Wednesday, March 7, 2012

மக்கள் போற்றுவார்கள்


ஆதி கால மனிதன் காடுகளில் விலங்கோடு விலங்காக வேட்டையாடி வாழ்ந்து வந்தான்.  ஒரு இடத்தில் நிலைபெறாமல் சுற்றித்திரிந்தான். கற்களை கருவிகளாக்கினான் கொஞ்சம் வளர்ச்சி பெற ஆரம்பித்தான். விலங்குகளை பழக்கி தனது பணிக்கு பயன்படுத்தினான். நெருப்பை கண்டுபிடித்து தனது இருப்பை உறுதிசெய்தான். வேட்டையாடிக்கொண்டிருந்த மனிதன் வேளாண்மை செய்யப் பழகினான். மனித வரலாறு மாற்றம் கண்டது. சக்கரமும் வேளாண்மையும் மனித வரலாற்றில் மிக முக்கிய மைல்கல் ஆகும்.  வேளாண்மை செய்யும் போது அவனுக்கென உடமைகள் உருவாகின. வேளாண்மையில் ஈடுபட ஒரு கூட்டு சக்தி தேவைப்பட்டது. அங்கு ஒரு இனக்குழு உருவானது. தான் முன்னரே உருவாக்கிவைத்திருந்த விலங்கினங்களான ஆடு மாடு போன்றவைகளை விவசாயத்திற்கு பயன்படுத்துகிறான்.

விவசாய நிலங்கள், கால்நடைகள், தமது இனக் குழுக்களை மாற்று இனக்குழுவிடமிருந்து காப்பாற்றிக்கொள்ள வேண்டிய காட்டாயம் மனிதனுக்கு ஏற்படுகிறது. தம்மை தற்காத்துக்கொள்ள உடல்வலிமையும் புத்திக்கூர்மையும் உள்ளவர்கள் தலைவர்கள் ஆனார்கள். இது மனித வரலாற்றில் ஒரு மறுமலர்ச்சியாகும். இந்த மறுமலர்ச்சிதான் காலப்போக்கில் பரிணாம வளர்ச்சி பெற்று அரசியலுக்கு வித்திட்டது.  ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மனித இனத்தின் அரசியல் உள்ளுர் அளவிலேயே தொடங்கியிருந்தது.

தமிழகத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மன்னராட்சி காலத்திலும் சிறந்த கிராம ஆட்சி நடைபெற்றதற்கான கல்வெட்டுச் சான்றுகள் பாண்டிய நாட்டில் மானுரிலும், சோழ நாட்டில் உத்திரமேரூரிலும் கிடைக்கப் பெற்றுள்ளது.  சம காலத்தில் கிடைக்கப்பெற்ற வரலாற்று ஆவணங்கலான கல்வெட்டில் ஊர் கூடி ஆட்சி செய்த செய்தி நம்மை வியப்புறச் செய்கின்றன.

உத்திரமேரூர் கல்வெட்டு இன்று நடைபெறும் உள்ளாட்சிக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே முன்னுதாரணமாக விளங்கியிருக்கிறது.  முதலாம் பரந்தாகச் சோழன் காலத்தில் இருந்த கிராம ஆட்சி முறையில் ஒவ்வொரு கிராமமும் பல குடும்புகளாக பிரிக்கப்பட்டிருந்தன.  இன்று வார்டுகளாக பிரிக்கப்பட்டிருப்பது போல் அன்றே இருந்ததை நாம் பாராட்ட வேண்டும்.  இன்று கிராம ஊராட்சியில் போட்டியிடுவதற்கான தகுதிகள், எந்த கிராமத்தில் போட்டியிடுவரோ அக்கிராமத்தின் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்றிருக்க வேண்டும், 21 வயதாயிருக்க வேண்டும் என்கிறது. அன்று சொந்த இடத்தில் வீடுகட்டி வசிப்பவர், காணி நிலத்திற்கு வரி செலுத்துபவர், 35 வயதுக்கு மேலும் 70 வயதுக்குள்ளும் இருப்பவர், மூன்றாண்டிற்குள் எந்தக் காரியத்திலும் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படாதவர் போன்ற தகுதிகளை நாம் கல்வெட்டின் வாயிலாக அறிய முடிகிறது.

தகுதியை குறிப்பிடுவது போன்று தகுதியின்மையையும் குறிப்பிடுகிறது. அவை நிறைவேற்றுக் கழகத்தின் உறுப்பினராக இருந்து கடைசியில் கணக்கு காட்டாமல் இருந்தவர்கள், கூடத்தகாதவர்களுடன் கூடுபவர்கள், ஐம்பெரும் பாதகங்களில் முதல் நான்கு புரிந்தவர்கள், எவ்வகைப்பட்ட கையூட்டும் வாங்கிப் பின்னர் அதற்காக தண்டம் செலுத்தியவர்கள், மாபாதகம் செய்தவர்கள், ஊருக்குத் துரோகம் செய்தவர்கள், கூடத்தகாதவரோடு கூடுதல் போன்ற குற்றம் செய்து பிராயச்சித்தம் செய்தவர்கள், குற்றம் புரிந்து கழுதை மேல் ஏற்றப்பட்டவர்கள்,கள்ளக் கையெழுத்து போட்டவர்கள் இவர்கள் எவரும் கிராம சபை உறுப்பினராக தகுதியற்றவர்கள் என்கிறது உத்திரமேரூர் கல்வெட்டு. இது மட்டுமில்லை இதற்கு முன்னர் பொறுப்பு வகித்தவர் போட்டியிடமுடியாது. இன்று இவ்வளவு தகுதியின்மை இல்லை.

தேர்தல் குடவோலை முறையில் நடைபெற்றது.  கிராமத்தில் வசித்து வரும் அனைத்து ஆண் மக்களும் உறுப்பினர்கள்.  ஒவ்வொரு குடும்புக்கும் ஒரு உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படுவர்.  கிராம சபையின் முன் ஒரு குடத்தை எடுத்து அனைவரது முன்னிலையிலும் காண்பிப்பர். உள்ளே எந்தப் பொருளும் இல்லை என்பதை அனைவருக்கும் உறுதிப்படுத்துவர்.  பின்னர் தகுதியுள்ள உறுப்பினர்களின் பெயரை குடும்புவாரியாக ஓலையில் எழுதி குடத்தில் போட்டு, ஒரு குழந்தையை எடுக்கச் சொல்லி, ஒருவர் பார்த்து, அனைவரது முன்னிலையிலும் தேர்தல் அதிகாரி வாசிப்பார். இதிலிருந்து எந்த இடத்திலும் தவறு நிகழக்கூடாது என்பதில் உறுதியாக இருந்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது.

தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் கிராமத்தை நிர்வகிகக்கூடிய வாரியங்களுக்கு பொறுப்பேற்பர். அன்று சமசத்ர வாரியம், ஏரிவாரியம், தோட்டவாரியம், பஞ்சவாரியம், பொன்வாரியம், கணக்கு வாரியம், கலிங்கு வாரியம், தடிவழிவாரியம் இருந்தது.  இதில் சமசத்ர வாரியம் குடிநீர், தெரு விளக்கு, சாலை போன்ற பொதுப்பணிகளை மேற்கொண்டது. மூத்த உறுப்பினர்கள் சமசத்ர வாரியத்தில் பொறுப்பில் இருப்பர்.  ஒவ்வொரு வாரியமும் தனது பெயருக்கேற்ற பொருப்பினை செய்தன.

முரசு அடித்தோ, காளம் ஊதியமோ சபை கூடும் இடத்தையும் நேரத்தையும் அறிவித்தனர்.  ஊரில் உள்ள தனி மண்டபத்திலோ, கோவில் மண்டபத்திலோ சபை கூடும். சபை உறுப்பினர்கள் ஊதிய இழப்பின்றி ஓய்வு நேரத்தில் சபையை கூட்டினர்.  இரவு நேரங்களில் கூட்டம் கூட்டுவதில்லை.  இந்நேரங்களில் கூட்டம் கூட்டினால் விளக்கெரிக்க எண்ணெய் செலவாகும் என்பதை கருத்தில் கொண்டு அந்திமாலை பொழுதில் பெரும்பாலும் கூட்டத்தை நடத்தியுள்ளனர்.  சபையில் ஊதியம் பெற்ற மத்தியஸ்தன், கரணத்தான், தண்டுவான், அடிகீழ்நிற்பான் போன்ற பணியாளர்களும் இருந்தனர். கரணத்தான் என்பவன் கணக்காளன் ஆவான்.  கணக்கை சபையில் சமர்ப்பிக்கும் போது சிவக்கக்காய்ச்சிய மழுவை கையில் பிடித்து, தன் வேலைத் துாய்மையை நிரூபிக்க வேண்டும்.  இத்தகு கிராம நிர்வாக முறை நம் தொன் தமிழகத்தில் இருந்தனை நாம் பெருமை கொள்ளும் வேளையில், சில குறைபாடுகளும் இருந்தன்.

சபை உறுப்பினராவதற்கான தகுதி ஆண்களிடமும், வசதியுள்ளவர்களிடமும் மட்டுமே இருந்தது.  இந்த குறைபாடுகளை இன்றைய உள்ளாட்சித் தேர்தல் களைந்துள்ளது. ஆம், இந்திய அரசியலமைப்பின் 73வது அரசியல் திருத்தச்சட்டம் இடஒதுக்கீடு முறையை அமல்படுத்தி பெண்களும் ஒடுக்கப்பட்டோரும் பங்குபெறும் வண்ணம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

இடஒதுக்கீடு கிடைக்கப்பெற்ற இந்த பதினைந்து ஆண்டுகளில் நமது உள்ளாட்சி அமைப்புகளில் பல ஆயிரக்கணக்கான பெண்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் பொறுப்பேற்றுள்ளனர்.  அதே போல் தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் பொறுப்பேற்று அலங்கரித்து வருகின்றனர்.  ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சிறப்பாக இருந்து வந்த கிராம ஆட்சியில், செழுமைபடுத்த அரசாங்கம் மேற்கொண்ட முயற்சியில் 100 சதவிகிதம் சென்றடைந்துவிட்டோமா? என்றால்... பல பெண்கள் தேர்வு செய்யப்பட்ட பல ஊராட்சிகளில் தலைவரின் கணவரே, தலைவராக செயல்படும் அவலம் ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னரும் தீர்ந்தபாடில்லை.

கையெழுத்துப் போடும் உரிமை கூட பல பெண் ஊராட்சி மன்றத்தலைவருக்கு கிடைக்கவில்லை என்பது வேதனை தான்.  பெரும்பாலான பெண் தலைவர்கள் கிராம சபைக் கூட்டத்தில் மட்டும் அமர்ந்து செல்கிற பணியைச் செய்தார்கள் என்று கேள்வியுறும் போது நெஞ்சு பொறுக்குதில்லையேஎன்ற வரிகள்தான் வந்து வாட்டுகிறது.  அரசியல் கட்சிகளின் சார்பில் தேர்வு செய்யப்பட்ட மேயர்களின் கணவன்மார்கள் அலுவலகத்திற்கு வெளியே ஆட்சி செய்த அவலத்தை மறுப்பதற்கில்லை.  ஒன்றிய அலுவலகங்களில் பெண் தலைவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் தலைவர்களின் தந்தையோ, கணவனோ, அமர்ந்து அரஜாகம் செய்ததை அரசு அலுவலர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டுதான் இருந்தார்கள்.  பாவம் அவர்கள் என்ன செய்வார்கள், அவர்களிடமும் ஒரு சான் வயிறுதானே இருக்கிறது. இந்த நெறிஞ்சிக் காட்டில் குறிஞ்சிப் பூவாய் பூத்து குலுங்கியவர்கள் இருக்கத்தான் செய்தார்கள்.  இவர்கள் உள்ளாட்சியில் நல்லாட்சி தந்தார்கள். பத்திரிகை தொடங்கி பாமரர்கள் வரை அனைவரது பாராட்டையும் பெற்றார்கள்.

பெண் தலைமையை ஒடுக்கி வைத்தவர்கள் எல்லா சமூத்திலும் எல்லா வர்க்கத்திலும் இருந்தார்கள் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.  பெண் தலைமையோடு ஒப்பிடுகையில் தாழ்த்தப்பட்ட பழங்குடியின இடஒதுக்கீடு முன்னேற்றம் கண்டதாகவே பார்க்க முடிகிறது.  எதிர்பார்த்த மாற்றத்தை இந்த பதினைந்து ஆண்டு தாராவிட்டாலும் மோசமில்லை.  ஊராட்சிகளில் நல்ல மாற்றத்தை தந்தனர்.  பரம்பரையாக இருந்துவந்து தலைவர் பதவி மாற்றமடைந்த போதும் கிராமப் புறத்தில் நல்ல மாற்றமே இருந்தது.  இதிலும் ஆதிக்க மனோபவமுள்ள பகுதிகளில் இடஒதுக்கீடு பெரும் வெற்றியைத் தரவில்லை.  ஊராட்சி மன்றத் துணைத் தலைவரின் ஆளுமை அதிகம் இருந்ததை நாம் எல்லோரும் காண முடிந்தது.  இன்றும் சில பகுதிகளில் ஆதிக்க சமூகத்தின் இழுவைக்கு வரக்கூடிய தாழ்த்தப்பட்ட சமூகத்தில் உள்ள  ஏழையை ஊரின் வேட்பாளராக நிறுத்தக் கூடிய, ஆதிக்க சமூகத்தின் புத்திசாலித்தனத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

பொறுப்பேற்ற பலர் ஊரகங்களில் வியத்தகு மாற்றங்களை செய்துள்ளனர்.  விருதுகள் பெற்றுள்ளனர். சுய சார்புள்ள பஞ்சாயத்துகளை உருவாக்கி அரசையே ஆச்சரியப்படுத்துயுள்ளனர்.  ஆனால், காசோலையில் கையொப்பம் போட முடியாத நிலையை உருவாக்கிக் கொண்ட பல ஊராட்சி மன்றத் தலைவர்களும் கடந்த காலங்களில் இருக்கத்தான் செய்தனர்.  வருவாய் இல்லாத ஊராட்சி மன்றத் தலைவர் பதவி 341 இடங்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளது.  ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே போட்டி இருந்த பதவிக்கு இன்று தமிழகத்தில் 341 இடங்களுக்கு போட்டியில்லை.  நீங்கள் வியப்படைய வேண்டாம்.   இரண்டு பேரூராட்சி தலைவர் பதவிக்கும் போட்டியின்றி தேர்வு நடைபெற்றுள்ளது.  ஒட்டு மொத்தமாக 19000 பதவிகள் போட்டியின்றி தேர்வு பெற்றுள்ளனர்.  காந்தி போட்டியின்றி தேர்வு பெறுவதைத்தான் விரும்பினார்.  காந்தி படம் பொறித்த பணத்தை மாற்றாளுக்கு கொடுத்து போட்டியிலிருந்து விலகிக்கொள்ள வைத்திருப்பார்களா? காந்தி படம் பொறித்த பணம், காந்தியின் கனவுப் பதவிக்கு ஏலம் போகிறது.

ஊராட்சித் தலைவராக வருபவர் இன்னொரு ஒப்பந்தக்காராக மாறுகின்ற சூழல்தான் கடந்த காலம் நமக்கு தந்துள்ளது.  ஊராட்சியின் முதல் குடிமகனாக இருக்கிற தலைவர்கள் குடிகளின் நலனில் அக்கறையின்றி, லட்சியங்களை மறந்து லட்சங்கள் திரட்டுவதிலியே கருத்தாய் இருந்துவிட்டு காலத்தை கடத்திவிட்டனர்.

இந்தியாவில் பெரும்பகுதியாக இருக்கிற கிராமம் வளம்பெற வலுப்பெற இந்த உள்ளாட்சி அமைப்புகள் சிறப்பாக செயல்படுவது அவசியம்.  மேற்கத்திய நாடுகள் எல்லாம் போற்றும் நமது குட்டி குடியரசுகளான ஊராட்சிகள் செவ்வனே செயல்படும்போதுதான் ஏழ்மை அழியும்.  நமது மண்ணில் வளமான மனித இனமே வாழ வேண்டும். அதற்கு வலுவான உள்ளாட்சி அமைப்புகள் அந்ததந்த ஊர்களில் வேண்டும். 

புதிதாய் தேர்வு செய்யப்பட்டுள்ள உள்ளாட்சித் தலைவர்கள் ஊர் நலனில் அக்கறை கொள்ள வேண்டும். நல்லவர்கள் தேர்வாகியிருக்கலாம். நாணயம் கொடுத்து தேர்வாகியிருக்கலாம். முடிந்த்தை விட்டுவிடுவோம்.  காலம் காலமாக நம்மோடு இருக்கிற இந்த அமைப்பை சிதைக்காமல் சிற்பமாக்க வேண்டியது உள்ளாட்சி பொறுப்பாளர்களின் கடமையாகும்.  போட்டதை எடுப்பதற்கு வேறு தொழில் இருக்கிறது.  விட்டதை பிடிக்க வேறு இடம் இருக்கிறது. இது விதைக்க வேண்டிய இடம்.  கடந்த கால அனுபவங்களிலிருந்து கிடைத்தவற்றை தனதாக்கிக் கொண்டு ஊரகப் பகுதியில் உயரிய மாற்த்தை ஏற்படுத்த உங்களைத்தான் நம்பியிருக்கிறது உங்கள் மண்... மழை பொய்க்கவில்லை... காற்று நிறுத்தவில்லை... நெருப்பு நெருக்கமாக இருக்கிறது... மண் வாசம் வீசுகிறது....  அடுத்த தலைமுறை கண்ணியமான வாழ்க்கை வாழ்ந்திட உங்கள் கைவசம் உள்ள பொறுப்பை, பொறுப்பாய் செய்திடுங்கள்...... உங்களை மண் போற்றும் மழை போற்றும் மக்கள் போற்றுவார்கள்.
 பசுமைத்தயாகம் சுற்றுச்சூழல் இதழில் வெளிவந்தது.

No comments: