Tuesday, May 24, 2011

எண்டோசல்பானுக்கு முடிவு எப்போ




என்னுடைய சிறுவயதில் எங்கள் கிராமத்திற்கு எக்காலக்ஸ் எண்டோசல்பான் விளம்பர வாகனங்கள்  “மாவீரன் வந்தானே வந்தானே புழு பூச்சிகளை ஒழித்தானே“ என முழக்கமிட்டு வரும்.  இந்த வாகனங்களை பின்தொடர்ந்து சிறுவர்கள் நாங்கள் ஓடுவோம். அவர்கள் தூக்கி எறிகிற துண்டு பிரசுரங்களை ஓடி ஒடி எடுப்போம். வாகனங்களை பின்தொடரந்து ஓடி காயம்பட்டவர்கள் நிறைய பேர்.  வீட்டிற்கு வந்ததும் எங்களது பெற்றோர்கள் ஏன் பின் தொடர்ந்து சென்றீர்கள் என்று வசையோடு பிரம்படியும் தண்டணையாக தருவார்கள்.  வண்டிக்கு பின்னால் சென்ற எங்களுக்கு அன்றே தண்டனை கிடைத்தது.  இந்த மருந்து கம்பெனிகளின் பின்னால் சென்ற எங்களது பெற்றோர்களுக்கு...

வீட்டுச் சாம்பல், வேப்ப எண்ணெய், பிண்ணாக்கு, தழைகள் போன்றவற்றை பூச்சி விரட்டியாய் பயன்படுத்திய எங்களது முன்னோர்களின் முறைகளை விட்டுவிட்டு என் தந்தை தலைமுறைதான் இந்த மருந்து கம்பெனிகளுக்கு காந்தி பணத்தால் கம்பளம் விரித்து வரவேற்று தனதாக்கியது.  ஒரிரு வருடத்திலேயே கடனாளியாகி விவசாயம் செய்யவது கஷடம் நீங்க எல்லாம் நல்லா படிச்சு நல்ல வேலைக்கு போங்க என்று எங்களை மாற்றிவிட்டார்கள்.  ஆனால் அவர்களிடம் மாற்றம் இன்னும் வந்தபாடில்லை.

எண்டோசல்பான் பூச்சிமருந்துக்கு தேச முழுவதும் தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேரள முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் தலைமையில் பெரும் திரளான மக்கள் உண்ணாவிரதப் போரட்டம் சமீபத்தில் நடத்தினர்.  எண்டோசல்பானை முற்றாகத் தடை செய்ய வேண்டும் என்ற குரல் உலகம் முழுவதும் எதிரொலித்து வருகிறது.  இந்த அபாயகரமான பூச்சிக்கொல்லி மருந்துக்கு 63 நாடுகள் ஏற்கெனவே தடைவிதித்துள்ளன. உலக நாடுகள் தடை விதித்துள்ள பூச்சிக்கொல்லி மருந்து அப்படி என்ன செய்கிறது. அந்த எண்டோசல்பான் தான் என்ன?

எண்டோசல்பான் என்பது ஒரு வகையான பூச்சிக்கொல்லி மருந்து. காய்கறிகள், பழங்கள், பருத்தி போன்ற பல்வேறு வகையான செடிகளைத் தாக்கும் பூச்சிகளை அழிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது.  எண்டோசல்பான் பயிர்களை அழிக்கும் பூச்சிகளை மட்டும் அழிக்காது.  அது எல்லா வகையான பூச்சிகளையும் பாதிக்கும், அழிக்கும்.  பட்டாம்பூச்சிகள், மண்புழுக்கள், தேனீக்கள், எறும்புகள் மற்றும் சிலந்திகள் என எல்லா வகையான புழு, பூச்சிகளையும் அழிக்கும்.  எண்டோசல்பான் அளவு அதிகமாகும்போது தவளைகள், பறவைகள், ஊர்வன மற்றும் பாலூட்டிகள் என அனைத்து உயிரினங்களையும் பாதிக்கும்.   இம்மருந்த்தின் அளவு அதிகமானால் உயிரைக் கொல்லும் அளவுக்கு அபாயகரமானது.  கேரள மாநிலத்தில் எண்டோசல்பானால், குரங்குகள், நாய்கள் இறந்து போன செய்திகள் இவ்வுண்மைக்கு ஆதாரம்.  மேலும், ஆடு, மாடுகள் ஈனும் குட்டிகள் கை கால்கள் பின்னிப் பிணைந்தும், குறைபாடுகளுடனும் பிறந்துள்ளன.

மனிதனுக்கும் எண்டோசல்பான் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.  இது நரம்பு மண்டலத்தைப் பாதிக்கின்றது.  முக்கியமாக, கர்ப்பினி பெண்களும், குழந்தைகளும் அதிக பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.  அதிக அளவிலான மற்றும் எண்டோசல்பான் நெடுங்காலமாக நுகர்தல் காரணமாக, மன நல வளர்ச்சியின்மை, மன நல குறைபாடு, நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் நோய்கள், குழந்தைகள் பிறக்கும்போதே குறைபாடுடன் பிறத்தல் போன்ற விளைவுகள் எண்டோசல்பானால் ஏற்படும் என்பதைப் பல ஆதாரங்கள் நிருபீக்கின்றன.  நமது அண்டை மாநிலமான கேரளாவில் சுமார் 250க்கும் மேற்பட்டோர் எண்டோசல்பானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  நம் கண் முன்னே பெண்கள் இளம் வயதிலேயே (பத்துப்பனிரெண்டு வயதில்) பூப்பெய்வதை பார்க்க முடிகிறது.  இதற்கு எண்டோசல்பானும் ஒரு காரணம். ஆண்களுக்கு நேர்மாறாக பாலியல் முதிர்ச்சியடைய நீண்ட நாட்கள் ஆவதாக ஆய்வு முடிவுகள் அறிவிக்கின்றன.

எண்டோசல்பான் மரபணுக்களை மாற்றக்கூடிய வல்லமை கொண்டது என அறிந்தோர் கூறுகின்றனர்.  டெரடோஜென் என சொல்லக்கூடியவை பிறக்கும் குழந்தைகள் குறைபாடுடன், நோயுடன் பிறக்க வைக்கிறது.  இந்த எண்டோசல்பான் குறித்து அறிவியல் முறைப்படி ஆய்ந்து பார்க்க அரசாங்கம் முன்வரவில்லை என்பது கவலைக்குரிய ஒன்று.  இந்த எண்டோசல்பானை பயன்படுத்தும் எங்களது விவசாய குடும்பங்களுக்கு இது தரும் தீமையான விளைவுகளை அவ்வளவு எளிதில் புரியவைக்க முடியவில்லை. அதனால் இவ்வளவு தீமைவிளைக்கும் எண்டோசல்பானை தடைசெய்யுங்கள். எங்கள் விவசாயிகள் மாறிவிடுவார்கள்.

கடுமையான பாதிப்பபை விளைவிக்கும் எண்டோசல்பான் எளிதில் ஆவியாகக் கூடிய பொருள். மிக சுலபமாக காற்றில் கலந்து விடும். எண்டோசல்பான் கலந்த காற்றை சுவாசிக்கக் கூடிய எறுப்பில் தொடங்கி யானை வரை, மனிதர்கள் உட்பட அனைவரும் பாதிக்கப்படுவார்கள்.  இப்பூச்சிக்கொல்லி மருந்து 150 நாட்களுக்கும் மேலாக அழியாமல் இருக்கும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்டுள்ள இடங்களில் மழைபெய்தால், மழை நீரிலும் எண்டோசல்பான் கலந்துவிடும்.  மழைநீர் மக்கள் பயன்படுத்தும் ஆறு, ஏரி, குளம், குட்டை, கடல் என எல்லா இடங்களுக்கும் பாய்ந்து செல்லும்.  இந்நீரைக்குடிக்கும் உயிரினங்கள் எண்டோசல்பானின் உட்செல்லும். எண்டோசல்பான் பூச்சிக்கொல்லியால் இறந்த பூச்சி புழுக்களை பறவைகள் உண்டால் பறவைகளுக்கும் எண்டோசல்பான் போகும்.  அந்தப் பறைவயை மனிதன் சாப்பிட்டால் மனிதனுக்குள்ளும் எண்டோசல்பான் போவான்.  இப்படி இது சங்கிலித் தொடர் போல் சுற்றி சுற்றி வரும்.  அப்போ இதை தடைசெய்ய வேண்டாமா?

இறைவன் எங்கு இருக்கிறான் என்று கேட்டால் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறான் என்பார்கள்.  அது போலத்தான் எண்டோசல்பானும் எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கிறது.  விஞ்ஞானிகளின் ஆராய்ச்சியில் பனி துவர பிரதேசங்களான ஆர்டிக், அண்டார்டிகா முதல் அலாஸகா வரை எண்டோசல்பான் நிறைந்திருக்கிறது.  பதினைந்திற்கும் மேற்பட்ட நாடுகளில் பெண்களின் தாய்ப்பாலை பரிசோதித்துப் பார்க்கையில் எண்டோசல்பான் இருப்பது தெரியவந்துள்ளது.  மனிதனின் இரத்தத்திலும், பறவைகள் ஊர்வன என அனைத்து வகையான உயிரினங்களிலும் சதைகள் மற்றும் இரத்தத்திலும் எண்டோசல்பான் வியாபித்துள்ளது.

கேரளாவில் முத்தளமடா, ஸ்வாக் போன்ற இடங்களில் எண்டோசல்பான் பூச்சிக்கொல்லி மருந்து ஹெலிகாப்டம் மூலம் மாம்பழத் தோட்டங்களில் தெளிக்கப்பட்டது.  அப்பகுதியில் அதிக அளவிலான நோய்கள், சிறுவர், சிறுமியர் மன வளர்ச்சி குறைபாடு, மன நல குறைபாடு, நம்பு மண்டல பாதிப்புகளால் எண்டோசல்பான் பூச்சிக் கொல்லி மருந்து அனைவராலும் கவனம் பெற்றது.  கேரள உயர் நீதி மன்றம் 2005ல் தடை செய்ய உத்தரவிட கேரள அரசாங்கம் தடை  செய்தது.  ஆனால், எண்டோசல்பானுக்கு தமிழகத்தில் தடை இல்லை.  பின்ன என்ன? பால், காய்கறிகள், மாடுகள் நேரிடையாக போக, அரிசியைப் போல கள்ளச் சந்தையில் எண்டோசல்பான் கேரளவிற்கு பேயாய் போகிறது.

2010ம் ஆண்டு ஸ்டாக்ஹோம் பன்னாட்டு ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு நாடுகள் தடை செய்ய ஆதரவு அளித்த போதும் இந்தியா தடை செய்ய இணங்கவில்லை.  எண்டோசல்பானை அதிக அளவில் கொள்முதல் செய்யக்கூடிய நாடுகளில் இந்தியாவும் ஒன்று.  இன்று எண்டோசல்பான் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகிறது.  வளர்ந்த நாடுகள் அவர்கள் உற்பத்தி செய்யும் புதிய வகையான பூச்சிக்கொல்லி மருந்துகளை (லிட்டர் ரூ. 2000 லிருந்து ரூ. 13000 வரை) வாங்க வைப்பதற்காக குறைந்த விலையில் கிடைக்கும் (லிட்டர் ரூ. 286)  எண்டோசல்பானை தடைசெய்யச் சொல்கிறார்கள் என ஒரு சாரார் விளக்கம் தருகின்றனர்.

எண்டோசல்பானால் இந்தியாவில் பாதிப்பு இருப்பது உண்மை.  இரண்டு மாநில முதலமைச்சர்கள் குரல் கொடுத்த போதும் எண்டோசல்பானை தடை செய்ய மத்திய அரசாங்கள் தயங்குவது தான் ஏன் என்று தெரியவில்லை. விரைவாக தடை செய்ய வேண்டும் என்பதுதான் இதயங்களை நேசிக்கும் இயற்கை ஆர்வலர்களின் விருப்பம்.  நமது ஊர் விவசாயிகள் வெளிநாட்டு பூச்சிக்கொல்லிகளை விரட்டி, நமது உள்ளூர் பண்டைய தொழில் நுட்பமான பூச்சி விரட்டிகளை பயன்படுத்தும் போது நாடும் நாமும் நலம் பெறுவோம்.

(2011 மே பசுமைத் தாயகம் சுற்றுச் சூழல் இதழில் வெளிவந்தது)

No comments: