Saturday, April 28, 2012

வெற்றி எட்டும் தூரத்தில்…. பற்றிப் பிடிப்போம்.... பத்தாம் வகுப்பில்....




தேர்வு என்பது தேசிங்கு ராஜன் குதிரை அதை அடக்கிவிட்டால் அது உனக்கு பொதி சுமக்கும் கழுதை, என்று வைரமுத்து, சிற்பியே உன்னை செதுக்குகிறேன் என்ற நூலில் தேர்வு“ குறித்து குறிப்பிட்டிருப்பார். தேர்வு என்ற பதத்தை பரிட்சை என்று சொல்லியே பழக்கபட்டிருக்கிறோம்.  பத்தாம் வகுப்பிற்கான பரிட்சை தொடங்கவிருக்கிறது. பரிட்சை என்றவுடன் பலருக்கு பயம் பலவாறு வெளிப்படுவதுண்டு.  பயத்தை பயப்பட வைக்கவேண்டும்.  பத்தாம் வகுப்புத் தேர்வை பசிபிக் பெருங்கடல் என்று நினைக்க வேண்டாம்.  சுலபத்தில் கடந்துவிடக்கூடிய தமிழக நதிதான் இந்தத் தேர்வு.  ஆனால், வாழ்க்கையின் அடுத்த தளத்தை இறுதிசெய்யக்கூடிய முக்கியமான தேர்வு.  அதனால்தான் பலர் அக்கறை என்ற பெயரில் பலவாறு பயத்தை ஏற்படுத்திவிடுகின்றனர்.  அந்தப் பயம் அவசியமில்லை.

இணையம் வருவதற்கு முன்பு பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மாலை இதழ்களில் வெளிவரும்.  அன்றைய தினத்தில் மாலை இதழ்கள் வாங்குவதில் போட்டா போட்டி நடக்கும். மாலை இதழில் நமது தேர்வு எண்ணை பார்ப்பதற்கே தனியாக படிக்க வேண்டும்.  அப்படிப் பார்த்து, நமது எண் இருந்தது என்றால், குளித்து கோவிலுக்குப் போய், தாய் தந்தையிடம் ஆசி வாங்கி, சுற்றம் அனைவருக்கும் இனிப்பு கொடுத்து மகிழ்ந்த காலம்.  அடுத்த நாள் காலை இதழில் புகைப்படத்தோடு பெயர் வந்தால் சஞ்சீவி மலையை இடது கையால் தூக்கிய மகிழ்ச்சியில் வீதி வீதியாக வலம் வருவதுண்டு.   பெரிய சந்தோசத்தை தந்த தேர்வு முடிவுகள்தான் வாழ்க்கைப் பாதைக்கான வழியாவதுண்டு. 

‘’பட்டம் வாங்கிய இஞ்சினியர் (மின்சாரம்) பீஸ் போயிருச்சுன்னு சொல்லும், பத்தாம் வகுப்பு பெயிலானது பீஸ் போடும்’’ என்று சொல்வார்கள். பத்தாம் வகுப்பின் வாகை தான் அடுத்தடுத்த வாகைக்கு கடவுச்சீட்டு.  பத்தாம் வகுப்பு பவுண்டேசன்... இப்படி நானும் பயப்பட வைப்பதாக நினைக்க வேண்டாம்.  தேர்வுக்கு பத்துநாள் தான் இருக்கிறது. இப்பப் போய் நீங்க என்ன சொல்லி! நாங்க என்ன கேட்க! என சலித்துக்கொள்ள வேண்டாம்.  பத்துமணி நேரத்திற்கு முந்திய முயற்சிகள் கூட வெற்றியைத் தரும்.

தேர்வு நேரத்தில் நம்மை தயார்படுத்திக்கொள்வது மிகவும் முக்கியம்.  நீந்த பழகுவதற்கு முன்பு ஒரு வித பயமிருக்கும். ஒரு முறை விழுந்து எழுந்தால் பயம் ஓடிப்போகும். ஆனால், தேர்வில் ஒரு முறை  விழுந்தோம் என்றால் எழுவதற்கு ஆகும் காலம் அதிகம்.  ஆகையால், தேர்வு ஒன்றும் ஏழு கடல், ஏழு மலைக்கு அப்பால், தீயைத் தாண்டி, தீவுக்குள் இருக்கிற விசயமில்லை. நமது ஐந்து புத்தகத்திற்குள் மட்டும் அடங்கிக் கிடக்கிற அச்சு அறிவுக் கோர்ப்பு.  தேர்வு ஆச்சரியப்படுகிற ஒன்றில்லை, எளிதில் ஆக்கக் கூடிய ஒன்றுதான் என்று மனதுக்கு சொல்லி வையுங்கள். மனமும் முளையும் ஒருசேர ஒன்றிணைந்து பணியாற்றும் போது வாகை தேடி வரும்.

வெற்றி நிச்சயம். தோல்வி பயம் தொற்றிக் கொள்ளாமல் இருக்க படிக்க வேண்டியவற்றை சிறு சிறு பகுதிகளாக்கி படியுங்கள். மொபைல் போனுக்கு குட்பை சொல்லுங்கள்.  இத்தருணங்களில் இணையத்தோடு இணைய வேண்டாம்.  தொலைக்காட்சி பார்ப்பதை தவிர்த்து விடுங்கள்.  படித்து இளைப்பாருகிற வேளையில் இதமான இசை கேளுங்கள். சக நண்பர்களுடன் கருத்தான விசயங்களில் கலந்துரையாடுங்கள்.

“உணவு உறக்கம் உற்சாகம்“ இந்த மூன்று “உ“க்களும் பரிட்சை நேரத்தில் மிகவும் முக்கியமானவை.  மெத்த படிக்கிறேன் பேர்வழி என்று உணவை மறந்து விட வேண்டாம்.  உயிர் வளர்க்கும் உணவு மூன்று வேளையும் அவசியம் வேண்டும்.  இடையிடையே அளவாய் சிற்றுண்டி எடுத்துக்கொள்ளுங்கள்.  இரவு நீண்ட நேரம் கண் விழிக்க வேண்டாம்.  அதிகாலை எழுந்து படியுங்கள்.  பாரதி சொன்னது போல காலை எழுந்தவுடன் படிப்பு பின்பு... மாலை முழுவதும் விளையாட்டு என்று வழக்கப்படுத்திக்கொள்ளுங்கள்.  பரிட்சை நேரத்தில் விளையாட வேண்டாம்.  கொஞ்ச நேரம் நடந்து போய் வாருங்கள். உணவு உறக்கம் சீராக இருக்கும் போது உற்சாகம் தானே பிறக்கும்.  உற்சாகத்தோடு செய்கிற காரியங்கள் வெற்றியைத் தரும்.

பழைய வினாத்தாள்களின் வினாக்களுக்கு விடையை எழுதிப் பாருங்கள்.  நீங்களே விடைத்தாளை திருத்துங்கள். எங்கு தவறு செய்துள்ளீர்கள் என்பதை கண்டுணருங்கள். பெற்றோர்கள் “நீ இப்படியே படித்தால் நிறைய மதிப்பெண் பெறுவாய்“ என ஊக்கமூட்டுங்கள்.  இவையெல்லாம் தேர்வுக்கு முன்னதாக... தேர்வின் போது...

தேர்வுக்குச் செல்லும் முன் தேர்வுக்குத் தேவையான எல்லா பொருளும் இருப்பதை நீங்களே உறுதி செய்யுங்கள். தேர்வு மையத்திற்கு சென்று ஏதாவது பொருள் இல்லை என்று பதறுவது உங்களுடைய அன்றைய செயல்பாட்டையே பாதிக்கும்.  எனவே, ஒவ்வொரு பொருளையும் தேவை வாரியாக எடுத்து சீராக வைத்துக்கொள்ள வேண்டும். தேர்வு தொடங்கும் பத்துநிமிடத்திற்கு முன் படிப்பதை நிறுத்திவிடுவது நல்லது.  கடைசி நேரத்தில் சங்கரா பாடுவதால் எந்த பலனும் கிட்டப் போவதில்லை.  ஆகையால், பரிட்சைக்கு முந்தைய பத்து நிமிடத்தை அமைதிப்படுத்துங்கள்.  வாய்ப்பிருந்தால் ஒரு இடத்தில் அமர்ந்து மூச்சுப் பயிற்சி மேற்கொள்ளுங்கள்.  இது உங்களுக்கு மேலும் சக்தியைக் கொடுக்கும். 

தேர்வு காலங்களில் உடல் நிலை சரியாக இருக்க தேவையான அளவு தண்ணீர் பருகுங்கள்.  காலைக்கடனை காலையில் நிம்மதியாக முடித்துக்கொள்ளப் பழகிக் கொள்ளுங்கள்.  தேர்வு நடைபெறும் போது சிறுநீர், மலம் கழிக்க அனுமதி கிடைத்தாலும் உங்களது நேரத்தை வீணடிக்கும்.  எனவே, தேர்வரங்கிற்கு போவதற்கு முன்பு சிறுநீர் கழித்துவிட்டு செல்லுங்கள்.  காரமான உணவு வகைகளை சேர்த்துக்கொள்ள வேண்டாம்.  கடைகளில் எதையும் வாங்கித் திண்ண வேண்டாம்.  வீட்டில் தயாரித்த உப்பு, ஒரப்பு குறைவான பண்டங்களையே உட்கொள்வது சாலச் சிறந்தது.

உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பத்து நிமிடத்தில் வினாத்தாளை புரிந்து படிக்கவும். பின்பு உங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ளுங்கள். நன்றாகத் தெரிந்த வினாக்கள், ஒரளவு தெரிந்த வினாக்கள், மெமரி தேடிக்கொண்டிருக்கிற வினாக்கள் என வகைப்படுத்திக் கொள்ளுங்கள்.  விடைத்தாளில் தேர்வு எண் போன்ற விபரங்களை தெளிவாக எழுதிவிட்டு, விடையை எழுதுங்கள்.  நன்கு விடை தெரிந்தவற்றிற்கு பதில் தந்துவிட்டு, அடுத்துடுத்து மற்றவைகளுக்கு எழுதுங்கள்.  இந்தக் கேள்விக்கு விடை தெரியவில்லையே என கலங்க வேண்டாம்.   இருக்கிற நேரத்தில் சிறப்பாக செய்திட முனைப்போடு செயல்படுங்கள். 

தேர்வரங்கில் வேடிக்கை பார்க்க வேண்டாம்.  அவன் என்ன செய்கிறான், இவன் என்ன செய்கிறான், இந்தக் கேள்விக்கு என்ன விடை என சைகை காண்பிப்பது போன்ற செயல்களை விட்டுவிடுங்கள்.  மற்வர்களை பார்க்க முற்படும்போது நீங்கள் பலவீணமடைவீர்கள்.  அது உங்களது வெற்றியை பாதிக்கும்.  ஆகையால், தெரிந்ததை தெளிவாக எழுதுங்கள்.  தேர்வு முடிந்த பின், எழுதி முடித்த தேர்வு குறித்து விவாதிக்க வேண்டாம். அடுத்த தேர்வுக்கு தயாராகவும். 

தேர்வு எழுதிவிட்டு சிறிய இளைப்பாறுதல் மேற்கொள்ளுங்கள்.  பின்னர் அடுத்த பாடத்தை படிக்கவும். படம் வரைவது, பாகங்கள் குறிப்பது போன்றவற்றில் கவனம் செலுத்துங்கள்.  அவை உங்களுக்கு முழுமையான மதிப்பெண்ணை பெற்றுத் தரும்.  அதே போன்று கணக்குகள் சரியாக செய்யும் போது முழுமையான மதிப்பெண்ணை கொடுக்கும்.  படம் வரைவது நம் கைக்கு வரவில்லை என்றால் அதில் நேரத்ததை செலவிட வேண்டாம்.  எது நமக்கு எளிதோ அதனை முதலில் செய்யுங்கள்.

தேர்வு நேரத்தை பிரித்து திட்டமிட்டு கையாளவும்.  நன்றாகத் தெரிந்த வினாவிற்கு விடை எழுதுகிறேன் என பக்கம் பக்கமாக எழுத வேண்டாம்.  பக்கத்திற்கு மதிப்பெண் தருவதில்லை.... பதிலுக்குத்தான் மதிப்பெண் தருகிறார்கள்.  வினாவிற்குத் தேவையான அளவு மட்டுமே விடை எழுதுங்கள்.  கை எழுத்தை தெளிவாக எழுதுங்கள்.  கூட்டல் எழுத்தில் எழுதி மதிப்பீட்டாளை குழப்ப வேண்டாம். 

தேர்வில் வெற்றி பெற நேர்மையான முறைகளையே பின்பற்றுங்கள்.  வாழ்வில் முன்னேறுவீர்கள்.  பயம் நீங்கி நூல்நயம் ஓங்கி நடை போடுங்கள்....

No comments: