Tuesday, May 3, 2011

கோடையில் கோவிலுக்கு

கோடையில் கோவிலுக்கு


ஏப்ரலில் மாணவர்களுக்கு தேர்வும், தமிழகத்தின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் தேர்தலும் நடைபெற்று முடிய இருக்கிறது. ஏப்ரல் இறுதி தொடங்கி மே இறுதி வரை நமது குழந்தைகளுக்கு விடுமுறையும் வரப்போகிறது. காலை கண் விழிப்பில் தொடங்கி இரவு தூங்கும் வரை குழந்தைகள் என்ன பாடுபடுகிறார்கள். குழந்தைகளின் இயந்திரத்தனமாக வாழ்க்கையிலிருந்து சின்ன விடுதலை வெள்ளையர்கள் நமக்கு விட்டுச் சென்ற இந்த ஏப்ரல் மே மாத விடுமுறை தான்.

குழந்தைப் பருவமும் கோடைகால விடுமுறையும் ''போனால் வராது பொழுதுபோன கிடைக்காது'' என்பதைப் போல அரிதான ஒன்றாகத்தான் இருக்கிறது. இந்த விடுமுறையை எப்படி களி(ழி)ப்பது என்று இருப்பவர்களுக்கு ஒரு அருமையான இடத்தை அறிமுகம் செய்கிறேன். தமிழகத்தில் இருக்கிற சுதேசி நதிகளில் ஜிவநதியாய் ஓடிக்கொண்டிருப்பது தாமிரபரணி மட்டுமே. இந்த நதியோடு உறவாடும் மாவட்டம் திருநெல்வேலி. அல்வாவிற்கு பெயர்பெற்றுத் தந்த திருநெல்வேலியைச் சுற்றி சுற்றிவர ஏரளாமான பகுதி தாரளமாக இருக்கிறது. அணைகள், அருவிகள், ஆறுகள், மேற்குதொடர்ச்சி மலைகள் இயற்கை எழிலை கண்களுக்குத் தர, ஆலயங்கள் பல அருளைத் தருகின்றன.


பலரும் அறிந்திட்ட பாபநாசம் பானர்தீர்த்தம், அகத்தியர் அருவி, குற்றாலத்திற்கு பெருமை சேர்க்கும் பல அருவிகள், தாமிரபரணி அணை, மணிமுத்தாறு அணை, தென்காசி, நெல்லையப்பர் இப்படி சொல்லிக் கொண்டே போக பல இடங்கள். இவைகளில் இன்னொரு இடம் திருப்புடைமருதூர். பெயரிலேயே மரியாதை கொண்ட இவ்வூர் திருநெல்வேலியில் இருந்து சுமார் 38 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. சேரன்மாதேவி மற்றும் அம்பாசமுத்திரத்திலிருந்து பேருந்து வசதி உள்ளது. வாகனங்களில் வருவோர் திருநெல்வேலியிலிருந்து பாபநாசம் சாலையில் வீரவநல்லூர் வந்து, அங்கிருந்து ஐந்து கிலோமீட்டர் வடக்கு நோக்கி வந்தால் சிவபெருமான் சுயம்புவாய் அவதரித்துள்ள திருப்புடைமருதூருக்கு வரலாம். இங்கிருந்து மூக்கூடலும் மூன்று நான்கு கிலோ மீட்டர் தான்.

அப்படி என்ன தான் இருக்கு திருப்புடைமருதூரில் என்ற கேள்வி எழும்? நியாயம் தான். இங்குள்ள கோவிலின் தல வரலாறு பார்ப்போம். ஒரு சமயம் சிவனிடம் தேவாதி தேவர்கள் அனைவரும் காசிக்கு ஒப்பான தலத்தைக் காட்டுமாறு வேண்டினர். அவர்களின் வேண்டுதலை ஏற்ற சிவன், பிரம்மதண்டத்தை தரையில் இடும்படிக் கூறினார். அதன்படி, அவர்கள் பிரம்மதண்டததை இடவே, அது தாமிரபரணி ஆற்றை அடைந்து திருப்புடைமருதூரில் தற்போது தலம் வீற்றிருக்கும் பகுதிக்கு அருகே கரையில் ஏறி நின்றது. பிரம்மதண்டம் நின்ற இடமே காசிக்கு ஒப்பான தலம் என சிவன் கூறவே, இவ்விடத்திற்கு வந்த தேவர்கள் பிரம்மதண்டத்தை பூஜை செய்து சிவனது அருளைப் பெற்றனர். பிற்காலத்தில், இப்பகுதியை வீரமார்த்தாண்ட மன்னர் ஆட்சி செய்து வந்த போது மருதமரங்கள் நிறைந்த வனமாக இருந்த இங்கு வேட்டைக்கு வந்தார். மான் ஒன்றினை கண்ட மன்னன் அதனை தனது அம்பினால் வீழ்த்தினார். அம்பினால் காயம்பட்ட மான் அங்கிருந்து தப்பி ஓடி ஓர் மருதமரத்தின் பொந்திற்குள் சென்று மறைந்தது. மானை மீட்க அம்மருதமரத்தை வெட்டும்படி மன்னர் உத்தரவிட்டார். அதன்படி, சேவகர்கள் கோடரியால் மரத்தை வெட்டவே அவ்விடத்திலிருந்து ரத்தம் பீறிட்டது. பின் மன்னர் அவ்விடத்தில் பார்த்தபோது தலையில் கோடரியால் வெட்டுப்பட்ட நிலையில் சிவலிங்கம் இருந்தது. மான் வடிவில் வந்து அருள்புரிந்தது சிவன்தான் என அசரீரி கேட்கப்பெற மன்னர், அவரது உத்தரவுப்படி இவ்விடத்தில் ஆலயம் எழுப்பி வழிபட்டார். ஆக இத்தலம் அமைக்ப்பெற்று சுமார் ஆயிரம் ஆண்டுகளாகப் போகிறது.


இத்தலத்தில் இன்னொரு சிறப்பும் உள்ளது. ஒரு முறை சிவபக்தரான கரூவூர் சித்தர் அருள்புரியும் சிவனை தரிசிக்க வந்தார். அவர் தாமிரபரணியின் வடகரைக்கு வந்தபோது, ஆற்றில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், ஆற்றைக்கடக்க முடியாத அவர், அக்கரையில் இருந்து கொண்டே தென்கரையில் மலர்கள் பூத்துக்குலுங்கிய மருதமரங்கள் நிறைந்த வனத்தின் மையத்தில் வீற்றிருந்த சிவபெருமானை நோக்கி ''நாறும் பூவின் நடுவே நிற்பவனே நினை தரிசிக்க எனக்கு அருள்புரிவாயோ'' என மனமுருகி வேண்டி பாடினார். அவரது பாடலில் மயங்கிய சிவன், தனது இடச்செவியில் கைவைத்து ஒரு புறம் சாய்வாக திரும்பி ரசித்துக் கேட்டார். பின்பு தன்னை நினைத்து ஆற்றைக்கடக்கும் படி கருவூர் சித்தரிடம் சிவன் கூறவே, அதன் படி ஆற்றைக் கடந்த கரூவூரார் அவரை வணங்கி அருள் பெற்றார். இவ்வாறு கருவூர் சித்தரின் பாடலை செவிசாய்த்து கேட்டதால் இங்கு சிவலிங்கம் இடப்புறம் சாய்வாக திரும்பிய நிலையில் அருள்பாலிக்கிறார்.


இத்தலத்தில் அருள்புரியும் சிவபெருமான், தலையில் வெட்டுப்பட்ட கோடரியின் தடம், மார்பில், மானின் மீது பாய்ந்த அம்பு பட்ட தடத்துடன் காட்சி தருகிறார். காயம்பட்ட சுயம்புமூர்த்தி என்பதால் அவரது காயத்தை ஆற்றிடும் பொருட்டு சந்தனாதி தைலம் மட்டுமே பூசி பூஜை செய்யப்படுகிறது. சுவாமிக்கு வலப்புறம் தனிச்சன்னதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் கோமதியம்மாள், கோமாள் மலையின் கோமதி நதியில் இருக்கறி£ள் என அசரீரி கேட்கப்பெற்று அதன்படி அந்நதியில் இருந்து எடுக்கப்பட்டு பிரதிஷடை செய்யப்பட்டவளாக ருத்ராட்சை மேனியை உடையவளாக பொலிவுற அருட்காட்சி தருகிறாள். இத்தலம் இந்திரன் இந்திராணியுடன் இங்கு வந்து தாமிரபரணி ஆற்றின் கரையில் சுரேந்திரமோட்ச தீர்த்தத்தில் நீராடி தவம் செய்து சிவனை வணங்கி தோஷசம் நீங்கப்பெற்றதாகவும் கூறப்படும்.

இத்தலத்தின் மரம் மருதமரம். இத்திருத்தலத்திற்கு இன்னொரு தல வரலாறு கூறப்படுகிறது. நீதி நெறி சிறக்க வாழ்ந்த தர்ம சக்கரவர்த்தியான ஆதிமனு, பூவுலிலுள்ள சிவத் தலங்களை தரிசிக்க ஆவலுற்றார். அதற்கு வழிகாட்ட குறுமுனியான அகத்தியரை தரிசிக்க பொதிகை மலை சென்றார். மன்னனுக்கு தாமிரபரணி மகாத்மியத்தை கூறி உள்ளம் குளிரச் செய்தார் அகத்தியர். அதைக் கேட்ட ஆதிமனு, அந்த நதிக் கரையிலுள்ள சிவத் தலைங்களை கண்ணாரக் கண்டு கொண்டே வந்தார். திருப்புடைமருதூரை அடைந்தார். தேவேந்திரம் தன் பாவம் நீங்க, அங்கே மருத மரமாக தவம் செய்யும் கோலம் பார்த்து மகிழ்ந்தார். தேவேந்திரன் தன் பாவம் நீங்க, அங்கே மருத மரமாக மாறி தவம் செய்யும் கோலம் பார்த்து மகிழ்ந்தார். தேவேந்திரன் தவத்திற்கு இணங்கி சிவபெருமான், மருதமரத்தினடியில் லிங்க வடிவினனாகத் தோன்றியிருப்பதைப் பார்த்து ஆச்சரியமுற்றார். சரஸவதி, லட்சுமி, பூமாதேவி ஆகிய முப்பெரும் தேவியரும் ஈசனை ஆராதிக்கும் அழகைக் கண்டார். தமக்கும் இந்தப் பாக்கியம் கிடைக்குமோ என்று ஏங்கிய ஆதிமனு, மருதமரத்திற்கு அருகில் ஓடினார். ஆனால், தேவியர்கள் மருத மரத்தினுள் மறைந்தனர். அவர் உள்ளம் மருகியது. ஈசனை காண வந்த எனக்கு இதென்ன சோதனை! தன்னுயிர் நீத்தாவது அந்த பாக்கியம் அடையத் துணிந்த அவர் இடுப்பிலிருந்து வாளை உருவி தன் சிரத்தை கொய்துகொள்ளப் போனார். ஏதோ ஒரு சக்தி சிரத்தை நோக்கி நகர்ந்து வாளை திசை திருப்ப, திசை மாறிய வாள் மருத மரத்திற்குள் இறங்கியது. மரத்திலிருந்து சட்டென்று குருதி ஊற்றாக பெருகியது. ஆதிமனு அதிர்ச்சியடைந்தார். மேலும் பாவம் செய்கிறோமே என வருந்தி மறுபடியும் தலையை வெட்ட முயன்றார். அப்போது 'நிறுத்து' என கம்பீரக் குரல் கேட்டது. குரல் வந்த திசையைப் உற்றுப்பார்க்க, மாபெரும் விருட்சத்தின் மத்தியில் சகல தேவியர்களுடன் மருதூரான் திருக்காட்சி அளித்தார். கண்டவர் பிரமித்தார். மருதகாட்டிற்கும் தாமிரபரணிக்கும் அருகே அருங்கோயில் எழுப்ப அனுமதி கோர, சிவனும் சுயம்புவாக நான் பொங்கிய இடத்தில் கோயில் அமைத்து தொழுது நில் எனறார்.


ஆ யிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த இக்கோவிலை வீரபாண்டியனில் தொடங்கி ராஜராஜன், மார்த்தாண்டவர்மன், விஜயநகர அரசர்கள், நாயக்கர்கள், பிற்காலப் பாண்டியர்கள் மற்றும் மற்றவர்களும் கட்டமைப்பில் பங்கெடுத்துள்ளனர். இக்கோவிலின் சிவன் சிலை, கோமதியம்மாள் சிலை சிறப்பு வாய்ந்தது. சிவன் சாய்ந்த நிலையில் இருப்பது காண்போரை கவர்ந்திழுக்கும். 63 நாயன்மார்களுக்கும் சிலை உள்ளது. மர வேலைப்பாடு, கல் வேலைப்பாடு மற்றும் சுவர் ஓவியங்கள் பழமையானது. 400 ஆண்டுகள் பழமையான வண்ண சுவர் ஓவியங்கள் அன்றைய மக்களின் பண்பாடு, தொழில், வாழ்க்கை முறை போர் போன்றவற்றை சித்தரிக்கின்றன. இந்த ஓவியங்கள் பண்டைய தொழில்நுட்பமான கடுக்காய், காய்கறிகள் முட்டை போன்றவற்றை கொண்டு உருவாக்கப்பட்டதாகும். நாம் நம்ப முடியாத அளவிற்கு சிறப்பு வாய்ந்த மர வேலைப்பாடுகளும், 12ம் நூற்றாண்டு கல் வேலைப்பாடுகளும் பிரமிக்க வைக்கும். கோவிலைச் சுற்றி பத்து மண்டபங்கள் (மடங்கள்) உள்ளன. இவை அனைத்தும் இரு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்டவையாகும்.


திருப்புடைமருதூரில் தாமிரபரணி நதியுடன் கடனா நதி சங்கமிக்கிறது. இங்கு பத்து புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன. தாமிரபரணி ஆற்றங்கரையில் ஆதிமனுவிற்கு மரப்புடையில் இறைவன் காட்சியளித்த இடம் உள்ளது. அந்த இடத்தில் உடைந்து மருதமரப்புடை உள்ளது. அதை கோயில் நிர்வாகம் பாதுகாத்து வருகிறது. கோயிலின் முன்புறம் முழுமையடையாத ஏழு அடுக்கு பிரமாண்டமான கோபுரம். உள்ளே நுழைந்தவுடன் ஐந்தடுக்கு கொண்ட அடுத்த கோபுரம். அந்த கோபுரத்தின் உள்ளே கோயில் தல புராணங்கள் மற்றும் பல்வேறு கருத்துகளைச் சொல்லும் வண்ண ஓவியங்களும், மரச்சிற்பங்களும் காணப்பாடுகின்றன. தாமிரபரணி ஆற்றங்கரையில் கோவிலுக்கு அருகில் ஆண்கள் பெண்களுக்கென இரண்டு படித்துறைகள் உள்ளன. அருகே உடைமாற்றும் அறைகளும் உள்ளது.


இந்தக் கோயிலின் சிறப்பம்சம் மாசி மாதம் முழுவதும் சூரிய ஒளி சுவாமியின் சிரசில் பரவுவதுதான். குறிப்பாக மகா சிவராத்திரி அன்று காலை 6.15க்கு மேல் 7 மணிக்குள் இந்த மாபெரும் அதிசயம் நிகழ்கிறது. இதைக்காண பக்தர்கள் தாமிரபரணியில் நீராடி இறைவனது சந்நதியில் காத்துக்கிடப்பர். தீராத நோய் உள்ளவர்கள் சுவாமிக்கும், அம்பாளுக்கும் படி பாயசம் செய்து ஏழைகளுக்கு வழங்குகிறார்கள். அதன்படி நோயிலிருந்தும் நிவாரணம் பெறுகின்றனர். சுவாமியின் அருகிலேயே அம்பாள் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறாள். சுகப்பிரசவம் நடக்க வேண்டுமென்ற பக்தர்கள் கருப்பு வளையலை காணிக்கையாக கொடுத்து பயன்பெறுகின்றனர். குழந்தை பாக்கியம் வேண்டு வருபவர்கள் அநேகம். எல்லாவற்றிற்கும் மேலாக மரணம் பயம் தீர்க்கும் தலமாகவும் திருப்புடைமருதூர் திகழ்கிறது. மீண்டும் மீண்டம் பிறக்கும் சிறை உடலை நீக்கி பேரின்ப பெருவீடு அருள்கிறார் புடார்சுனர் எனும் புடைமருதீசர்.

இத்திருத்தலத்திற்கு வரவேண்டும் என்ற எண்ணம் உங்களுக்குள் எழுந்திருக்கும். நகரங்களில் வசிப்போர் அவசியம் வந்து செல்லவேண்டும். இயற்கை கொஞ்சும் இத்திருத்தலம் கிராமத்தில் அமைந்திருப்பது இன்னொரு முக்கியமான அம்சம் ஆகும். கிராமங்களில் உள்ள வாழ்க்கை முறை அவர்களது பண்பாடு போன்றவைகளை நீங்கள் அருகில் இருந்து பார்ப்பதற்கு நல்ல வாய்ப்பு. பறவைகள், வீட்டு விலங்குகள், விவசாயம் இவைகளை கண்கொண்டு கண்டு திளைத்திருக்கலாம். இத்திருத்தலத்திற்கு வந்து செல்வதால் கிராமம் ஒரு படி வளரும்.



நாறும்பூநாதனார் கோவிலுக்கு அருகில் ஊராட்சியின் சுற்றுலா தங்குமிடம் உள்ளது. நன்கு வசதியான ஐந்து அறைகள் உள்ளன. இவைகளில் ஒரே நேரத்தில் இருபது நபர்கள் தங்கலாம். அருகில் உள்ள அம்பாசமுத்திரத்தில்(12 கிலோ மீட்டர்) தங்கும் வசதி உள்ளது. பாபநாசம் செல்லும் சாலையில் உள்ள வீரவநல்லூரில் இருந்து போதிய பேருந்து வசதிகள் உள்ளன. வீரவநல்லூரில் இருந்து தரமான கிராமச் சாலை உள்ளது. வாகனங்களில் வருவோர் தைரியாக வந்து செல்லலாம்.


தாமிரபரணியில் நீராடி, நாறும்பூநாதனை தரிசித்து, கோமதி அம்பாளை வழிபாட்டு, கிராமத்து மண் மனத்தை உள்வாங்கிட கோடையில் வாருங்கள். பறவைகளைப் பார்த்து, பாசமுள்ள கிராமத்து மனிதர்களிடம் உறவாடி, இயற்கையான காற்றினை நுகர்ந்திட இன்றே திட்டமிடுங்கள் திருப்புடைமருதூர் சென்றிட. கிராமத்து பொருளாதாரம் சுற்றுலா வகையிலும் உயர்ந்திடும். நமக்கு நல்ல அனுபவம் கிடைத்திடும்.



1 comment:

ஜானகிராமன் said...

கண்ணன். திருப்புடைமருதுர் முக்கியமான சுற்றுலா தளம் தான். மறுப்பில்லை. தங்களின் கட்டுரை, அளவுக்கும் அதிகமாக புராண கால செவி வழித் தகவல்களை உள்ளடக்கியுள்ளது. இதனை நடுநிலையோடு கொஞ்சம் குறைத்துக்கொண்டு, அந்த ஊரின் முக்கிய சிறப்புகளான, 1.பண்டைய கால முரல் ஓவியங்கள், 2.சிற்பக்கலைகள், 3.படித்துறை, 4.பறவைகள் சரணாலயம், 5.அடர்த்தியான தாரவ/வனவளம், 6.உள்ளுரில் கிடைக்கும் பாரம்பரிய உணவு வகைகள் போன்றவற்றை சமவிகிதத்தில் தொகுத்து, கூடுதல் புகைப்படங்களுடன் எழுதியிருந்தால் இன்னும் சுவையாக இருந்திருக்கும்.