Tuesday, May 24, 2011

திருந்தட்டும்...



2ஜி அலைக்கற்றை ஸபெக்டரம்  ஊழல்ன்னு சொல்லறாங்களே அது என்னடா கண்ணா?ன்னு எங்க அப்பா விசாரித்தார்.  நானும், நம்ம ஊர்ல திருவிழா முடிஞ்சதும், கோவில் பந்தல்ல நேர்த்திக் கடன்,  திருவிழா செலவு போக மிச்சமான பணத்தை ஏலம் விடுவாங்கள்ல, அப்ப 10 ரூவா பொருளை 15 ரூவாய்க்கு எடுப்பாங்க, சில சமயம் 10 ரூவா பொருளை 9 ரூபாய்க்கும் எடுப்பாங்க. இந்தப் பணத்தை இந்த தேதிக்குள்ள கட்டனும் சொல்லுவாங்க. இது மாதிரித்தான் அரசாங்கம் செல்போன் பேசறது சம்மந்தமா  தனியாருக்கு ஒதுக்குனதுல நியாயமா நடந்துக்குல, அதனால அரசாங்கத்துக்கு இவ்வளவு இழப்புன்னு தலைமை கணக்காயம் சொல்லுதுண்ணேன். 

ஏம்ப்பா நம்ம ஊர்ல இது மாதிரி எதுவுமுன்னு..... கேள்வியை முடிப்பதற்கு முன்னே.. நீ பொறக்குறதுக்கு முன்னாடி நம்ம ஊரு பெரியதனக்காரர் வீட்டுல (அப்ப குச்சு வீடு) நல்ல மத்தியானத்துல  குச்சு மேல இருக்குற கூரை மட்டும் எரிஞ்சுச்சு, அப்ப ஊறே போயி தண்ணிய ஊத்தினோம்.  என்னான்னு விசாரிச்சா மொதநாளு பஞ்சாயத்துல வாங்குன தெண்டம் ரெண்டா ரூபாயை கோவிலுக்கு விளக்குப் போட எண்ணை வாங்கமா வீட்டுலேயே வச்சிருந்தாராம். எரிந்து காட்டிக்கொடுத்தது. பிறகு முதல் வேலையா எண்ணை வாங்கிட்டுதான் கூரை மேயிற வேலையையே பார்த்தாத எங்க அப்பா சொன்ன போது உடம்பு சிலிர்த்தது. கூரை எரிந்தது எப்படி நடந்ததோ ஆனால், அந்தக் குடும்பம் இன்றுவரை நேர்பட வாழ அந்தச் சம்பவம்தான் வழிவகுத்திருக்கும் எனக் கருதுகிறேன்.

பொது வாழ்வு மற்றும் அரசுப் பணி இரண்டிலும் லஞ்சம் ஊழல் என்ற இரண்டும்  இரண்டறக் கலந்துவிட்டன. வருவாய்த்துறை அலுவலகங்களில் நான் இன்ன சாதிக்காரன், என் மகனும் இன்ன சாதிக்காரன், நான் இந்த ஊரில் வசிக்கிறேன், பிறப்பு இறப்பு என சின்னச் சின்ன வேலைகளுக்குக் கூட லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் வழக்கமாகிவிட்டது. இலவசத் திட்டங்கள் கையூட்டை ஊக்குவிக்கின்றன. இலவசங்கள் உரிய நபர்கள் பெறும் போது கூட கையூட்டு கொடுக்கின்ற அவல நிலை. இதில் பாதிக்கப்படுவது பெரும்பாலும் சாமனியர்கள். அப்புறம் மெகா ஊழல்களில் சாமனியர்கள் பாதிக்கப்படமாட்டார்களா? நிச்சயம் பாதிக்கப்படுவார்கள்.  இதனை பிற்பகுதியில் பார்ப்போம். இப்படி ஊதியம் வாங்கும் அரசுப் பணியாளர்கள் கையூட்டு பெறுவதை கண்டும் காணாமல் விட்டுவிடுவதே கையூட்டுப் பெறுவோருக்கு சுதந்திரமாகிறது. இவர்கள் இப்படி இருக்க பொது வாழ்விற்கு வந்தவர்கள் நிலையோ தொட்டுத் தொடரும் ஊழல் பாரம்பரிமாக...

1948ல் பிரிட்டனில் இருந்து ஜிப் வாங்கியதில் குற்றம்சாட்டப்பட்டவர் அன்றைய இராணுவ அமைச்சர் வி.கே. கிருஷணமேணன். பின்னர் 1957ல் நேரு அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்த டி.டி. கிருஷணமாச்சாரி (இவரை சமீபத்தில் நமது முன்னால் முதல்வர் (கருநாநிதி )கூட முந்ரா ஊழல் என கோடிட்டு காட்டினார்) வர்த்தக நிறுவனங்களின் பங்குகளை ஆயுள் காப்பீட்டு கழகத்திடம் விற்பனை நடந்த ஊழலுக்கு துணை போனார் என்ற குற்றச்சாட்டு.  இவர்களைப் போலவே ஊழலுக்குத் துணை நின்ற பஞ்சாப் மாநில முதல்வர் பிரதாப் சிங், மராட்டிய முதல்வர் ஏ.ஆர். அந்துலே போன்றோர்கள் முதல்வர் பதவியிலிருந்து விலக்கப்பட்டவர்கள்.

மீணடும் நடுவண் அரசிற்கு வருவோம்.  நாட்டின் பாதுகாப்பிற்கு வாங்கப்பட்ட பீரங்கிகளில் ஊழல் நடந்ததாக மறைந்த பிரதமர் ராஜிவ் காந்தி மீது ஊழல் புகார் வெளிவந்தது. இதனால் 1989ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் தோல்வியை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அப்புறம் பி. வி. நரசிம்ராவ் காலத்திலும் ஊழல் தொடர்ந்தது. ஊறுகாய்க் கம்பெனிக்காரிடம் காசு வாங்கியதாக ராவும் சாமியும் சிக்கினர். இது மட்டுமில்லாமல் யூரியா ஊழல் வேறு. இதே சமயத்தில் இன்னொரு பெரும் ஊழல் ஹர்சத்மேத்தாவின் பத்திர ஊழல்.

கார்க்கில் இராணுவ வீரர்களுக்கு வீடு ஒதுக்குவதில் மராட்டிய மாநில முதல்வர். பதவி விலகியுள்ளார்.  இவர்கள் பொது வாழ்விற்கு வந்தார்களா? வேறு எதற்கும் வந்தார்களா?

இராணுவத்தில் தொடங்கி பத்திரம், யூரியா, வீடு, சிமெண்ட், தீவனம், நிலம் ஒதுக்குவது, மேம்பாலம், சுடுகாட்டில், சவப்பெட்டி செய்வதில், உணவுக் எண்ணெய் திட்டத்தில், அலைக்கற்றை, மணல், ஐபிஎல், காமென் வெல்த் போட்டி என எல்லாத் துறைகளிலும் காமனாக இருப்பது ஊழல் ஒன்றுதான். லட்சத்தில் தொடங்கிய ஊழல் லட்சம் கோடிகள் வரை வந்து நிற்கிறது. ஊழல்கறைபடிந்தவர்களின் கைநழுவிப் போனது பதவி மட்டும் தான். இது பொது வாழ்வில் இருந்தவர்களுக்கும் அரசுப் பணியில் இருந்தவர்களுக்கும் பொருந்தும்.

இவர்கள் எல்லாம் இப்படி இருக்கையில்.... கடமலைக்குண்டு கிராமத்தின் கிராமக் கமிட்டி பொருளாளராக இருந்தவர் வண்டப்புலி நாடார். இதே கிராமத்தில் பலசரக்கு கடையும் வைத்திருந்தார்.  பொருளாளருக்கு உரிய அத்தணை பண்புகளையும் தன்னகத்தே கொண்டிருந்த உன்னதமான பொருளாளர்.  இவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த பணம் அப்படியே இருக்கும்.  ரூபாய் நோட்டுகளின் எண்ணை சரிபார்த்துக் கொள்ளலாம். பல்வேறு சாதியினரும் மதத்தவரும் வசிக்கும் கடமலைக்குண்டில் நாடார் சமூகத்தின் எண்ணிக்கை குறைவு. இருப்பினும் தொடர்ச்சியாக பொருளாளராக இருந்தவர்.  திருவிழாவிற்கு கிராமத்தின் சார்பாக பலசரக்கு வாங்குவதாக இருந்தால் கூட தனது கடையில் வாங்குவதை தவிர்த்தவர். தேனியில் இந்தக் கடையில் வாங்குங்கள். இங்கு விலை குறைவாக இருக்கும் என்று ஒதுங்கிக் கொள்வார். கிராமக் கணக்கிற்கு தனிப் பையும், தனது சொந்த பணத்திற்கு தனிப் பையும் வைத்து கணக்காய் இருந்தவர்.  வருடந்தோறும் திருவிழா முடிந்ததும் கணக்கு ஒப்படைப்பது வழக்கம். 

பதினைந்து ஆண்டுகளுக்கு முன் கணக்கு ஒப்படைக்கும் நாளில் மது மகன் ஒருவன் போதையில் வண்டப்புலி நாடார் புது வீடு கட்டுறாரே! எப்படி 'எல்லாம் கிராமத்துப் பணம் தான்' ன்னு கேட்டுட்டான். அந்தக் கணமே தனது பதவியைத் துறந்தார். (வருடக் கணக்கில் விவாதிக்க வில்லை, வாய்தா வாங்கவில்லை) கணக்கினை பைசா சுத்தமாக ஒப்படைத்தார். அடுத்த நாள் கிராமத்து பெரியவர்கள் எல்லாம் வீட்டிற்கு சென்று நீங்கதான் பொருளாளராக இருக்கனும் 'அவன் என்னமோ தண்ணியைப் போட்டு ஒழறிட்டான்' எவ்வளவோ சமதானம் சொன்னாங்க. குற்றம் சுமத்தியவனும் நான் ஏதோ நேத்து தெரியமா போதையில அப்படி கேட்டுட்டேன், என்னை மன்னிச்சிருங்க நீங்கதான் பொருளாளராக வரனுமுன்னு கால்ல விழுந்தான். இருந்தும் சம்மதிக்கவில்லை. நீ சந்தேகப் படும்படி ஏதோ ஒரு செயல் உணக்கு தெரிந்திருக்கிறது. அதனால்தான் நீ அப்படி கேட்டாய். சந்தேகப்படும்படியான ஆள் பொறுப்பில் இருப்பது அவ்வளவு நல்லதில்லை என அனைவரையும் இன்முகத்தோடு அனுப்பிவிட்டார்.  இரண்டொரு நாள் அதே வேதனையில் இருந்தவர் இறந்துவிட்டார்.  இறப்பிற்கு முன் வண்டப்புலி நாடார் உதிர்த்த வார்த்தைகள்... நம் குடும்பத்தில் இருந்து யாரும் கிராமப் பொறுப்பிற்கு வரக்கூடாது. ஆனால் கிராமத்திற்கு செலுத்த வேண்டிய முதல் வரி நம்முடையதாகத்தான் இருக்க வேண்டும். (வண்டப்புலி நாடார் என்பது அவரது பெயர் அல்ல.  வண்டப்புலியிருருந் இடம் பெயர்ந்தவர்.) இன்றைக்கு பொது வாழ்வில் ஈடுபடுவர்களுக்கு எத்தனை பெரியவர் வண்டப்புலி நாடார்.

இல்லாதவர்கள், ஏதுமற்றவர்கள் நேர்மையாகத்தான் இருக்கின்றனர். நான் என்றோ படித்த ஒரு ஏழையோ, மாடு மேய்ப்பவனோ எளிதாக பொய் சொல்ல மாட்டான் என்பது தான் இப்போது நினைவுக்கு வருகிறது. நீதி நூல்களை படித்தவர்கள், நீதிகளை மேடைகளில் முழங்குபவர்கள்தான் நமக்கு முன்னே போலிகளாய் நிற்கிறார்கள்.

பொதுப் பணியிலும் பதவியிலும் இருப்பவர்களின் ஊழல் துளியாய் தொடங்கி சமுத்திரமாக விரிந்திருக்கிறது. இதற்கு யார் காரணம்? இதனால் யாருக்கு பாதிப்பு? இரண்டு கேள்விகளுக்கும் முதல் பதில் நாம். யார் செய்யலை என சட்டைசெய்யாமல் இருந்து விடுகிறோம்.  நீங்கள் உத்தமர் தான என்ற கேள்வியை விட அவர் உத்தமராக இருக்க நாம் என்ன செய்யப் போகிறோம். ஊழலை தோலுரித்துக் காட்டுகின்ற பணியை ஊடகங்கள் செய்கின்றன.(இதில் முன் பின் வேறு உண்டு) நாம் தெரிந்து கொள்கிறோம். தெரிந்தும் இராமேஸவரம் வங்கக் கடல்போல் அமைதியாக இருக்கிறோம்.

தேசத்தின் வளத்தை ஒரு கூட்டம் சுரண்டிக் கொண்டிருக்கு போது சாதாரண மக்களுக்கு அடிப்படை வசதிகள் கூடக் கிடைக்கவில்லை எனும் போது வேதனை. தேசத்தின் மொத்த மக்கள் தொகையில்  பாதிப் பேருக்குத்தான் தரமான நோய்த்தடுப்பு வசதிகள் கிடைக்கின்றனவாம். வறட்சியால் வாடுகிறோம என்ற வருத்தத்தை விட
, நல்ல மழை வந்தால் வீடுகள் நீரில் முழ்குவதையும், போக்குவரத்து தடைபடுவதையும் நாம் கண்கூடப் பார்க்கும் போது மிகுந்த கவலை. இது எப்படி நடக்கிறது, கையூட்டுப் பெற்றுக்கொண்டு ஏரிகளை பட்டாப் போட்டுக்கொடுத்த பகவானின் செயலால். ஊழல் வாதிகளால் நமது அன்றாட நடவடிக்கை ஒவ்வொன்றும் தொய்வடைகிறது.

கல்வி தொடர்பானவைகளிலும் ஊழல் பெருகியிருக்கிறது.  இதனால் பெருவாரியான கல்விக் கட்டணங்கள்... ஏழை மானவர்கள் பாதிக்கப்படுகின்றனர். பச்சிளம் குழந்தைகளுக்கு தரமான நோய்த்தடுப்புமருந்துகள் சென்று சேர்ந்திருக்கிறதென்றால் அதிலும் பாதிக்கு மேல் இல்லை. அடிப்படை வசதி இல்லாமல் நாடு தேங்கிக் கொண்டிருக்கிறது.  ஆனால், நிதி, நீதி, நிர்வாகம் மூன்றும் ஊழல் பேர்வழிகளின் கைகளில் கட்டுண்டு கிடக்கிறது. இது மாற வேண்டும். இல்லை மாற்ற வேண்டும்.
ஊழல் வளர்ச்சியை, அடிப்படைத் தேவைகளை தடுக்கின்ற காரணி.  ஆகையால் நாம் ஊழலைத் தடுத்திட வேண்டும்.  தேர்தல் வரை காத்திருக்க வேண்டாம். இப்போதிருந்தே நம்மால் முடிந்ததை செய்வோம். அது... கொடுக்கவும் வேண்டாம்! வாங்கவும் வேண்டம்! என்ற முடிவு.

தன் மகன் உணவைத் திருடி உண்டான் எண்பதற்காக ஒரு தாய் தற்கொலை செய்து கொண்டாலாம். தேச நலனையே தன் நலன் என பதவிக்கு, பணிக்கு வந்திருக்கும் ஒரு குறிப்பிட்ட சாராரை (ஊழல் வாதிகளை)  சாகச் சொல்ல வில்லை திருந்தச் சொல்கிறோம். நீங்கள் வருந்தி திருந்தும் போது சுகாதாரம், கல்வி, கட்டமைப்பு போன்றவை வளரும். உமது சொந்த பந்தங்களும் வளமோடு வாழ்வார்கள்.

No comments: