெல்லாம் பாட முடியாது. ஏன்? நதிகளில் மணல் இல்லை... அத்தனையும் மனையில... மக்கள் தொகை பெருக்கத்தால், தொழில் கூடங்களில், கட்டிடங்களில். மணல் அள்ளாம இருக்க மனமில்ல.... மணல் கொள்ளையர்களுக்கு....  மணல் கொள்ளையர்களுடன் சண்டையிட்டு மாண்ட செய்தியெல்லாம் செய்தித் தாளில் படிக்க நேரிடுகிறது. அரசாங்கம் தனது கையாளகத்தனத்தால் இவைகளை கட்டுப்படுத்த முடியவில்லை.  தொட்டனைத்தூறும் மணற்கேணி என்றான் வள்ளுவன், ஊற்றைத் தருகிற மணல் கட்டங்களில் தண்ணீர் தரா என்பதை நாம் தெரிந்திருந்தாலும், பெரிய பெரிய கட்டிடங்கள் தான் ஆசையின் அடிநாதங்கள். வளர்ச்சியின் வெளிப்பாடுகள்!

பன்னாட்டு பானியில் பிளாஸ்டிக் கேனில் தண்ணீர் வாங்க வேண்டியது அவசியமா?  நாம் வாழும் நமதூரில் நமக்காக நல்ல நீர் நாமே கிடைக்கச் செய்ய வழிகளே இல்லையா?

இருக்கு.... முன்னோர்கள் உருவாக்கிய ஊருணி, குளம், குட்டை, கண்மாய், ஏரி. இயற்கையாய்... ஆறு..... மழை...........

இப்ப நம்ம செய்ய வேண்டியது.... தண்ணீர் குறித்த விழிப்புணர்வு எல்லோருக்கும் கிடைத்திடச் செய்ய வேண்டும்.  விழிப்புணர்வோடு நின்றிடாமல், ஏற்று செயல்படுத்தும் நிலையை உருவாக்கிட வேண்டும்.  மக்கள் தொகைப் பெருக்கத்தைச் சொல்லி இயற்கை வளங்களை சூரையாடுவதை தடுக்க வேண்டும்.  மண் மாதவை மரங்களால் மூட வேண்டும்.   மழை நீர் சேகரிப்பு கட்டாயமாக்கப்பட வேண்டும்.  சுத்தமான சுகாதரமான நீர் மழை நீர் எனவே, மழை நீரை பயன்படுத்துமாறு கட்டமைப்புகள் அமைக்கப்பட வேண்டும். 

தமிழகத்தில் உள்ள நீர் நிலைகள் அத்தனையும் பராமரித்து பாதுகாக்க வேண்டும்.  குப்பை கூளங்களின் தொட்டிலாய் குளங்கள் இருக்கின்ற நிலை மாறி, குளிர்சியைத் தருகின்ற குபேரனாய் குளங்கள் மாற மாற்றம் வேண்டும்.  நீர் நிலைகளில் ஆக்கிரமிப்பு நிறுத்தப்பட வேண்டும். நீடிக்கும் ஆக்கிரமிப்பு அடியோடு எடுக்கப்பட வேண்டும்.  குடிகளின் குடிநீரை குடிகளே பெறும் வண்ணம் திட்டங்கள் வேண்டும்.

விவசாயிகள், தண்ணீரை பெருமளவு பயன்படுத்துகிற தொழிற்சாலைகள், நாம் அனைவரும் சிக்கனமாக தண்ணீரை பயன்படுத்த வேண்டும்.  நிலத்தடி நீரைப் பயன்படுத்தி அதிகளவு நீர்த்தேவையுள்ள பயிர்களை பயிரிடுவதை விவசாயிகள் தவிர்க்க வேண்டும்.  நீர் மறைய நீர் கட்டு, காய்ச்சலும் பாய்ச்சலும் போன்ற முன்னோர்களின் மொழிகளை கடைப்பிடிக்க வேண்டும்.  அரிதானபின்பு அறிந்து நடப்பதை விட முன்கூட்டியே நடந்து கொள்வதுதான் புத்திசாலித்தனம். அது தான் தமிழனின் தனி குணம் என்பதை நாம் நிருபிக்க வேண்டும்.

தொழிற்சாலை கழிவுகள் துண்டிக்க வேண்டும். சாலையில் காற்று மாசுபடுதலையும் நிறுத்த வேண்டும்.  காற்றும் நிலமும் மாசுபாடமால் இருந்தால் மட்டுமே நல்ல மழை நீரை நாம் பெற்றிட முடியும்.   மழைநீரை முறையாக சேமித்துப் பயன்படுத்த ஆரம்பித்தாலே, தூய்மையான குடிநீர் நமக்குக் கிடைத்துவிடும்.  பிறகு பாட்டில் தண்ணீர் எதற்கு? பாட்டில் கழிவு!!! 

No comments: